
உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் சரி, எல்லோராலும் ஒரே மாதிரியாகக் கடைபிடிக்கப்படுவது ஆங்கில மாத நாட்காட்டியைத்தான். நம் இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக நாட்காட்டிகள் இருக்கின்றன. மாத ஆரம்பமும் முடிவும் எல்லா நாட்காட்டிகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஆனால், மொத்த இந்தியாவிலும் சரி, உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் கல்லூரிகள், பள்ளிகள், அலுவலகங்கள் என அனைத்து இடத்திலும் இந்த ஆங்கில நாட்காட்டியைத்தான் கடைபிடிக்கிறார்கள்.
நாம் கல்யாண பத்திரிகை அல்லது ஏதாவது அழைப்பிதழ் அடிக்கும்போதோ நம்முடைய தமிழ் நாளை bracketகுள்தான் போடுவோம். இந்த ஆங்கில மாத நாளைத்தான் பெரிய எழுத்தில் போடுவோம். அதைவிட, பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் சான்றிதழில் கூட இதுதான் குறிக்கப்பட்டிருக்கும். இப்படி எல்லா நாட்டிலும் பின்பற்றக்கூடிய இந்த ஆங்கில மாதங்களின் பெயருக்குப் பின்னாலிருக்கும் வரலாறை இப்பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி: ஜனவரி மாதம் தொடக்கம் மற்றும் முடிவுக்குரிய ரோமானிய கடவுளான ஜானஸின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஜானஸ் கதவுகள் மற்றும் வாயில்களுக்கு தலைமை தாங்குகிறார். இவர் பெரும்பாலும் இரண்டு முகங்களுடன் சித்தரிக்கப்படுகிறார். ஒன்று முன்னோக்கிப் பார்க்கிறது, மற்றொன்று பின்னோக்கிப் பார்க்கிறது. குறிப்பாக, ஜனவரி மாதம் நாட்காட்டியில் சேர்க்கப்பட்ட கடைசி மாதமாகும். முதன் முதலில் ஆங்கில நாட்காட்டியானது பத்து மாதங்களைக் கொண்டிருந்தது. மேலும், மார்ச் மாதத்தில் இருந்துதான் தொடங்கியது.
பிப்ரவரி: பிப்ரவரி மாதம் பதினைந்தாம் தேதி நடைபெற்ற ரோமானிய சுத்திகரிப்பு விழாவின் பெயரால் பிப்ரவரி என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி என்றால் ‘சுத்திகரிப்பு’ என்று பொருள். பிப்ரவரி மாதமும் ஒரு காலத்தில் ஆண்டின் கடைசி மாதமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு இந்தப் பெயரை வைத்தனர். இன்றைய புத்தாண்டு தீர்மானங்களைப் போலவே, ‘சுத்திகரிப்பு மாதம்’ என்பது பழையனவற்றுக்கு விடை கொடுத்து புதியதை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு நல்ல மாதமாகக் கருதப்படுகிறது.
மார்ச்: மார்ச் மாதம் ரோமானிய போர் கடவுளான செவ்வாய் கிரகத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. பண்டைய ரோமில், பழைய மற்றும் புத்தாண்டுக்கு இடையிலான கொண்டாட்டத்தின்போது போர் நிறுத்தப்பட்டது. எனவேதான் முதன் முதலில் மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது.
ஏப்ரல்: ஏப்ரல் என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சில பல்வேறான கோட்பாடுகள் உள்ளன. ஏப்ரல் என்பது லத்தீன் வார்த்தையான apero - அதாவது ‘இரண்டாவதிலிருந்து’ பெறப்பட்டது என்று சிலர் நம்புகிறார்கள். ஏனெனில், அது ஒரு காலத்தில் ஆண்டின் இரண்டாவது மாதமாக இருந்தது. மற்றொரு தரப்பினர் இது இன்னொரு லத்தீன் வார்த்தையான aperireலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள், இதன் பொருள் ‘திறப்பது’ மற்றும் வசந்த காலத்தில் மொட்டுகள் மற்றும் பூக்கள் பூப்பதைக் குறிக்கிறது. இன்னும் சிலர் ஏப்ரல் என்பது கிரேக்க காதல், அழகு மற்றும் இனப்பெருக்க தெய்வமான அப்ரோடைட்டின் பெயரால் அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
மே: மே மாதம் கிரேக்க தெய்வமான மியாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவளுக்கு ஜீயஸ் கடவுளுடன் ஹெர்ம்ஸ் என்ற மகன் இருந்தான். அவள் ஒரு பூமி தெய்வமாகவும் வளர்ச்சியின் தெய்வமாகவும் இருந்தாள். இந்த தெய்வீகம் வசந்த மாதத்துடனான அவளுடைய தொடர்பை விளக்குகிறது.
ஜூன்: ஜூன் மாதம் வியாழனின் மனைவியும் கடவுள்களின் ராணியுமான ஜூனோவின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஜூனோ பிரசவம் மற்றும் திருமணத்தின் பாதுகாவலராக இருந்தார். ஆகவே, இந்த மாதமானது நீண்ட காலமாக திருமணங்களுக்கு மிகவும் பிரபலமான மாதமாக இருந்து வருகிறது.
ஜூலை: ஜூலை மாதம் ஜூலியஸ் சீசரின் பிறந்த மாதமாகும். கி.மு. 44ல் அவர் இறந்ததைத் தொடர்ந்து அந்த மாதம் அவரது நினைவாக மறுபெயரிடப்பட்டது. முன்னதாக, ஜூலை ‘குயின்டிலிஸ்’ என்று அழைக்கப்பட்டது. அதாவது, லத்தீன் மொழியில் ‘ஐந்தாவது’ என்று பொருள். மார்ச் மாதத்தில் தொடங்கும் காலண்டர் ஆண்டுடன், ஜூலை ஐந்தாவது மாதம் என்பதைக் குறிக்கிறது. ரோமானிய அல்லது கிரேக்க தெய்வத்திற்கு பதிலாக, ஒரு உண்மையான நபரின் பெயரிடப்பட்ட முதல் மாதமும் ஜூலையே ஆகும்.
ஆகஸ்ட்: ஆகஸ்ட் என்பது வரலாற்று நபரான அகஸ்டஸ் சீசரின் பெயரால் உருவாக்கப்பட்ட மாதமாகும். அவர் ஜூலியஸ் சீசரின் மருமகனும் ரோமின் முதல் பேரரசருமாவார். ஜூலை மாதத்தைப் போலவே, ஆகஸ்ட் மாதமும் முன்பு ‘செக்ஸ்டிலியஸ்’ என்று அழைக்கப்பட்டது. அதாவது, ‘ஆறாவது’ என்று பொருள். பேரரசர் அகஸ்டஸின் மரபு வழிதான் இறுதியில் ‘மதிப்பிற்குரிய மற்றும் ஈர்க்கக்கூடிய’ என்று பொருள்படும் ஆகஸ்ட் என்ற பெயர் ஏற்பட வழிவகுத்தது. மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் நோக்கத்தோடு முப்பத்தொரு நாட்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்: செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் லத்தீன் வார்த்தைகளான septem, octo, novem மற்றும் decem ஆகியவற்றிலிருந்து வந்தன, அதாவது ‘ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது’ என்று பொருள். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களை சேர்ப்பதற்கு முன்னால் இந்த நான்கு மாதங்களும் ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது மாதங்களாகத்தான் இருந்தன என்பதை முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.