
பாதுகாப்பான பயணத்திற்கு ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். நீண்ட நேரம் ஹெல்மெட் அணிவது ஏற்கெனவே இருக்கும் முடி பிரச்னைகளை மோசமாக்கும். அதற்காக ஹெல்மெட்டை தவிர்ப்பது முடியை விட பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும். ஹெல்மெட் போடுவதால் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளையும் இப்பதிவில் காணலாம்.
1. அரிப்பு மற்றும் வறட்சி போக: பைக், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்று ஹெல்மெட் அணிவதால் முடி வறட்சி அடைவதாகவும், அதிகம் முடி கொட்டுவதாகவும் புலம்புகின்றனர். இதனைத் தவிர்க்க ஹெல்மெட்டை கழட்டியதும் காற்றோட்டமான, அதேசமயம் வெளிச்சம் படும் இடங்களில் வைக்கலாம். இதன் மூலம் முடி கால்களில் அரிப்பு, வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். தலை கவசத்திற்கும் முடிகளுக்கும் இடையிலான உராய்வை குறைக்க கை குட்டைகளை பயன்படுத்தலாம். இவை வியர்வையை உறிஞ்சுவதுடன் தலைமுடியின் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவுகிறது. இதனால் வறட்சி, தலை அரிப்பு போன்றவை உண்டாகாது.
2. முடி உதிர்தல்: ஹெல்மெட் அணிவதால் விபத்துகளின் பொழுது தலையில் அடிபடுவதையும், காயங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். இருப்பினும் சிலருக்கு ஹெல்மெட் போடுவதால் ஏற்படும் வியர்வை மற்றும் அழுத்தத்தின் காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஏற்கெனவே முடி உதிர்தல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். அத்துடன் தலைக்கவசத்தை அணியும்பொழுதும், கழற்றும்போதும் முடிகள் இழுக்கப்படாமல் கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.
இவர்கள் தலையில் இருக்கும் பொடுகு, எண்ணெய் பசை ஆகியவை ஹெல்மெட்டில் சேராமல் இருக்க முடியை சுத்தமாக பராமரிப்பதுடன், ஹெல்மெட் அணிவதற்கு முன்பு காட்டன் துணியை தலையில் அணிந்து பின்பு ஹெல்மெட் போடுவது தலையில் உண்டாகும் வியர்வையை உறிஞ்ச உதவும். இதனால் வியர்வை மற்றும் அழுத்தத்தின் காரணமாக முடி உதிரும் பிரச்னையைப் போக்கலாம்.
3. அசௌகர்யமாக உணர்தல்: ஹெல்மெட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஹெல்மெட் அணிவதால் இறுக்கமாக இருப்பது போல் உணர்வதும், தலையில் அதிக சூடு, அதாவது வெப்பம் அதிகமாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். இதற்குத் தலைக்கு பொருத்தமான, சரியாகப் பொருந்தக்கூடிய நல்ல காற்றோட்டம் உள்ள ஹெல்மெட்டை தேர்வு செய்து அணியலாம். அதிக நேரம் ஹெல்மெட் அணிய வேண்டியிருந்தால் அதை அவ்வப்போது கழற்றி தலையை காற்றோட்டமாக வைத்துக் கொள்ளலாம்.
4. முடி பராமரிப்பு: ஹெல்மெட் பயன்படுத்தும் பெண்கள் மிகவும் இறுக்கமாக போனிடெய்ல், பின்னல், கொண்டை போடுவதைத் தவிர்க்கவும். அதேசமயம் முழுவதுமாக ஃப்ரீயாக விடுவதும் வேண்டாம். மொத்த முடியையும் இணைத்து தளர்வாக பேண்ட் போட்டுக் கொள்ளலாம். தலை முடியை சுத்தமாகவும், ஈரமில்லாமல் உலர்வாகவும் வைத்துக் கொள்ளலாம்.
5. ஹெல்மெட் பராமரிப்பு: இறுக்கமான ஹெல்மெட் அணிவது முன் வரிசையில் உள்ள முடிகளை பின்னோக்கி இழுக்கும். எனவே, சரியான அளவிலான ஹெல்மெட்டை தேர்வு செய்வது அவசியம். ஹெல்மெட் அணியும்பொழுது உண்டாகும் வியர்வை ஹெல்மெட்டின் உள் அடுக்குகளை ஈரமாக்கும். இதனால் பூஞ்சை வளர்ச்சி ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். இதற்கு ஹெல்மெட்டை தவறாமல் சுத்தம் செய்வதுடன் காற்றோட்டமான இடத்தில் வைப்பதும், பருத்தித் துணியால் ஹெல்மெட்டின் உள்பாகங்களை துடைத்து உலர வைப்பதும் உலர்த்தும் செயல்முறையை விரைவுப்படுத்தும்.
வாரத்துக்கு ஒரு முறையாவது ஹெல்மெட்டை துடைத்து சானிடைசர் அல்லது டிஸ்இன்ஃபெக்டன்ட் கொண்டு சுத்தம் செய்யலாம். இதன் மூலம் தலைமுடியின் வேர்ப்பகுதி அழுக்காகாமலும், தூசி படியாமலும் தடுக்க முடியும். ஹெல்மெட்டுக்குள் அணியக்கூடிய துணியை அவ்வப்பொழுது மாற்றலாம். ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தம் செய்து உலர்வாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும்.