

தற்பெருமை கொள்பவர் என்பவர் தம்முடைய திறமைகள், உடைமைகள், சாதனைகளைப் பற்றி மிகைப்படுத்தி கூறுவர். எப்போதும் தம்மை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று நினைப்பார்கள். வீண் பெருமை பேசுவார்கள்.
மிகைப்படுத்தி கூறுதல்: தாங்கள் சிறு காரியங்கள் செய்தாலும் அதனைப் பெரிய சாதனையை செய்து முடித்தது போல் மிகைப்படுத்தி பேசுவார்கள். தன்னை பெருமையோடு நினைப்பதும், தனது பெருமைகளை பிறருடன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பகிர்ந்து கொள்வதும் தற்பெருமை ஆகாது. ஆனால், தன்னிடம் இல்லாத திறமையை இருப்பதாகக் காட்டிக் கொண்டு மிகைப்படுத்தி வெளிப்படுத்தும்போதுதான் பிறர் எரிச்சல் அடைவார்கள். இப்படி வீண் பெருமை பேசுபவர்களைக் கண்டால் சற்று ஒதுங்கிச் செல்வது நல்லது.
பொறுமையின்மை: எந்த விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிக்காமல் பொறுமையற்றவர்களாகக் காணப்படுவார்கள். பிறர் கூறும் விஷயங்களை காது கொடுத்து கேட்கத் தயாராக இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் தங்களைப் பற்றியும், தங்கள் செயல்களைப் பற்றியும் மிகைப்படுத்தி கூறுவதன் மூலம், பிறர் தங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொள்வார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், அது பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அவர்கள் எண்ணுவதில்லை. தன்னை உயர்த்திப் பிடிக்கும் மனப்பான்மையால் இவர்களைக் கண்டாலே மற்றவர்கள் எரிச்சல் அடையும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஈகோ: பிறர் எப்பொழுதும் தன்னைப் பற்றியே புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும், உயர்த்திப் பேச வேண்டும் என்று விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எப்பொழுதுமே தன்னை மற்றவர்கள் உயர்வாக துதி பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், பாராட்டு மழையில் எப்போழுதும் நனைந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் நினைப்பவர்கள் நிச்சயம் நிம்மதி இழந்து போய்விடுவார்கள். அடுத்தவர்கள் மீது பொறாமை கொள்ளும் உணர்வினாலும், சிலர் மற்றவர்களை மட்டம் தட்டிப் பேசி தன்னை பெரிதாகக் காட்டிக்கொள்ள முயல்வார்கள்.
குறை கூறுதல்: மற்றவர்களுடைய சிறு தவறையும் பூதக்கண்ணாடிக்கொண்டு பார்த்து பெரிதாக்கி அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதும் தற்பெருமையின் விளைவே. மற்றவர்களைப் பற்றி அடிக்கடி குறை கூறுவதும், தனது தகுதிக்கு மீறி தன்னை மிகப் பெரியவராக மதிப்பீடு செய்து காட்டிக் கொள்வதும் இவர்களின் சுபாவமாக இருக்கும்.
தான் செய்த தவறுக்கு தப்பித்தவறிக் கூட வருந்துவதோ, மன்னிப்பு கேட்கும் மனநிலையோ இல்லாதவர்களாக இருப்பார்கள். வீண் வாதம் செய்வதும், அடுத்தவர்களிடம் சண்டை போடுவதையே பொழுதுபோக்காகவும் நினைப்பார்கள். மற்றவர்கள் தன்னை விமர்சிக்கும்பொழுது ஏதாவது சால்ஜாப்பு சொல்லி, தான் நேர்மையுடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள்.
ஆடம்பரம்: தன்னிடம் இல்லாதவற்றை இருப்பதாக கூறிக்கொண்டு, பெருமை பேசுவார்கள். சில சமயங்களில் அடக்கமாய் இருப்பது போல் பாசாங்கு செய்து மறைமுகமாக தற்பெருமை பேசுவார்கள். தன்னை உயர்ந்தவர்களாகக் காட்ட முயல்வார்கள். தற்பெருமை அற்பமானது. அதனை தவிர்க்க வேண்டும்.
தற்பெருமையை தவிர்ப்பதால் அற்ப செயல்கள் நம்மை அண்டாது. வேண்டாத செலவுகளும் ஏற்படாது. வீண் விரயத்திற்கு இரையாகாமல் இருக்கலாம். அத்துடன் வீணான விவகாரங்களில் இருந்தும் விலகி விடலாம்; வாழ்வும் இலகுவாய் இருக்கும்.
எப்பொழுதும் தன்னை மையப்படுத்தியே பேசுவதும், அனைவரின் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்று விரும்பும் தற்பெருமை பேசுபவர்கள் மற்றவர்களின் உணர்வுகளையோ பிரச்னைகளையோ சிறிதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இவர்களிடமிருந்து சற்று தள்ளியே இருப்பது நல்லது.