
தற்காலத்தில் சின்னச் சின்ன விசேஷங்களுக்குக் கூட ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் வளர்ந்து வருகிறது. இன்னும் ஒருசிலர் எல்லோரும் செய்கிறார்களே என்று தானும் செய்து விட்டு பிறகு, ‘நம் தகுதிக்கு மீறி செலவு செய்து விட்டோமே, இந்தக் கடனை எப்படி அடைப்பது?’ என்று அங்கலாய்ப்பதும் உண்டு. எதையெல்லாம் சிக்கனப்படுத்தினால் சேமிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்!
மின்சார சிக்கனம் மிகவும் அவசியம்: பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு வீட்டில் உள்ளோர் சென்று விட்டால், எல்லா அறைகளையும் ஒரு விசிட் செய்யுங்கள். அப்பொழுதுதான் அங்கு ஃபேன் ஓடுவது, லைட் எரிவது, ட்ரெஸ்ஸிங் டேபிள் லைட் எரிந்து கொண்டிருப்பது, கம்ப்யூட்டர் ஆனில் இருப்பது, சார்ஜில் போட்ட செல்போன் ஓடிக்கொண்டிருப்பது என்று இன்னும் சொல்லப்போனால் அயர்ன் செய்துவிட்டு வைத்த அயன் பாக்ஸ் கூட ஆனில்தான் இருக்கும். ஆதலால் இவற்றை எல்லாம் சரி பார்த்து விட்டு மற்ற வேலைகளைச் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும், சாயங்கால நேரங்களில் சில வீடுகளில் உள்விளக்குகளை ஆறு மணிக்கு போட்டு விடுவார்கள். வீட்டின் உள்ளே சரி, வெளி லைட்டுகள் மற்றும் தோட்டம், ரோடு சைடுகளில் உள்ள லைட்டுகளை நன்றாக இருட்டியதும் போடலாமே! அதேபோல் மீண்டும் 9 மணிக்கு நிறுத்திவிட்டால் போதுமே. ஏசியையும் நீண்ட நேரம் போட்டு வைத்துக்கொள்ளாமல் போதுமான அளவு போட்டுவிட்டு நிறுத்தி விடுவது நல்லது. இதனால் மூக்கு எரிச்சல், கண் எரிச்சல், சருமம் வறண்டு போவது போன்ற உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம். கூடவே மின் கட்டணமும் சிக்கனமாகும். பவர் கட் ஆகி இருக்கும் நேரங்களில் வெளியில் புறப்பட்டால் இவை அனைத்தையும் செக் செய்து விட்டுச் செல்வது நல்லது.
லிஸ்ட் போடுங்கள்: வீட்டில் தீர்ந்துபோகும் மளிகை சாமான் மற்றும் காய்கறிகளை அவ்வப்போது லிஸ்ட் போட்டு வைத்திருந்தால் கடைக்குச் சென்று வாங்கும்போது எது இருக்கிறது, எது தீர்ந்தது என்று சிரமப்படாமல் வாங்கலாம். கூடவே கை காசு கொடுத்து வாங்கினால் அளவுக்கு மீறி வாங்க மாட்டோம். இதனால் காய்கறிகளை நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் அடைத்து, சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுவது உறுதி. பிரிட்ஜில் அதிகமாக சமைத்து வைப்பதும் குறைந்துவிடும். இதுபோன்ற விஷயங்களால் மாதக் கடைசியில் ஒரு கணிசமான அளவு பணத்தை சேமிக்கலாம்.
ஷாப்பிங் செல்லும்போது தனியாகச் செல்லுங்கள்: இப்படித் தனியாக செல்லும்பொழுது தனக்கு வேண்டியதை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து விடலாம். மற்றவர்களோடு செல்லும்பொழுது சிலரது ஆலோசனையின் பெயரில் அவர்கள் வாங்குகிறார்கள், இவர்கள் வாங்குகிறார்கள், நாமளும் வாங்கினால் என்ன? என்று அதிகமாக வாங்கி விடுவோம். அது தேவையானதாகக் கூட இருக்காது. இதனால் செலவு கூடும். மேலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஆஃபர்களில் வாங்குவதை நிறுத்திவிட்டால் கணிசமான அளவு சேமிப்பாகும்.
சிலர் போர் அடிக்கிறது என்பதற்காக ஷாப்பிங் மால்களுக்குச் சென்று செலவழிப்பது உண்டு. தேவையில்லாத பர்னிச்சர்களுக்கு ஆர்டர் கொடுப்பது, பிறகு அளவுக்கு அதிகமாக வாங்கி விட்டோம் என்பதற்காக அதை மற்றவர்களிடம் கொடுப்பது போன்ற நடைமுறைகளும் வழக்கத்தில் உள்ளன. இதனாலும் செலவு அதிகமாகும். போக்குவரத்து செலவு அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று உயரும். ஆதலால் இதுபோன்ற பொருட்களை வாங்கும்போது நன்றாக யோசித்து இது தேவைதானா என்று அறிந்து கிரெடிட் கார்டை தேயுங்கள்.
அளவாகப் பயன்படுத்துங்கள்: வங்கிக் கட்டணங்களை தெளிவாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். வசதிக்காக வைத்திருக்கும் வங்கி கணக்கில் ஏடிஎம்களில் அதிக முறை பணம் எடுத்தால் அதற்கும் இப்போது கட்டணம் உண்டு. செக் புத்தகம் நிறைய வாங்கினால் அதற்கும் கட்டணம் உண்டு. ஆதலால், வசதிக்காக வைத்திருக்கும் வங்கி கணக்கிலும் இப்போது பல்வேறு மறைமுக்க் கட்டணங்கள் இருப்பதை புரிந்து, தெரிந்து கொண்டு எதையும் அளவாக பயன்படுத்தினால்தான் ஆதாயம் அடைய முடியும்.
ஹோட்டல் சாப்பாட்டை தவிருங்கள்: முன்பெல்லாம் 50 பேருக்கு மேற்பட்டவர்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துவிட்டால் கூட ஒன்று சேர்ந்து சமைத்து சாப்பிடுவோம். அதில் ஒரு இன்பம் இருக்கும். இப்பொழுது நான்கைந்து பேர் வந்து விட்டாலும் ஆர்டர் செய்து வீட்டிற்கு ஸ்நாக்ஸ், சாப்பாட்டை வரவழைக்கிறோம். இதில் சாப்பாட்டு செலவு, ஸ்விக்கி செலவு என்று கணக்குப்போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி ஹோட்டல் சென்று சாப்பிட்டாலும் அதற்கான வரிகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். முக்கியமான நிகழ்வுகளின்பொழுது ஹோட்டலை நினையுங்கள். மற்ற நேரங்களில் வீட்டையே நினைத்துக் கொள்ளுங்கள். அதுதான் உடலுக்கும் உடமைக்கும் பாதுகாப்பு.
இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் சிக்கனமாக செலவழித்து மிச்சம் பிடிப்பதை சேமிப்பாக மாற்றுங்கள். நூறு ரூபாயை செலவுக்கு என்று எடுத்தால் அதில் பத்து ரூபாயை சேமிப்புக்காக வைத்து விட்டு மீதியை செலவு செய்வதை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் இதைப் பழக்கப்படுத்துங்கள்.