
நாம் நம் நண்பர்களுடன் அல்லது ஆபீஸில் பணிபுரிபுவர்களுடன் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கோ அல்லது பிறந்த நாள் விழாவிற்கோ அல்லது ஏதாவது ஒரு functionக்கோ போனால் அங்கே எந்த பானமாக இருந்தாலும் சரி, காபி, டீ, கூல்டிரிங்க்ஸ், ஜூஸ், மது என எதுவாக இருந்தாலும் அதை அருந்துவதற்கு முன்னால் கண்ணாடி கிளாஸ்களை ஒருவரோடு ஒருவர் இடித்து கொண்டு ‘சியர்ஸ்‘ என்று சொல்லி ஏடுத்துக்கொள்வது வழக்கம். அதற்கான காரணம் என்ன? அந்த வார்த்தையின் உண்மையான பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி இப்பதிவில் காண்போம்.
இந்தப் பழக்கமானது திடீரென தொடங்கிய பழக்கமல்ல, பல நூற்றாண்டுகளாகவே இந்தப் பழக்கம் நிலவி வருகிறது. தற்போதைய வாழ்க்கை முறையில் இது அனைவருமே சொல்லக்கூடிய ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இந்த ‘சியர்ஸ்‘ என்கிற வார்த்தை பழைய பிரெஞ்சு வார்த்தையான 'சியர்' என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இதன் பொருள் முகம் அல்லது தலை ஆகும். 18ம் நூற்றாண்டில் மறு வடிவமைக்கப்பட்டு இந்த வார்த்தையை மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
இப்போதோ மக்கள் தங்களுடைய நல்வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக இதை பயன்படுத்துகிறார்கள். மேலும், இந்த வார்த்தையை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும்போது அங்கே மகிழ்ச்சி மற்றும் நேர்மறையான எண்ணங்களும் உருவாகுவதாக நம்புகிறார்கள். ஆனால், இந்த வார்த்தைக்கான வேறு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாமா?
முதல் காரணம்: பண்டைய கால வரலாற்று குறிப்புகளின்படி, கடந்த காலங்களில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய மக்கள் தங்கள் டம்ளரை உயர்த்தி சத்தமாக ஆரவாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, அந்த காலத்தில், அரசர்கள் விருந்தோம்பலுக்கு மற்ற அரசர்களை அழைப்பது வழக்கம். ஒரு அரசரின் மீது பகைமை இருந்தால் இன்னொரு அரசர் வெளியே காட்டிக் கொள்ளாமல் நயவஞ்சமாக அவரை விருந்திற்கு அழைத்து அவர் அருந்தும் பானத்தில் விஷத்தை கலந்து விடுவார். எதிரிகளைக் கொல்வதற்கு இதுதான் அப்போதைய பொதுவான வழியாக இருந்தது. எனவே, கண்ணாடி கிளாஸில் பானங்களை முழுவதுமாக நிரப்பி ஒருவருக்கொருவர் ஒன்றாக இடிக்கும்போது, ஒவ்வொரு கிளாஸிலிருந்தும் சில துளிகள் மற்றொரு கிளாஸிலும் கலந்து விடும். இந்த முறையில்தான் அவர்கள் விஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தீர்மானித்து கொண்டார்கள்.
இரண்டாவது காரணம்: பொதுவாக, பானத்தை அருந்தும்போது நீங்கள் அதைப் பார்க்கலாம், தொடுவதன் மூலம் உணரலாம், சுவைக்கலாம் மற்றும் அதன் வாசனையையும் நுகரலாம். ஆனால், காதுக்கு இதனால் எந்த அனுபவமும் கிடைப்பதில்லை. எனவே, ஐந்தாவது புலனான காதிற்கும் அனுபவம் கிடைக்கும் வகையில், இவ்வாறு தங்கள் டம்ளர்களை ஒன்றோடு ஒன்று இடித்து சத்தமாக ‘சியர்ஸ்‘ என்று சொல்வதாகக் கருதப்படுகிறது.
மூன்றாவது காரணம்: ஜெர்மனியர்களின் கூற்றுபடி, டம்ளர்களை இடித்து, சியர்ஸ் என்று சத்தமாக கூறினால் பேய்களை விரட்டலாம் என்று கருதப்படுகிறது. அவர்கள் ‘சியர்ஸ்’ என்று சொல்லிவிட்டு சிறிதளவு பானத்தை கீழே சிந்தி விடுவார்கள். கெட்ட ஆவிகள் அந்த பானத்தை அருந்திவிட்டு அவர்களை விட்டுவிடும் என்பது அவர்களின் அபார நம்பிக்கை.
எது எப்படியோ தெரியாது, ஆனால் எல்லோருக்குமே ‘சியர்ஸ்‘ என்று ஆரவாரத்தோடு சொல்லி பானத்தை அருந்தும்போது கிடைக்கும் சுகமே தனிதான்!