IQ, EQ தெரியும்! அதென்ன SQ, AQ?

IQ, EQ, SQ, AQ
IQ, EQ, SQ, AQ
Published on

மனிதனின் நுண்ணறிவு ஈவு என்பது தான் Intelligence Quotient (IQ) என்று சொல்லப்படுகிறது. இது அனைவரும் அறிந்ததே. ஆண்டாண்டு காலமாகப் புழக்கத்தில் இருந்துவரும் ஒன்றாகும் இந்த IQ. கடந்த பத்தாண்டுகளில் Emotional Quotient (EQ) என்பது பிரபலமானது. உணர்வெழுச்சிகளைக் கையாள்வதும் நுண்ணறிவுதான் என்று அறியப்படுகிறது.

தற்போது‌ Social Quotient (SQ), Adaptability Quotient (AQ) ஆகிய இரண்டையும் புதிதாக இணைத்து, மனிதனின் நுண்ணறிவினை‌ நான்காக‌ வகைப்படுத்துகிறார்கள் உளவியலாளர்கள். இவற்றைப் பற்றிச் சுருக்கமாக இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்..

  • நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient – IQ)

  • திட்டமிடுதல்,

  • எண்களையும் மொழியையும் புரிந்து கொள்ளுதல்,

  • கற்றுக்கொள்ளுதல், சூழல் சார்ந்து சிந்தித்தல்,

  • பிரச்சினையைத் தீர்த்தல்

ஆகியவற்றுக்குத் தேவையான திறன்களைத் தான் நுண்ணறிவு என்று அடையாளப்படுத்துகிறது உளவியல். இது மரபு சார்ந்ததா சூழல் சார்ந்ததா என்று நூறாண்டுகளுக்கும் மேலாய் ஆராய்ந்து வருகிறார்கள். நுண்ணறிவு வேறு, ஆளுமை வேறு என்றும் அறியப்படுகிறது. சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு மூலம் ஒரு மனிதனின் மன-வயது கண்டறியப்பட்டு அதை உண்மை வயதால் வகுத்து நூறால் பெருக்கி இந்த IQ கணக்கிடப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு 85-115 IQ இருக்கும் என்கிறார்கள். அதனால் இதை நார்மல் ரேஞ் என்று கொள்ளலாம். 70க்கும் கீழ் IQ இருந்தால் அவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்றும் 130க்கு மேல் இருந்தால் அவர்களை ஜீனியஸ் என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

உங்களின் IQ எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

  • உணர்வெழுச்சி நுண்ணறிவு (Emotional Quotient – EQ)

1995ல் பத்திரிக்கையாளர் டேனியல் கோல்மென் என்பவர் எழுதிய Emotional Intelligence என்ற புத்தகம் மூலம் தான் இது பிரபலமடைந்தது.

ஒரு சூழலில் நாம் எப்படி உணருகிறோம் என்று துல்லியமாகப் புரிந்துகொள்வதும் ஒரு நுண்ணறிவுதானாம். நாம் கோபப்படுகிறோமா வருத்தப்படுகிறோமா என்று சில நேரங்களில் நமக்கே குழப்பமாய் உள்ளது தானே! சிலர் அழவேண்டிய இடங்களில் அழாமல் கட்டுப்படுத்தி அந்த உணர்வினை உணரக் கூட மறுக்கிறார்கள் அல்லவா!

  • நம் மனவெழுச்சிகளை முதலில் உணர்ந்து,

  • என்ன உணர்கிறோம் என்று உணர்வுகளுக்கிடையில் பகுத்தறிந்து

  • அந்த உணர்வினை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, 

  • அதைப் பயன்படுத்தி, 

  • அந்த உணர்வெழுச்சிகளை நிர்வகித்துக் கையாளும் திறனைத் தான் 

Emotional Intelligence என்கிறார்கள்.

இந்த மனவெழுச்சி நுண்ணறிவினைக் கற்றுக்கொள்ளவும் பலப்படுத்தவும் பயிற்சி செய்தால் முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உயர் EQ கொண்டவர்கள் தலைமைப் பதவிகளில் இருப்பார்களாம். உங்களின் EQ நல்ல நிலையில் உள்ளதா என்று சிந்தித்துப் பாருங்களேன்.

  • சமூகப்பழக்க நுண்ணறிவு (Social Quotient – SQ)

மனித நுண்ணறிவுப் பட்டியலில் மூன்றாவதாக இணைக்கப்பட்டுள்ள இந்த SQ, 

  • சமூகத் தொடர்புகளை  சீக்கிரத்தில்  ஏற்படுத்திக் கொள்ளவும்,

அப்படி  ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளை நீண்ட காலத்துக்கு  தக்கவைத்துத் தொடரவும். தேவையான மனவியல், மனப்பான்மை சார்ந்ததாகும். 1920களிலேயே உளவியலாளர் தார்ண்டைக் இவ்வகை நுண்ணறிவு பற்றி விளக்கியிருந்தாலும் இது பிரபலமடைந்தது சமீபத்தில் தான்‌. இன்றைய காலகட்டத்தில் வெற்றிகரமான சமூக வாழ்வுக்கு SQ மிகவும் தேவையான ஒன்றுதானே. இதை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகளும் உள்ளன.

நீங்கள் எப்படி.. நல்ல ஸோஷியல் நெட்வர்க் ஏற்படுத்திவிட்டீர்களா? அல்லது, உங்கள் சமூக வட்டத்தின் விட்டம் குறைவுதானா?

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 5 விஷயங்கள்!
IQ, EQ, SQ, AQ
  • தகவமைப்பு நுண்ணறிவு (Adaptability Quotient – AQ)

இது சமீப காலங்களில் தான் அதிகம் பேசப்படுகிறது என்றாலும், உயிரினத்தின் மிகப் பழமையான நுண்ணறிவாகும். மனித இனம் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் இந்த நுண்ணறிவு உண்டு. சூழலுக்கேற்றபடி தகவமைத்துக் கொள்ளுதல் பிற உயிரனங்களில் உடலியல் சார்ந்து நடைபெறுகிறது. மனிதர்களைப் பொருத்தவரை இவ்வகை நுண்ணறிவு 'மாற்றங்களை எதிர்கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல், புதுமைகளுக்கு ஏற்றபடி மாறுதல்' என்பதைக் குறிக்கும்.

  • புதுமைகளைச் சீக்கிரமாகக் கற்றுக்கொள்வீர்களா..

  • மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் போது வரும் சவால்களை நிதானமாக எதிர்கொண்டு நெகிழ்வுத்தன்மையோடு ‌முடிவுகள் எடுப்பீர்களா.. 

  • மாற்றங்களுக்கேற்றபடி மாறுவீர்களா..

வாழ்த்துக்கள்.. உங்களின் AQ உயர்நிலையில் இருக்கிறது.

முன்பெல்லாம் நுண்ணறிவு என்பது முதல் வகை மட்டும்தான் என்று புரிந்துகொள்ளப்பட்டுவந்த நிலையில் தற்போது நுண்ணறிவு என்றால் இந்த நான்கும் தான் என்று பார்க்கப்படுகிறது. உயர் IQ இருந்தாலும் மற்ற மூன்றும் இல்லையானால் அந்நபர் பெரிய வெற்றியாளராய் உருவாவதில்லை என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. EQ, SQ, AQ அதிகம் இருப்பவர்களே பிரும்மாண்ட வெற்றியாளர்களாய் இருக்கிறார்களாம்.

உங்களின் EQ, SQ, AQவை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com