ஒருவர் கல்லூரி படிப்பு முடித்து குறிப்பிட்ட சில துறைகளில் நிபுணத்துவம் பெற்று ஓரளவு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தால், ‘அவர் ஒயிட் காலர் ஜாப்ல இருக்கார்’ என்று சொல்வார்கள். அதேசமயம் நீலக் காலர் வேலை என்பது உடல் உழைப்பை நம்பி செய்யப்படும் வேலையாகும். ப்ளூ காலர் மற்றும் ஒயிட் காலர் வேலைகள் பொருளாதார மற்றும் சமூகத்திற்கு இன்றியமையாததாக இருந்தாலும் அவற்றின் அடிப்படையில் கணிசமான வேறுபாடுகள் இருக்கின்றன.
வேலையின் தன்மை: வெள்ளைக் காலர் வேலைகள் பொதுவாக அலுவலகம் அல்லது நிர்வாக வேலைகளை உள்ளடக்கியது. பகுப்பாய்வுத் திறன், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய பணிகளில் கவனம் செலுத்துதல், திட்டமிடல், நிர்வகித்தல் அல்லது சேவைகளை வழங்குதல் போன்ற பொறுப்புகளில் இருப்பார்கள்.
ப்ளூ காலர் வேலைகள்: உடல் உழைப்பு தேவைப்படும் கட்டுமானம், பராமரிப்பு, போக்குவரத்து துறைகள் மற்றும் உற்பத்தி போன்றவற்றில் வேலை செய்பவர்கள். இவர்களுக்கு உடல் உழைப்பும் திறமையான வர்த்தகம், தொழில்நுட்ப திறன்களும் தேவை. இயந்திரங்களை இயக்குதல், கட்டுமானத் தொழிலில் தேவையான வேலைகளை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.
கல்வித் தகுதிகள்: வெள்ளைக் காலர் வேலைகளுக்கு பெரும்பாலும் ஒரு கல்லூரிப் பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகள் தேவை. வணிகம், நிதி, சட்டம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அடங்கும்.
ப்ளூ காலர் வேலைகள்: சிறப்புப் பயிற்சி தேவைப்படலாம். ஆனால், கல்லூரி பட்டம் அவசியமில்லை. தொழில் துறை சார்ந்த பயிற்சி திட்டங்கள் இந்தத் தொழிலுக்கு முக்கியமாக இருக்கும்.
சலுகைகள்: வெள்ளை காலர் வேலைக்காரர்கள் போனஸ் மற்றும் பலன்களுடன் கூடிய சம்பளம் பெறும் பதவிகளில் இருப்பார்கள். சிறப்புத் திறன் மற்றும் கல்வியின் காரணமாக வருவாய் அதிகமாகவும் இருக்கும். ப்ளூ காலர் பணியாளர்களுக்கு பெரும்பாலும் மணி நேரத்தை கணக்கிட்டு ஊதிய நிலைகள் அமைக்கப்படும். ஓவர் டைம் ஊதியம் உண்டு. தொழில் திறன் மற்றும் தொழிலாளர் தேவைக்கேற்ப ஊதியம் மாறுபடும்.
வேலை சூழல்: வெள்ளைக் காலர் வேலைகளில் இருப்பவர்களுக்கு, தேவையான அலுவலக உபகரணங்களுடன் பணிபுரிவார்கள். தொழில்முறை அலுவலக அமைப்புகள் அல்லது தொலைதூர பணி சூழல்களில் அமர்த்தப்படுவார்கள்.
ப்ளூ காலர் பணியாளர்கள் பெரும்பாலும் தொழிற்சாலைகள், கட்டுமானத் தளங்கள், வெளிப்புறங்களில் அல்லது பிற தொழில் துறை அமைப்புகளில் பணிபுரிவார்கள். கடுமையான நிலைமைகள் அல்லது உடல் ரீதியான ஆபத்துக்களுக்குட்பட்டு இவர்களது வேலை இருக்கும்.
வேலை பாதுகாப்பு மற்றும் நன்மைகள்: வெள்ளைக் காலருக்கு பெரும்பாலும் உடல் நலக்காப்பீடு ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற பலன்கள் இருக்கும். நிலையான வணிக நேரத்தை பின்பற்றி பணிபுரிவார்கள். நெகிழ்வான பணி அட்டவணைகள் மற்றும் தொலைதூர வேலைகள் இருக்கும்.
ப்ளூ காலருக்கு முதலாளி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதித்துவத்தால் கணிசமாக வேறுபடலாம். அவுட்சோர்ஸ்சிங், ஆட்டோமேஷன் மற்றும் பொருளாதார சுழற்சிகள் போன்ற காரணிகளால் வேலை பாதுகாப்பில் இடையூறுகள் நேரலாம். தொழில் துறையின் தேவைகளைப் பொறுத்து மாலை, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் உட்பட ஷிப்ட் வேலை இருக்கும்.
தேவையான திறன்கள்: வெள்ளைக் காலர் பணியில் இருப்பவர்களுக்கு குழுப்பணி, விமர்சன சிந்தனை, குறிப்பிட்ட தொழில்நுட்பத்திறன்கள், சாப்ட்ஸ்கில்ஸ் எனப்படும் மென்மையான திறன்கள் அவசியம். கௌரவரமான வேலையாக இருப்பினும் மன அழுத்தம் மற்றும் பெரு நிறுவன கலாசாரத்தின் அடிப்படையில் வேலை திருப்தியில் மாறுபாடுகள் ஏற்படலாம்.
ப்ளூ காலர்க்காரர்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் உடல் திறன்கள் மற்றும் இயந்திர அல்லது கட்டுமான பணிகள் தொடர்பான சிக்கலைத் தீர்ப்பது போன்ற கடினமான திறன்கள் தேவை. அவர்களின் வேலை உடனடி தாக்கத்தை காணும் திறன் பெற்றது. உயர்வேலைத் திருப்திக்கு வழிவகுக்கும்.