தனது பக்தர்களை நூல் கொண்டு கட்டி இழுக்கும் ஷீரடி சாயி பாபா!

shirdi sai baba
shirdi sai baba
Published on

‘ஸ்ரீ சாயி சத் சரித்திரம்’ என்னும் ஆழ, அகலங்கள் கொண்ட கடலில் மூழ்கி முத்துக் குளித்தால் சம்சார சாகரத்தில் உழலும் மானிடர்களுக்கு மனத்தெளிவும் அமைதியும்  கிடைப்பது சத்தியம். ஆன்மிகத் தேடலில் ஈடுபடுபவர்களுக்கு இது எளிமையான வடிவத்தில் ஒரு பகவத் கீதை.

'அவனின்றி ஓர் அணுவும் அசையாது', 'ஆட்டுவிப்பவன் அவன்; ஆடுபவர்கள் நாம்.' அது மட்டுமா? அவன் அருள் இருந்தால்தான் நாம் அவனை தரிசிக்கவே முடியும். அன்றாடம் நம் வாழ்வில் நடப்பவை அனைத்தும் இறைவன் எண்ணப்படி நடக்கின்றன. இதெல்லாம் நிதர்சனமான உண்மை என்பது ஷீரடி பாபாவின் சத் சரித்திரக் கதைகளைப் படித்தால் நமக்குப் புரியும்.

தன்னுடைய பக்தர்களை ஷீரடிக்கு வரவழைப்பது பற்றி பாபா, "என்னுடைய பக்தன் எந்த தேசத்திலிருந்தாலும், எவ்வளவு ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்தாலும், சிட்டுக் குருவிகளை இழுப்பது போல அவர்களின் கால்களில் நூலைக்கட்டி அவர்களை இங்கே வரவழைப்பேன்" என்று கூறுவார். அது மட்டுமல்ல, பக்தர்களின் ஷீரடி வருகைக்கு ஏற்பாடுகளையும் பாபாதான் செய்கிறார்.

நாசிக் ஜில்லாவைச் சேர்ந்த வணியில் ஸ்ரீ சப்தசிருங்கி தேவி கோயில் பூஜாரி காகாஜி வைத்யா என்பவர் இருந்தார். அவர் வாழ்க்கையில் தொடர்ந்து வந்த கஷ்டங்களாலும் கவலைகளாலும் மனத் துயருற்று தேவியைப் பிரார்த்தித்தபோது தேவி அவர் கனவில் தோன்றி, "நீ பாபாவிடம் செல். உனது மனது அமைதியடையும்" என்றாள். தேவி குறிப்பிட்ட பாபா, சிவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து காகாஜி 'திரியம்பக்'கிற்குச் சென்றார்.

இதையும் படியுங்கள்:
கலெக்டர் பதவியை உருவாக்கிய மன்றோ சிலையின் வரலாறு தெரியுமா?
shirdi sai baba

அப்படியும் அவர் மனது அமைதியடையாதபோது, தேவி திரும்பவும் அவர் கனவில் தோன்றி, "நான் குறிப்பிட்டடது ஷீரடியைச் சேர்ந்த ஸ்ரீ சாயி சமாரத்தை. நீ அங்கே செல்!" என்றாள். எப்படி ஷீரடிக்குப் போவது என்று ஒன்றும் புரியாமல் அவர் கவலையுடன் இருந்தபோது, ஷீரடியில் பாபா காகாஜியின் வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.

ஷாமா என்று பாபாவால் பிரியமுடன் அழைக்கப்பட்ட மாதவ்ராவ் தேஷ்பாண்டேயின் குலதெய்வம் வணியிலுள்ள ஸ்ரீ சப்தசிருங்கி தேவி. ஷாமா இளம் வயதில் நோய்வாய்ப்பட்டபோது அவரது தாயார் அவரை தேவியின் சன்னிதிக்கு அழைத்து வருவதாக வேண்டிக்கொண்டாள். தாயாருக்கே ஒரு சமயம் ஸ்தனங்களில் ஏதோ சரும வியாதி ஏற்பட்டபோது, ஒரு ஜோடி வெள்ளி ஸ்தனங்களை தேவிக்கு சமர்ப்பிப்பதாக பிரார்த்திக்கொண்டாள். தாயார் தனது மரணப் படுக்கையில் ஷாமாவை அருகில் அழைத்து  இந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிக்கொண்ட பிறகே உயிர் நீத்தாள். இருந்தாலும் முப்பது வருடங்கள் கடந்த பின்னரும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக இல்லை. ஷாமாவால் நீண்ட வருடங்களாக வணிக்குப் போகவே இயலவில்லை.

குலதெய்வத்திற்கு நேர்ந்துகொண்ட நேர்த்திக்கடனை நிறைவேற்றாததால்தான்  தங்களுக்கு வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்கள் வருகிறதென்று ஷாமாவின் தம்பி ஒரு ஜோசியர் மூலமாக அறிந்து கொண்டார். அவர் ஷாமாவிடம் இதைப்பற்றி கலந்தாலோசித்தபோது ஷாமா, "இனியும் தாமதம் வேண்டாம்!" என்று கூறி விரைந்து ஒரு ஜோடி வெள்ளி ஸ்தனங்களை தயார் செய்து பாபாவின் முன் வைத்து தன்னை இந்த வேண்டுதல்களிலிருந்து விடுவிக்கும்படி வேண்டிக் கொண்டார். ஏனென்றால், ஷாமாவைப் பொறுத்தவரை பாபாவே அவருக்கு குலதெய்வம்! ஸ்ரீ சப்தசிருங்கி தேவி! ஆனால், பாபா அதை ஏற்றுக்கொள்ளவிலலை. ஷாமாவை உடனே அதை வணிக்குச் சென்று ஸ்ரீ சப்தசிருங்கி தேவியிடம் அவரையே சமர்ப்பிக்கச் சொன்னார்.

இதையும் படியுங்கள்:
உலோக சத்துக்களுக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு உண்டா?
shirdi sai baba

ஷாமா வணிக்குச் சென்று கோயில் பூஜாரியைச் சந்தித்து, தான் ஷீரடியிலிருந்து வருவதாகச் சொன்னதும் காகாஜி வைத்யா அவரை அப்படியே கட்டியணைத்துக் கொண்டார். ‘பாபாவை காண்போமா’ என்று அவர் அவ்வளவு ஏங்கிப் போயிருந்தார். ஷாமாவின் வேண்டுதல்களை நிறைவேற்றிய பின் அவர்கள் ஷீரடிக்குப் புறப்பட்டனர். பாபாவை வெறுமனே தரிசித்தபோதே தனது மனதின் சலனங்கள் அடங்கி அமைதியாவதை உணர்ந்த காகாஜி மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.

'என்னே பாபாவின் மகிமை! என்னிடம் ஒரு  வார்த்தை பேசவில்லை. ஒரு கேள்வி கேட்கவில்லை. சமாதானம் செய்யவில்லை. வெறும் தரிசனம் ஒன்றே எனது மன சஞ்சலத்தைத் தீர்த்து சாந்தி அளிக்கிறதே? இதுவல்லவோ தரிசன மகிமையென்பது?' என்று ஆனந்தப்பட்டார் காகாஜி. ஷாமாவுக்கும் தான் வணிக்கு விரைந்து அனுப்பப்பட்டதன் பொருள் இப்போதுதான் விளங்கியது. பக்தன் தன்னை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்து விட்டு அவன் வருகைக்காகக் காத்திருக்கும் பகவானைப் பார்த்து மெய்சிலிர்த்துப்போய் இருவரும் பாபாவை பணிந்து வணங்கினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com