ஹைலூரோனிக் அமிலம் என்பது மனித உடல் இயற்கையாக உற்பத்தி செய்யும் ஒரு பொருள் ஆகும். குழந்தைகளிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. இது சருமம், மூட்டுகள் மற்றும் இணைப்பு திசுக்கள் உட்பட பல்வேறு திசுக்களில் காணப்படுகிறது. இதனுடைய பயன்பாடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஹைலூரோனிக் அமிலத்தின் நன்மைகள்:
சரும நன்மைகள்: உடலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இந்த அமிலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தவும் சுருக்கங்களை குறைக்கவும் மிருதுவான தோற்றத்தை அளிக்கவும் உதவுகிறது. இந்த அமிலம்தான் நமது முகத்தையும் உடலையும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் இன்றி பராமரிக்க உதவுகிறது. குழந்தைகளின் முகம் அதனால்தான் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் இன்றி அழகாகக் காட்சியளிக்கிறது.
இது அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமம் சிவந்துபோனால் அல்லது வீங்கினால் விரைவாக குணப்படுத்த உதவுகிறது. வெளியில் செல்லும்போது சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிரான பாதுகாப்பை நமது உடலுக்கு அளிக்கிறது. மாசுபாடு, புற ஊதாக் கதிர்வீச்சு, குளிர் வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க இந்த அமிலம் உதவுகிறது.
சிறந்த எலும்பு, மூட்டு செயல்பாடு: ஹைலூரோனிக் அமிலம் மூட்டுகளில் இயற்கையான லூப்ரிகண்டாக செயல்படுகிறது. எண்ணெய் இடப்பட்ட இயந்திரங்கள் நன்றாக வேலை செய்வதுபோல மூட்டுக்கள் நன்றாக செயல்பட இந்த அமிலம் உதவுகிறது. குருத்தெலும்பு மற்றும் எலும்புகளுக்கு இடையேயான உராய்வைக் குறைத்து, மூட்டு வலியை குறைக்க உதவுகிறது. மேலும் இது அதிர்ச்சிகள் மற்றும் அழுத்தங்களை உறிஞ்சி மூட்டுகளுக்கு கூடுதல் குஷனிங் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற நிலைமைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவுவதால் மூட்டுகளின் இயக்கம் மேம்படுகிறது.
ஈரப்பதமுள்ள கண்கள்: நமது கண்கள் ஈரப்பதமாக இருப்பதற்கு இந்த அமிலம்தான் காரணம். இது கண்ணீர் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. ஈரப்பதத்தை தக்கவைத்து வீக்கத்தை குறைப்பதன் மூலம் கண்களில் ஏற்படும் காயம் விரைவில் குணமாக உதவுகிறது.
பல், வாய் ஆரோக்கியம்: நமது பற்களின் உணர்திறனை குறைக்கவும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தலை முடியின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் வலிமையை மேம்படுத்த உதவுகிறது. மேலும். இந்த அமிலம் முடி மற்றும் நகத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அமிலத்தை செயற்கையாக உருவாக்க முடியும். நொதித்தல் மூலம் பாக்டீரியா அல்லது ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர்களை பயன்படுத்தி இதை உருவாக்கலாம். முகத்திற்கு போடும் கிரீம்கள், மாய்ஸரைசிங் லோஷன்கள், கண்களுக்கு போடும் சொட்டு மருந்துகள் போன்றவை தயாரிக்க இது உதவுகிறது. ஒப்பனை சிகிச்சைப் பொருட்கள், சருமப் பராமரிப்பு பொருட்கள், கிரீம்கள் சீரங்கள், ஷாம்புகள், ஜெல், களிம்புகள், நாசிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் ஸ்பிரேக்கள் போன்றவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது. இது தூள் வடிவத்திலும் கிடைக்கிறது. இதை தண்ணீரில் கலந்து சருமத்தில் தடவக்கூடிய அமில சீரகமாகப் பயன்படுத்தலாம்.
கடும் குளிரும் பனியும் நிலவும் காலகட்டத்தில் கூட நமது சருமத்தை முற்றிலும் சுருங்கிப் போகாமல், ஈரப்பதத்தை தக்கவைக்கும். நமக்கு வயதாகும்போது, ஹைலூரோனிக் அமிலத்தின் இயற்கையான சுரப்பும் உற்பத்தியும் குறைகிறது. அதனால்தான் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு நெகிழ்ச்சித் தன்மை குறைந்து வயதான தோற்றம் ஏற்படுகிறது.