உண்ணும் உணவு மற்றும் சாப்பிடும் முறை குறித்து சாஸ்திரங்கள் கூறுவதென்ன?

உணவு உண்ணும் சிறுவர்கள்
உணவு உண்ணும் சிறுவர்கள்

நோய் நொடியில்லாமல் நீண்ட காலம் வாழ சந்தியா காலம், விடியற்காலை, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையுமே உண்ணக் கூடாது. தாமரை இலை தவிர வேறு எந்த இலையின் பின்புறத்திலும் உணவை வைத்து உட்கொள்ள கூடாது. ஈரம் மற்றும் ஒற்றை ஆடையுடன் சாப்பிடக் கூடாது.

சாப்பிடும் முன் கை கழுவினால் மட்டும் போதாது காலையும் கழுவ வேண்டும். இதனால் சாப்பிடும்போது குறை சொல்லத் தோன்றாது. ஆயுளும் கூடும். கையை தரையில் ஊன்றியபடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் சத்து விரைவில் உடலில் சேரும்.

பாதி சாப்பாடு, கால் பங்கு தண்ணீர் என்பதே சரியான உணவு விகிதம். மீதியை காற்றுக்காக விட்டு விட வேண்டும். வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பிறகு குளிக்கக் கூடாது. குளித்து விட்டு சாப்பிடுவதுதான் நல்லது. நாம் சாப்பிடும்போது விளக்கு அணைந்தால் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். மீண்டும் வெளிச்சம் வந்த பிறகே சாப்பிட வேண்டும்.

பழம், பட்சணங்களை முதலில் குழந்தைகளுக்கும் அடுத்து பெரியவர்களுக்கும் பரிமாற வேண்டும். மனைவி சாப்பிடும்போது அதை கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இவற்றை கடைபிடித்தால் நலமுடன் நீண்ட காலம் வாழலாம் என்கிறது, ‘தர்ம சாரம்’ நூல்.

சாப்பிடும்போது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அறிவு பெருகும், ஆயுள் விருத்தியடையும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும். தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட புகழ் கிடைக்கும். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுகிறவர் நியாயத்துக்குக்காகப் போராடுவர் என்கிறது சாஸ்திரம்.

ஒருவர் சாப்பிடும்போது உப்பை நேரடியாக இலையிலோ அல்லது தட்டிலோ போடக்கூடாது. ஆனால், பாயசம், எண்ணெய் போன்றவற்றை நேரடியாக தட்டிலோ, இலையிலோ இடலாம்.

மண் பானை சோறு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆனால், மண் பாத்திரம் மற்றும் இரும்பு பாத்திரத்தில் உணவை வைத்து சாப்பிடக் கூடாது. மேலும், சாப்பிடும் தட்டை தானே கழுவ வேண்டும் என்று அக்னி புராணம் கூறுகிறது.

நாம் மற்றவர்களுக்கு உணவு பரிமாறும்போது கையால் எடுத்து வைக்கக் கூடாது. அகப்பையினால்தான் உணவு படைக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல், நெய், உப்பு ஆகியவற்றையும் கையால் படைக்கக் கூடாது.

விருந்து கொடுப்பது புண்ணியம். அதுவும் ஏழை எளிய மக்களுக்கு அன்னமிடுவது மகத்தான நன்மை பயக்கும். விருந்து கொடுக்கும்போது அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையை அவர்களை எடுக்க விடக்கூடாது. நாம்தான் எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் விருந்தின் முழு பலன் கிடைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

விருந்துக்கு செல்பவர்கள் நாள் பார்த்துச் செல்வது நல்லது. அப்படிச் சென்றால்தான் அங்கு விருந்து சிறப்பாக அமையும். மேலும், அவ்விருந்து மருந்தாகாது தொடரும் நல் விருந்தாக அமையும். பொதுவாக, திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமை விருந்து உண்பதற்கு உகந்த நாட்களாகும்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் சாத்துவது ஏன் தெரியுமா?
உணவு உண்ணும் சிறுவர்கள்

வயதானவர்கள், கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும்போது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை அன்னதோஷம் பாதிக்கிறது. பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களையும், வீட்டிலோ, பந்தியிலோ சாப்பிட அமர்ந்தவர்களைக் கோபித்துக்கொண்டு அவர்களை எழுப்பி உணவை சாப்பிட விடாமல் விரட்டி அடிப்பவர்களையும் அன்னதோஷம் பாதிக்கும்.

தனது தேவைக்கும் அதிகமாக உணவைத் தயார் செய்து வீணடிப்பவர்களை, தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களை மற்றும் பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களுக்கும் அன்னதோஷம் ஏற்படும். சாப்பிடும் பந்தியில் நமக்கு வேண்டியவர்களுக்குத் தேவையான உணவை அளித்து, மற்றவர்களைக் கவனிக்காமல் இருப்பதும் கூட அன்னதோஷம்தான். அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும் என்கிறது சாஸ்திரம்.

யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் உணவு உண்ணுதல் கூடாது. இறந்தவர்களின் முகத்தைப் பார்த்து விட்டு உடனே திரும்பி விட வேண்டும். அங்கு தங்கி உணவு உண்ணுதல் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com