
நீங்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வாங்கிக் குடிக்கும்போது அதன் மீது காலாவதி தேதி குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது எதற்கான காலாவதி தேதி தெரியுமா?
தண்ணீர் என்பது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருள். அது தூய்மையாக இருக்கும் வரை கெட்டுப் போகாது. ஆனால், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீருக்கு நாம் சில காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். தண்ணீர் பாட்டில்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தண்ணீரில் கலந்து அதன் தரத்தை பாதிக்கலாம்.
பிளாஸ்டிக் பாட்டில்களை சூரிய ஒளி, வெப்பம் போன்ற சூழல்களில் வைக்கும்போது, அவை பிளாஸ்டிக்கில் சில மாற்றங்களை ஏற்படுத்தி தண்ணீரின் சுவை மற்றும் தரத்தை முற்றிலுமாக மாற்றிவிடும். தண்ணீர் பாட்டிலை சரியாக மூடாவிட்டால், வெளிப்புறத்தில் உள்ள பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து அதை மாசுபடுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
தண்ணீர் பாட்டில்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலாவதி தேதி, தண்ணீர் கெட்டுப் போகும் காலம் அல்ல. அது பிளாஸ்டிக் பாட்டிலின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. அதாவது எவ்வளவு காலத்திற்குள் பிளாஸ்டிக் பாட்டிலின் ரசாயனம் தண்ணீரில் கலந்து அதன் தரத்தை பாதிக்க வாய்ப்புகள் உள்ளது என்பதைக் குறிக்கும் தேதிதான் அது.
காலாவதி தேதிக்குப் பிறகு பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது முற்றிலும் ஆரோக்கியமற்றது. இருப்பினும் அந்த பாட்டில் சேமிக்கப்பட்ட இடம், சூரிய ஒளி, வெப்பம் போன்ற சூழல்களைப் பொறுத்து நாம் அதைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை நிர்ணயிக்கலாம். தண்ணீரின் நிறம் மாறி இருந்தாலோ அல்லது மோசமான வாசனை வந்தாலோ அதை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் கெட்டுப் போனால், அதன் சுவை முற்றிலுமாக மாறி இருக்கும். அதுபோன்ற சூழலில் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைத் தவிர்ப்பது நல்லது.
வாட்டர் பாட்டில்களை வாங்கும் போது எப்போதும் நன்கு அறியப்பட்ட பிராண்ட் தண்ணீரை தேர்வு செய்து வாங்கவும். பாட்டில் சேதமடைந்து இருந்தாலோ அல்லது வீங்கி இருந்தாலோ அதை வாங்க வேண்டாம். தண்ணீர் பாட்டில் வாங்குவதற்கு முன் அதன் காலாவதி தேதியை பார்த்துவிட்டு மேலும், விற்பனையாளர்கள் சூரிய ஒளி படாத இடத்தில் தண்ணீர் பாட்டில்களை சேமித்து வைத்திருக்கிறார்களா என்பதையும் பார்த்து வாங்குவது நல்லது.
தண்ணீர் பாட்டிலின் காலாவதி தேதி குறித்து தெளிவான புரிதல் நமக்கு இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், இது நம் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, அது பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.