நாம் பேசும்போது அந்தப் பேச்சை பிறர் அலட்சியப்படுத்தாமல், நாம் சொல்வதைக் கேட்க சில விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் போதும். நமது பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல் பிறர் அதைக் கேட்பார்கள். நாம் பேசும் பேச்சை பிறர் மதித்துக் கேட்க சில விஷயங்களை இந்தப் பதிவில் நாம் காண்போம்.
தன்னடக்கத்துடன் இருப்பது: பிறரிடம் பேசும்பொழுது தன்னடக்கத்துடன் பேசுவது நல்லது. நமக்குதான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ரொம்பவும் டம்பமாக பேசுபவர்களை, ‘தலைகனம் பிடித்தவன்’ என்று வேறு பட்டம் கட்டி விடுவார்கள்.
இடத்திற்கு தகுந்தாற்போல் பேசுவது: பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்பதும், இடத்திற்கு தகுந்தாற்போல் பேசுவதும் அவசியம். யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்பதில் கவனம் தேவை. நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பேசுவதுதான் சிறப்பு.
ரத்ன சுருக்கமாகப் பேசுவது: வளவளவென பேசாமல் பேச வந்த விஷயத்தை ரத்ன சுருக்கமாகப் பேசுவது நல்லது. அப்போதுதான் கேட்பவர்கள் ஆர்வமுடன் நாம் என்ன பேசுகிறோம் என்பதை காது கொடுத்துக் கேட்பார்கள். அத்துடன் பேச ஆரம்பிக்கும்பொழுது பிறரை யோசிக்க வைக்கும் கேள்விகளையும் கேட்பது நம் பேச்சை ஆர்வமாகக் கேட்கத் தூண்டும்.
எளிமையாகப் பேசுவது: தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் எதைச் சொல்ல வருகிறோமோ, அந்த விஷயத்திற்கு நேரடியாக வந்துவிட வேண்டும். அதற்காக வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். நாசுக்காக, அதேசமயம் தீர்மானமாக நாம் எதைச் சொல்ல வருகிறோமோ அந்த விஷயத்திற்கு நேரிடையாக வந்து விட வேண்டும். நம் பேச்சு மிகவும் எளிமையாக அடுத்தவருக்குப் புரியும்படியும் இருக்க வேண்டும். ‘இவர் என்ன சொல்ல வருகிறார்? புரியவில்லையே? என்று நம் பேச்சைக் கேட்பவர்கள் குழம்பிக் கொள்ளாமல் இருக்க நம் பேச்சில் தெளிவு அவசியம்.
பேச்சில் மரியாதை: நாம் யாருடன் பேசுகிறோமோ அவர்களுக்குத் தகுந்த மரியாதையை கொடுக்க வேண்டும். ஒருமையில் அழைப்பதோ மரியாதை இல்லாத வார்த்தைகளை உபயோகிப்பதோ கூடாது. பேச்சில் கனிவும், பணிவும், மரியாதையும் இருந்தால் நம் வார்த்தை மற்றவர்களிடம் எடுபடும்.
நேர்கொண்ட பார்வை: நாம் ஒருவரிடம் பேசும்பொழுது கண்ணோடு கண் பார்த்து பேச வேண்டும். அத்துடன் முகத்தில் சிறு புன்னகையையும் தவழ விட்டுக் கொண்டு பேச நம் பேச்சுக்கு மரியாதை இருக்கும். ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் கண்களைப் பார்த்து பேசும்பொழுது எதிரில் நிற்பவரின் உணர்வுகளை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். சிரித்த முகத்துடன் பேசுவதும் நம் பேச்சுக்கு மற்றவர் செவி சாய்க்க உதவும். நம் உடல் மொழியும் முக்கியமானது. நிமிர்ந்து நின்று, நேர்கொண்ட பார்வை பார்த்து, தயக்கமில்லாமல் தன்னம்பிக்கையுடன் பேச வேண்டும்.
பேச்சில் சுவாரஸ்யம்: நம் பேச்சு எதிரில் இருப்பவர்களுக்கு சலிப்பை உண்டாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் பேசும்பொழுது எதிரில் இருக்கும் நபருக்கு நாம் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும் வகையில் பேச வேண்டும். அத்துடன் நம் பேச்சில் சுவாரசியமும் கூடுதலாக இருக்க வேண்டும். அடுத்து, ‘இவர் என்ன சொல்லப்போகிறார்?’ என்று ஆர்வமுடன் கேட்கக்கூடிய மனநிலையையும் அவர்களுக்கு நம் உற்சாகப் பேச்சு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.