வைட்டமின் டி பெரும்பாலும் 'சூரிய ஒளி வைட்டமின்' என்று அழைக்கப்படுகிறது. சூரிய ஒளி வைட்டமின் Dயின் முக்கிய ஆதாரமாகும். இது நம் உடலில் ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் ஆகிய இரண்டிலும் செயல்படுகிறது. எலும்புகள் மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி உடலில் அவசியம். நோயெதிர்ப்பு செயல்பாடு, தசை ஆரோக்கியம், வீக்கம் மற்றும் மனநிலையை பராமரிப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது.
எலும்புகளில் வலி, குறிப்பாக கழுத்து, இடுப்பு, முழங்கால் மற்றும் தசை பலவீனம் இவையெல்லாம் இருந்தால் அதை ‘ஓஸ்டோமலாசியா’ (osteomalacia) எனும் உடல் நலக் குறைவு என்கிறார்கள். இது வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் நோய். இதனை வராமல் தடுக்க தினமும் 100 மி.கி. வைட்டமின் டி தேவை. இது பாலில் உள்ளது. சூரிய ஒளி உடலில் அரை மணி நேரம் படுவதால் உருவாகும்.என்கிறார்கள் அமெரிக்க ஹென்றி ஃபோர்ட் மருத்துவ அமைப்பு எலும்பு சிகிச்சை பிரிவு நிபுணர்கள்.
இந்தியப் பெண்களின் உடல் பருமன் பிரச்னைகள் அதிகரித்து வருவதற்குக் காரணம் வைட்டமின் டி பற்றாக்குறையே என்பதை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பெண்கள் வெளியே வருவதில் காட்டும் ஆர்வமின்மைதான் இதற்கு முக்கியக் காரணம். இதனைத் தவிர்க்க தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் காலை 10 மணிக்குள் வெயிலில் நின்றாலே போதும். உடல் பருமன் பிரச்னைகள் மட்டுமல்ல, எலும்பு மெலிவு, ஆஸ்துமா, முடக்கு வாதம் போன்ற பிரச்னைகளிலிருந்தும் பெண்கள் தப்பலாம் என்கிறார்கள்.
வைட்டமின் டியை நேரடியாக சூரிய ஒளி மூலம் அல்லது உணவுகள் அல்லது மாத்திரைகள் வடிவிலோ தவறாமல் எடுத்துக் கொள்கின்றவர்களுக்கு சளி, புளு காய்ச்சல் தாக்கும் அபாயம் குறைவு. மேலும், அது நம்மை நுரையீரல் சம்பந்தமான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது என்கிறார்கள் பாரீஸ் நகரில் உள்ள குயின்ஸ் மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். வைட்டமின் டி குறைவாகக் கிடைக்கும் மழைக்காலங்களில் மற்றும் குளிர்காலத்தில்தான் நுரையீரல் சம்பந்தமான நோய்களும், புளூ காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் வருகின்றன என்பதற்கு இதுவே உதாரணம் என்கிறார்கள். நாள்பட்ட ஆஸ்துமா மற்றும் நிமோனியா போன்றவற்றிற்கும் வைட்டமின் டி சத்து நல்ல நிவாரணம் தருகிறது.
வாழ்க்கையில் கவலையைப் போக்கி நம்பிக்கையை அதிகரிக்க வைட்டமின் டி சத்து உதவியாக இருக்கிறது. வயதானவர்கள் தனிமையின் காரணமாக மிகவும் கவலையுடன் இருப்பார்கள். தற்காலத்தில் இளைஞர்களும் பல்வேறு பிரச்னைகளால் கவலையுடன் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை வேண்டா வெறுப்புடன் கடப்பவர்கள் என இவர்களை ஆய்வு செய்ததில் அவர்களின் இரத்தத்தில் வைட்டமின் டி சத்து மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள சொன்னபோது அவர்களுக்கு வாழ்கையில் நம்பிக்கை வந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாதிரி நபர்கள் தினமும் 20 நிமிடங்கள் நேரடி சூரிய ஒளியில் இருந்தபோது அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வைட்டமின் டி நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது, ஈறு நோய் அல்லது புண்கள் போன்ற வாய்வழி தொற்றுகளை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு பல்லுறுப்பு நோய் அபாயத்தைக் குறைக்கிறது. வைட்டமின் டி குறைபாடு உடைய தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உயர் இரத்த அழுத்தக் குறைபாடுடன் பிறப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
சூரிய ஒளி அல்லது உணவில் இருந்து போதுமான வைட்டமின் டி கிடைக்காதபோது மட்டுமே வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை நம்பலாம். பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, காளான், டூனா மீன், சோயா பால் போன்றவற்றிலும் வைட்டமின் டி உள்ளது.
இரண்டு வகையான வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் உள்ளன. வைட்டமின் டி2 (எர்கோகால்சிஃபெரால்) மற்றும் வைட்டமின் டி3 (கோல்கால்சிஃபெரால்). மருத்துவரின் பரிந்துரைப்படி வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ளலாம். பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 600 முதல் 800 IU (சர்வதேச அலகுகள்) வைட்டமின் டி தேவைப்படுகிறது. வயதானவர்களில் இது 800 முதல் 1000 IU ஆகவும், குழந்தைகளில் 400 முதல் 600 IU ஆகவும் உள்ளது.