
உலகளவில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்னைதான் தொப்பை. இந்த தொப்பை வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்புகள் தேங்குவதால் வரக்கூடியது. இப்படிப்பட்ட தொப்பையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது செயல் அல்ல, சற்று சவாலான காரியம்தான்.
தொப்பையைக் குறைக்க சீரான உணவு முறை, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை மிகவும் முக்கியம். அவ்வாறானவர்கள் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகள், அதிக அளவு தண்ணீர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுவது நல்லது. இனிப்புகளைத் தவிர்ப்பது நல்லது. குறைந்த கலோரிகள் அடங்கிய பீன்ஸ், முட்டை, நட்ஸ் போன்ற புரத உணவுகள் நம் உடலை பருமனாக்குவதில்லை. எனவே, இவற்றை அவர்கள் அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்ளலாம். புரோட்டீனை போதுமான அளவில் எடுப்பதன் மூலம், தசைகள் வளர்ச்சி அடையும், மெட்டபாலிசம் மேம்படும் மற்றும் நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வை அளிக்கும்.
நடைப்பயிற்சி, கார்டியோ உடற்பயிற்சி, வலிமை பயிற்சி ஆகியவை உடல் பருமனையும் தொப்பையும் குறைக்கும். தினமும் குறைந்தது 3 முதல் 4 கிலோ மீட்டர் வரை நடப்பது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும். வாரத்திற்கு குறைந்தது 3 முறை கார்டியோ உடற்பயிற்சிகளையும் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வலிமை பயிற்சியையும் அவர்கள் செய்வதும் நல்லது.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 10,000 அடிகள் நடக்க வேண்டும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம், கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். அதனால் உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியமும் மேம்படும். வாரத்திற்கு 3 முறை அவசியம் ஜிம் செல்ல வேண்டும். ஜிம்மில் வழக்கமாக வலிமை பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், அது மெலிந்த தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது. இது விரைவான மெட்டபாலிசம் மற்றும் கொழுப்பு இழப்புக்கு அவசியமான ஒன்று ஆகும்.
நம் மன அழுத்தம் தொப்பை கொழுப்பிற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க அன்றாடம் காலையும், மாலையும் தியானம் செய்யலாம். இரவில் போதுமான அளவு தூங்குவதும் தொப்பையைக் குறைக்க உதவும்.
கைப்பேசிகள், டேப்லெட்டுகள், கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் வெளியிடும் நீல ஒளி மெலடோனின் சுரப்பை அடக்குகிறது. இதனால் தூங்குவது கடினமாகிறது. படுக்கைக்கு முன் செய்யப்படும் லேசான பயிற்சிகள் வயிற்றுத் தசைகளை செயல்படுத்துகின்றன. அதிகப்படியான தொப்பை கொழுப்பை எரிக்கின்றன. தூங்குவதற்கு முன்பு சூடான நீரில் குளிப்பதால் உடல் வெப்பநிலை, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, வியர்வை சுரக்கிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. கூடுதலாக, தசைகள் தளர்ந்து ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
பக்கவாட்டில் தூங்குவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. முதுகு வலியையும் போக்குகிறது. கால்கள், இடுப்பு மற்றும் தொடைகளில் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கிறது. இடது பக்கமாக தூங்குவது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொழுப்பு சேருவதையும் தடுக்கும். இருப்பினும், உடல் சோர்வடைவதைத் தடுக்க, அவ்வப்போது தூங்கும் நிலைகளை மாற்றுவது நல்லது. குளிர்ந்த படுக்கையறை வெப்பநிலையை பராமரிப்பது உடலின் கொழுப்பை எரிக்கும் வழிமுறைகளை செயல்படுத்தி, மைய வெப்பநிலையை நிலைப்படுத்துகிறது.
எலுமிச்சை நீர் உடலில் குவிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. திராட்சை சாறு உடலில் உள்ள கொழுப்பு எரிவதை எளிதாக்குகிறது. ஆப்பிள் சாறு, இஞ்சி தேநீர் அல்லது ஸ்ட்ராபெரி சாறு ஆகியவையும் உடலில் கொழுப்பு சேருவதை அனுமதிப்பதில்லை. தொப்பையைக் குறைப்பது என்பது நீண்டகால செயல்முறையாகும். இதை அடைய பொறுமையும், விடாமுயற்சியும் அதிகம் தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டால் தொப்பையைக் குறைப்பது சாத்தியமே.