
‘மகிழ்ச்சியை வெளியில் தேடக்கூடாது, அது நமக்குள்ளேதான் இருக்கிற’தென்று சொல்லுவார்கள். இது ஏதோ தத்துவார்த்தமான கருத்து போல் தோன்றினாலும், உண்மையில் இது அறிவியல்பூர்வமான கருத்தாகும். உணர்வுகளுக்கான தூண்டல்தான் வெளியிலிருந்து கிடைக்கிறது. உணர்வது முழுக்க முழுக்க மூளையின் செயல்பாடாகும். ஹார்மோன்களின் ராஜ்ஜியம் நடக்கும் மூளையில் நாம் மகிழ்ச்சியாய் உணரத் தேவையான நான்கு ஹார்மோன்கள் பற்றியும் என்ன செய்தால் அவை சுரக்கும் என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. டோபமைன்: பிரபலமான பெயர்தான் இது. இந்த மகிழ்ச்சி ஹார்மோன் எளிதாகச் சுரந்துவிடும். இலக்கினை அடையும்போது, வெற்றியின்போது, புதிதாக ஒன்றைக் கற்கும்போது, பிடித்ததைச் செய்யும்போது, படைப்பாற்றல் செயல்களைச் செய்யும்போது (பாட்டு, எழுத்து, ஓவியம், இசைக்கருவி வாசித்தல் போன்றவை) டோபமைன் ஹார்மோனை மூளை வெளிவிடும். அதனால் நாம் மகிழ்ச்சியாக உணர்வோம்.
இந்த டோபமைன் எளிதாகச் சுரந்துவிடுமென்று பார்த்தோமல்லவா? எளிதாகக் கிடைக்கும் எதுவும் அடிமையாக்க வல்லது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். வீடியோ கேம் அடிமை, தீய பழக்கங்களுக்கு அடிமை இதெல்லாம் கூட டோபமைன் கைவரிசைதான். எதைச் செய்து டோபமைன் பெறப் போகிறோம் என்று கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டியது நம் பொறுப்பு.
2. ஆக்ஸிடோஸின்: டோபமைன் அளவுக்கு இது எளிதில் சுரந்துவிடாது. உடல் ரீதியாகத் தொடர்பு கொள்ளும்போது, அன்பானத் தொடுதல், கைகோர்த்தல், அணைத்தல், முத்தமிடல் இப்படியான செயல்பாடுகளின்போது ஆக்ஸிடோஸின் வெளிவரும். இதை மகிழ்ச்சி ஹார்மோன் என்று சொல்வதை விட ‘காதல்’ ஹார்மோன் என்று சொல்வது சாலப் பொருந்தும்.
அர்த்தமுள்ள உரையாடல், அனுபவப் பகிர்வுகளைக் கேட்டல், செல்லப் பிராணிகளோடு கொஞ்சுதல், அன்பானவர்களோடு அல்லது நண்பர்களோடு நேரம் செலவிடுதல் ஆகிய செயல்பாடுகளும் ஆக்ஸிடோஸினை அள்ளித்தரும். கருணையோடு பிறருக்கு நாம் செய்யும் சிறு உதவி, சிந்தித்து நாம் அளிக்கும் பரிசு, பெருந்தன்மையோடு நாம் செய்யும் சிறிய செயல் கூட நமது மூளையில் ஆக்ஸிடோஸின் சுரப்பதற்குக் காரணமாக அமையும்.
3. செரோடோனின்: சூரியன் நம் மேல் படும்படி இருக்கும்போது நம் முளையில் செரோடோனின் ஹார்மோன் சுரந்து நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்கும். நம்மை போன்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கு இந்த ஹார்மோனுக்குப் பஞ்சமே ஏற்படாது. ஆனால், குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு, வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கும் என்ற சூழ்நிலையில் செரோடோனின் கிடைப்பது சவால்தான். தியானம் செய்வது, ஆரோக்கியமான உணவினை எடுத்துக்கொள்வது ஆகியவையும் செரோடோனின் சுரப்பியைத் தூண்டிவிடும். இதை மகிழ்ச்சி ஹார்மோன் என்பதை விட, அமைதி ஹார்மோன் என்று சொல்வது சரியாக இருக்கும்.
4. எண்டார்ஃபின்: நன்றாக உடற்பயிற்சி செய்தவுடன், விளையாட்டு, நீச்சல் போன்ற கடினமான உடலியல் செயல்பாட்டுக்குப் பின், எண்டார்ஃபின் சுரப்பு நிகழும். எனில் இது எளிதாகக் கிடைக்கக்கூடியது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். மனம்விட்டுச் சிரித்தல், காரம் மசாலா உணவு சாப்பிடுதல், மஸாஜ் செய்து கொள்ளுதல் கூட எண்டார்ஃபினை வெளியிட்டு நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்கும்.
எனவே, மேற்கண்ட நான்கு வகை மகிழ்ச்சி ஹார்மோன்களையும் பெறுவதற்கு, அந்தந்த செயல்பாடுகளைச் சுழற்சி முறையில் செய்துகொண்டே இருப்போம். நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வோம்.