
நண்டு மனநிலை பொதுவாக ஒரு அழிவுகரமான மனநிலையாகும். பெரும்பாலும் பொறாமை, போட்டித் தன்மை, பயம் காரணமாக பிறர் வெற்றி பெறுவதை அல்லது முன்னேறுவதைத் தடுக்க முயலும் மக்களின் குணத்தைக் குறிக்கிறது.
நண்டு மனநிலை என்றால் என்ன?
ஒரு வாளியில் சில நண்டுகள் இருக்கின்றன. ஒரு நண்டு அந்த வாளியில் இருந்து தப்பித்து வெளியேற முயற்சி செய்யும்போது அதை மேலே ஏறவிடாமல் பிற நண்டுகள் அதை கீழே இழுக்கும். தன்னைப் போலவே அந்த நண்டும் வாளிக்குள்ளேயே இருந்து காலத்தை கழிக்க வேண்டும் என அவை நினைக்கும். இதனால் எல்லா நண்டுகளும் துன்பப்படும்.
மனிதர்களின் நண்டு மனப்பான்மை:
ஒரு மனிதன் கஷ்டப்பட்டு முயற்சித்து வெற்றிபெற நினைக்கும்போது பிற மனிதர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு எதிர்மறையாகப் பேசி அவனது முயற்சிகளைத் தடுப்பது மனிதர்களின் நண்டு மனப்பான்மை என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு ஊக்கமின்மை, எதிர்மறை விமர்சனம், வதந்தி பரப்புதல், முயற்சிகளை நாசமாக்கும் செயல்கள் என அவர்களுக்கு தீமை செய்வார்கள். இந்த அணுகு முறையால் அந்த நபர் தன் முயற்சிகளை கைவிட்டு விட்டு அவர்களைப் போலவே வெட்டியாக காலம் கழிப்பார். இதைத் தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
நண்டு மனநிலைக்கான உளவியல் காரணங்கள்:
பிறர் கஷ்டப்பட்டு முயற்சி செய்து வாழ்வில் ஏதாவது சாதிக்கும் போது அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் மேல் பொறாமைப்படுகிறார்கள். தங்களால் அதுபோல சாதனை செய்ய முடியவில்லை என்கிற உணர்வு அவர்கள் மேல் பொறாமைப்பட வைக்கிறது.
அவருடைய வெற்றியை தமக்கு கிடைத்த இழப்பாகக் கருதுகிறார்கள். 'அவர் மட்டும் வெற்றி பெற்றுவிட்டார். நான் அதனால் எதையோ இழந்துவிட்டேன்' என்று கருதுகிறார்கள். உண்மையில் அவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்காமலேயே வெற்றி பெற்ற நபரை பார்த்துப் பொறாமைப்பட்டு அவர்களது முயற்சிகளை முறியடிப்பதில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
ஒப்பீடு அவர்கள் வெற்றி பெற்ற நபர்களுடன் நபருடன் தங்களை ஒப்பிட்டு பார்த்து அவர்களது முன்னேற்றத்தினால் தன்னுடைய சொந்த மதிப்பும் அந்தஸ்தும் குறையும் என்று அஞ்சுகிறார்கள்.
அலுவலகத்தில் ஒரு குழுவில் உள்ள உறுப்பினர் புதிய யோசனையை சொல்கிறார். அந்த யோசனை சிறந்ததாகவே இருந்தாலும் இதை நடை முறைப்படுத்தினால் தன்னுடைய மதிப்பு குறைந்து விடும் என்று நினைக்கும் பிற ஊழியர்கள் அவர்களை மட்டம் தட்டி அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஒருவர் ஆரோக்கியமான உடலமைப்பை பெறவேண்டும் என்று நினைத்து தினமும் வாக்கிங் போகிறார். கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்கிறார். உடல் எடையைக் குறைத்து பார்ப்பதற்கு சிக் என ஆரோக்கியமாக இருக்கிறார். அவரது குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ 'தேவையில்லாத வேலை செய்கிறாய். தினமும் ஏன் இத்தனை நேரம் செலவு செய்து மெனக்கிடுகிறாய்? நீ என்ன விளையாட்டு வீரனா அல்லது சினிமா நடிகரா? சாதாரணமான மனிதன் தானே? கொஞ்ச நேரம் மட்டும் வாக்கிங் போனால் போதும்' என்று தேவையில்லாத யோசனைகள் கூறி அவர் மனதைக் கலைத்து அவரது ஆரோக்கியத்தைக் குலைக்கும் முயற்சியில் இறங்குவார்கள்.
தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி அவர்களது முயற்சிகளைக் குலைத்து வெற்றி அடையவிடாமல் தடுப்பார்கள். அவரால் அதைப் பெற முடியாது என்று அவர்களை நம்ப வைப்பார்கள். இப்படி பொறாமையை வளர்ப்பதன் மூலம் உறவுகளை சேதப்படுத்தி அதில் ஒரு சந்தோஷத்தையும் அடைவார்கள்.
நண்டு மனநிலை என்பது தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் அழிக்கும் மனநிலையாகும். தானும் வெற்றி பெறமுடியாமல் தன்னை சுற்றி உளளவர்களையும் முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு ஆரோக்கியமற்ற சூழலை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இந்த மனநிலையை கட்டாயம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தனிப்பட்ட வளர்ச்சி இருக்காது. நட்பு வட்டத்தையும் உறவுகளையும் இது பாதிக்கும்.