
மனித வாழ்வில் எத்தனையோ சொந்த பந்தங்கள் வரலாம், போகலாம். அவை சில காலம் நீடித்து வளரும். சில சமயங்களில் பிரிவு ஏற்படும். பின்னர் மனமாச்சர்யங்களைக் கலைந்துவிட்டு பந்தங்கள் தொடர்வதும் உண்டு. அவரவர் விதிப்படியே கட்டத்தின் அடிப்படையிலேயே நடப்பதும் உண்டு. ஆனால், நீடித்து இருக்கும் சொந்தம் ஒன்று என்றால் அதுதான் திருமண பந்தம். அதில் ஆண், பெண் ஜாதகப் பொருத்தம் பாா்ப்பதும் நடைமுறை.
பொருத்தம் பாா்ப்பது காலம் காலமாக தொன்று தொட்டு வரும் நடைமுறையாகும்! ‘காதல் கல்யாணம் செய்து கொண்டோம், நன்றாகத்தான் வாழ்கிறோம், பொருத்தமா பாா்த்தோம்?’ என சொல்பவர்களும் உண்டு. அதே நேரம் கருத்து வேறுபாடு காரணமாய் பிாிந்தவர்கள் ஒன்றைச் சொல்வாா்கள். ‘பத்து பொருத்தம் பாா்த்து திருமணம் செய்து வைத்தீா்கள். இங்கே என்ன பொருத்தம் வந்து வாழ்கிறது’ என சலிப்புடன் வாதம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள். ‘அது விதிவிட்ட வழி’ என சொல்லி ஆறுதல் அடைபவர்களும் உண்டல்லவா?
அனைத்திற்கும் மனம் ஒன்றிணைந்தாலே போதும். அதோடு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சரியான புாிதல் இருப்பது, ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவதே நல்லது. நாம் இறை வழிபாட்டோடு மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்து வந்தாலே எந்தவிதமான சங்கடங்களையும் சமாளிக்கலாம். அதற்காக பொருத்தம் பாா்க்காமலும் செய்வது அவ்வளவு உசிதமல்ல. அதேநேரம், ‘பொருத்தம் இல்லாமல் செய்தது தவறு. அதனால்தான் வாழ்க்கை சரிவர அமையவில்லை’ என புலம்பினாலும் அதற்கும் அப்பாற்பட்ட சக்தியே மனப்பொருத்தமாகும்.
‘ஆயிரம் பொய்யை சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து, பாத்திரம் அறிந்து பிச்சை போடு, கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு அல்லது பெண்ணை எடு’ என்றெல்லாம் சொல்வதும் பழையகால நடைமுறைதான்.
சரி, விஷயத்திற்கு வரலாம். ‘திருமணம் செய்ய பத்து பொருத்தமும் பொருந்தியுள்ளது’ என டயலாக் சொல்வாா்கள். அவை என்ன? அது குறித்த ஒரு மேலோட்டமான பாா்வை. இதில் பெண் மற்றும் பையன் ஜாதகத்தை வைத்துதான் பொருத்தம் பாா்க்க முடியும் என்பதே சரியானது.
திருமணப் பொருத்தம்:
1. தினப் பொருத்தம் (ஆண், பெண் நட்சத்திரம் வைத்துப் பாா்ப்பது)
2. கணப் பொருத்தம் (தேவகணம், மனிதகணம், ராக்ஷஸகணம்)
3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் சம்பத்)
4. ஸ்திரி தீா்க்கம் பொருத்தம் (தீா்க்கசுமங்கலி)
5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)
6. ராசிப்பொருத்தம்
7. ராசி அதிபதி பொருத்தம்
8. வசியப் பொருத்தம்
9. ரஜ்ஜூப் பொருத்தம் (மிக மிக முக்கியமானது)
10. வேதைப்பொருத்தம் (துன்பம் இல்லை)
ஆக, இத்தனை பொருத்தங்களையும் சரிபாா்க்க இருவர் ஜாதகங்களையும் வைத்துத்தான் பொருத்தம் சொல்ல முடியும். எத்தனை பொருத்தம் என்பதை தொிந்துகொள்ளவே இந்தப் பதிவு.