
கோபம் என்பது நம் அனைவருக்குமே இயற்கையாகவே இருக்கும் ஒரு உணர்வு. ஆனால், கோபத்திற்கான காரணம் ஒரு நபருக்கு நபர் வேறுபடுகிறது. இருந்தாலும் சிலருக்கு கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்து சூழ்நிலைகளை அமைதியாகக் கையாளும் திறமை இருக்கிறது. ஒரு சிலருக்கு சமாளிக்க முடியாத அளவுக்கும் இருக்கின்றன.
நாம் எல்லோருக்கும் கோபம் கண்டிப்பாக எதாவது ஒரு சூழ்நிலையில் வரும். வெவ்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக கோபத்தை வெளிப்படுத்த முடியும் என்பதால், கோபத்தை வெளிப்படுத்துவதில் பல வடிவங்கள் உள்ளன. சிலர் கோபத்தை தனிமையில் வெளிப்படுத்த நினைப்பர். சிலர் தனது கோபத்தை அதிகாரத்திலும், உடல் வலிமையிலும் வெளிப்படுத்துவர். அதேபோல, சிலர் மக்களை பயமுறுத்துவதற்காக கோபத்தைக் காட்டுகின்றனர் அல்லது கோபமும் சில நேரங்களில் பயத்தின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.
குறிப்பாக டீனேஜர்களுக்கு இந்த கோபம் மிக அதிகமாக வெளிப்படும். ஏனெனில் அவர்கள் பருவமடைதல் மற்றும் ஹார்மோன்களால் பாதிக்கப்படுகிறார்கள், இது அவர்களின் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
டீனேஜ் பருவத்திற்குள் நுழையும்போது அவர்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். நாம் பெரியவனாகிவிட்டோம், இனி நம்மை யாரும் கட்டுபடுத்த முடியாது என்கிற அசட்டு தைரியம் மனதிற்குள் உருவெடுக்க ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் பெருக்கெடுத்து கோபம் வரத்தூண்டுகிறது. இது சில சமயங்களில் டீனேஜர்களின் கோபத்தையும் மனப்பான்மையையும் பயன்படுத்தி பெற்றோரிடமிருந்து பிரிந்துசெல்ல வழிவகுக்கும்.
டீன் ஏஜ் மூளை இன்னும் வளர்ச்சியடைந்து வருவதால், டீனேஜர்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகலாம் அல்லது நியாயமற்ற முறையில் செயல்படலாம்,
டீனேஜர்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருவதால், பயம், நிச்சயமற்ற தன்மை, மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பதட்டம் கூட ஏற்படக்கூடும் என்பதால், அவர்கள் இயல்பாகவே மனநிலையிலும் நடத்தையிலும் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள்.
டீனேஜர்கள் அடிக்கடி அல்லது கடுமையான கோபத்தை அனுபவிப்பதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
· குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் மோதல்
· சகாக்களின் அழுத்தம்
· பெற்றோரின் விவாகரத்து, தத்தெடுப்பு, பள்ளிகளை மாற்றுதல் போன்ற அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில மாற்றங்கள்
· குறைந்த சுயமரியாதை
· அன்புக்குரியவரின் மரணம்
· இயற்கை பேரழிவு அல்லது விபத்து போன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்
· மனச்சோர்வு , பதட்டம் , ADHD போன்ற கண்டறியப்படாத மனநலப் பிரச்னைகள்
· போதைப்பொருள் துஷ்பிரயோகம். (எ.கா. மது அல்லது போதைப்பொருள்.
அவர்களின் கோபத்தை எவ்வாறு நிர்வகிப்பது?
அவர்கள் எப்போது மிகவும் கோபத்தோடு சூடான தருணத்தில் இருக்கிறார்களோ அப்போது அவர்களுக்கு எடுத்துரைப்பதை தவிர்க்கவும். அவர்களின் கோபத்தை அமைதிப்படுத்த நேரம் கொடுப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம்.
கோபம் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொண்டு அதற்கு பிறகு உங்கள் டீன் ஏஜ் பிள்ளையிடம் கோபத்தை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பது பற்றிப் பேசுங்கள்.
சில நேரங்களில், நீங்கள் அவர்களை சிறப்பாக புரிந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அழுத்தமாக எடுத்து சொல்லுங்கள். அது அவர்களின் கோபத்தை அமைதிப்படுத்த உதவும். அவர்கள் எதாவது கெட்ட வழியில் சென்றால் தனியாக கூப்பிட்டு எடுத்துரைங்கள். எல்லோர் முன்னிலையில் சொல்லும் போது அவர்கள் தங்களின் சுய மதிப்பு குறைந்து விட்டதாக கருதி இன்னும் அதிகமாக கோபப்படுவார்கள்.
டீனேஜில் அவர்கள் சுயமதிப்பை மிகவும் எதிர்பார்ப்பார்கள். அடுத்தவர்கள் அவர்களை பற்றி குறை சொன்னதாக எக்காரணத்தை கொண்டும் சொல்லாதீர்கள், நீங்கள் தானாகவே கேட்பது போல் கேளுங்கள். நீங்கள் அவர்கள் பக்கம் இருப்பதை உங்கள் டீன் ஏஜ் பிள்ளைக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் உங்கள் இருவருக்கும் ஏற்ற ஒரு தீர்வை ஒன்றாகத் தேடுங்கள். ஒரு நணபனைப்போல நீங்களும் அவர்களிடம் உங்களின் பிரச்னையைக் கூறி அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அப்போதுதான் அவர்களும் மனம்விட்டு தனக்கு இருக்கும் பிரச்னையை உங்களிடம் கூறுவார்கள். இதனால் மனதளவில் அவர்களின் பாரம் குறையும், தீர்வு கிடைத்து அமைதி பெறுவார்கள். அவர்களின் கோபமும் தணியும்.
உங்கள் டீனேஜரின் கோபம் தனக்குத் தானே அல்லது மற்றவர்களுக்குத் தீங்கு செய்யத்தூண்டினால், அல்லது நீங்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர்களின் கோபம் ஒரு பிரச்சனை என்பதையும், அவர்களுக்கு ஒரு நிபுணரின் ஆதரவு தேவை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.