

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்பது நீண்ட நாள் கனவாகவே இருக்கிறது. அந்தக் காலத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும் எப்படியாவது சேமித்து ஒரு இடத்தையோ அல்லது வீட்டையே வாங்கினார்கள். ஆனால், இப்பொழுது அந்தப் பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. அதுவும் பெரிய பெரிய சிட்டிகளில் வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கடைசி வரை நிறைவேறாத ஒரு கனவாகவே ஆகிவிடுகிறது என்றே சொல்லலாம். ஏனென்றால், காஸ்ட் ஆப் லிவிங் காரணமாக எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் கையில் மிஞ்சுவதே இல்லை. நிறையப் பேருக்கு இன்றைய நாட்களில் வீடு வாங்குவது ஒரு பிரச்னையாகவே இருப்பதற்கான சில காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விரலுக்கேற்ற வீக்கம்: இந்தக் காலத்து இளைஞர்களுக்கு விரலுக்கேற்ற வீக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். வாடகை வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பதே அவர்கள் கருத்து. மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காகவே I Phone, விலை உயர்ந்த வண்டி, விதவிதமான துணிமணி என எக்கசக்கமான பொருட்களை தவணை முறையிலாவது வாங்கி விடுகிறார்கள். வரும் சம்பளத்தில் பெரும் பகுதி இதிலேயே போய் விடுகிறது. பிறகு எங்கிருந்து லோன் கட்டி வீட்டை வாங்க முடியும். அந்தக் காலத்தில் ஆடம்பரத்தைத் தவிர்த்து எப்படியாவது ஒரு சொந்த மனையையோ அல்லது வீட்டையோ வாங்கி அதில் வாழ வேண்டும் என்பதில் பலரும் உறுதியாக இருந்தார்கள்.
வார இறுதி நாட்களில் செய்யும் செலவு: இந்தக் காலத்தில் இது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது, அதாவது, வார இறுதி நாட்களில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலேயே இருப்பதில்லை. எங்கேயாவது ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார்கள். ஓட்டல், தியேட்டர், பீச் என சுற்றிக்கொண்டு வீட்டிலேயே அந்த இரண்டு நாட்கள் இருப்பதில்லை. அந்த இரண்டு நாளில் ஆகும் செலவை கிரெடிட் கார்டு மூலமாக செலவு செய்கிறார்கள். இப்படி வாரத்திற்கு இரண்டு நாள் என்றால் மாதத்திற்கு 10 நாள் அனாவசிய செலவு ஏற்படுகிறது. அந்த கிரெடிட் கார்டு அமௌண்ட்டை உடனே கட்ட முடியவில்லை என்றால் அது வட்டி போட்டு ஏறிக்கொண்டே போகிறது. இது ஒரு முக்கியமான காரணமாகும்.
பள்ளிக்கூடம் மற்றும் ட்யூஷன் கட்டணம்: குழந்தை பிறந்த பிறகு இக்காலத்து இளைஞர்களும் அநாவசிய செலவை குறைத்து விடுகிறார்கள். ஆனால், இவர்கள் இந்தக் குழந்தைகளுக்கான காப்பகம், நர்சரி, ஸ்கூல் பீஸ், ட்யூஷன் பீஸ் போன்றவற்றை கட்டுவதிலேயே மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தக் காலத்து கல்வி கட்டணம் என்பது பெரிய சுமையாகவே மாறி விட்டது. நர்சரியிலிருந்தே கோச்சிங், ட்யூஷன் என குழந்தைகளை அனுப்ப வேண்டும். அதுவும் பெரிய சிட்டியிலிருக்கும் இளம் தம்பதியர்கள் குழந்தைகள் நிர்வாகத்தில் படும் பாட்டை சொல்ல வார்த்தைகளே இல்லை.
மேலே கூறிய காரணங்களைத் தவிர, மிக முக்கியமான காரணம் என்னவென்றால் நாளுக்கு நாள் இடத்தின் விலையும் கட்டுமானப் பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே போவதால் ஒரு வீடு கட்டுவதென்பது கனவில் கூட நினைக்க முடியாத ஒன்றாகி விட்டது.
இருப்பினும் இளைஞர்களே, திருமணம் ஆவதற்கு முன்பும், திருமணம் ஆன பின்பும் குழந்தை பிறப்பதற்கு முன்பும் உங்களால் முடிந்த அநாவசியமான செலவுகளையும், ஆடம்பரத்தையும் குறைத்துக் கொண்டால் வீடு வாங்க வேண்டும் என்ற உங்களது எண்ணம் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.