உலகின் தலைசிறந்த மனிதர்களின் காலை நேர ரகசிய வெற்றிப் பழக்கங்கள்!
பணம், பதவி, புகழ் பெற்றால் மட்டும் வெற்றி பெற்றதாக அர்த்தம் ஆகி விடாது. நாம் அடைய விரும்பும் இலக்கிற்காக செய்யும் சக்தி வாய்ந்த செயல்களின் ஒட்டுமொத்த பலனாக வெற்றி இருக்கிறது. உலகின் மிகவும் தலைசிறந்த மற்றும் வெற்றிகரமான மனிதர்களாக இருக்கும் தொழிலதிபர்களும், அறிவியல் அறிஞர்களும் தங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பொதுவான காலை நேர ரகசியத்தை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் வெற்றி பெற்ற மனிதர்களின் காலை நேர ரகசிய வெற்றிப் பழக்க வழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
எந்தவிதமான குறுகீடுகளும், தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல் அறிவிப்புகளும் இல்லாத அதிகாலை நேரம், முக்கிய பணி செய்வதற்கு ஏற்றபடி உள்ளதாலும், அன்றைய தினத்தை தன்னம்பிக்கையுடன் தொடங்குவதற்கும் தலைசிறந்த மனிதர்கள் காலை நேரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.
தியானம் மற்றும் நன்றி பாராட்டுதல்: நாள் முழுவதும் ஒரு நேர்மறையான மனநிலையை பராமரிக்க, பல உலகத் தலைவர்கள் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து தங்கள் நாளை தியானத்துடன் தொடங்குகிறார்கள். இதனால் மனம் ஒருநிலைப்படுகிறது. அதோடு தங்கள் வாழ்க்கையில் கிடைத்திருக்கும் வாய்ப்புகளுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி பாராட்டி உற்சாகத்துடன் நாளை ஆரம்பிக்கின்றனர்.
உடற்பயிற்சி: அதிகாலையில் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வது, உடலில் எண்டோர்பின் (Endorphin) எனப்படும் மகிழ்ச்சியான வேதிப்பொருட்களை வெளியிடுவதோடு, நாள் முழுவதும் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருக்க உதவுவதால், சிலர் ஓடுகிறார்கள், சிலர் யோகா செய்கிறார்கள், இன்னும் சிலர் நீச்சலில் ஈடுபடுகிறார்கள். உடலை நகர்த்தும் இந்தச் சின்ன பழக்கம், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு, மனதையும் கூர்மையாக வைப்பதால் தலைசிறந்த மனிதர்களின் தலையாய பழக்கமாக இருக்கிறது.
புத்தக வாசிப்பு அல்லது கற்றல்: தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்வதற்காகவும், எப்போதும் அறிவு ரீதியாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காகவும், வெற்றி பெற்ற மனிதர்கள் காலையில் அவர்கள் துறையை சார்ந்த ஒரு புத்தகத்தையோ அல்லது வாழ்க்கை வரலாறு புத்தகத்தையோ அதிகாலையில் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வாசிக்கும் பழக்கத்தை வைத்து கற்றலை தொடர்ந்து கடைபிடிக்கிறார்கள்.
முக்கியமான பணியை முதலில் செய்தல்: அதிகாலையிலேயே மிகவும் சவாலான வேலையையோ அல்லது மிக முக்கியமான வேலையையோ வெற்றியாளர்கள் முதலில் முடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். காலையிலேயே இத்தகைய முக்கியப் பணியை முடிப்பதால் ஒரு பெரிய சுமை நாள் முழுவதும் குறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டு தானாகவே உற்சாகம் பிறக்க ஆரம்பித்து விடும்.
வெற்றியாளர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் என்பதில் மாற்றமில்லை. ஆனால், அவர்கள் அந்த நேரத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் அவர்களின் வெற்றி ஒளிந்துள்ளது. ஆகவே, நேரத்தை மதித்து மேற்கூறிய பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து அனைவரும் வெற்றியாளராக மாறுவோம்.