

நவராத்திரியில் கொலு வைக்கும்போது பலவித பொம்மைகள் இடம்பெற்றாலும் அதில் வைக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகளுக்கென்று ஒரு பார்ம்பர்யம் உண்டு. இன்றைய நவீன உலகில் வித்தியாசமான அலங்காரங்களுடன் நவீன பொம்மைகள் வந்தாலும், கொலுவில் கட்டாயம் வைக்க வேண்டியது மரப்பாச்சி பொம்மைகள்தான். இந்த பொம்மைகளை ஆண் பெண் ஜோடியாக ஒவ்வொரு வீட்டு பொம்மைகள் அணிவகுப்பில் நாம் காணமுடியும்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் திருமணத்திற்குப் பிறகு மணப்பெண்ணை சீர்வரிசைகளுடன் ஒரு ஜோடி மரப்பாச்சி பொம்மைகளையும் கொடுப்பது வழக்கம். அதாவது அந்தக் காலத்தில் திருமணப்புகைப்படமோ பதிவோ வசதி இல்லாத காலத்தில் தங்களுக்குத் திருமணமானதை உறுதிபடுத்த இந்த மரப்பாச்சி ஜோடி பொம்மைகளை வீட்டின் பூஜை அறையிலோ அல்லது கூடத்து சுவர் பிறையிலோ வைத்துக்கொள்வது வழக்கமாக இருந்தது.
புகுந்த வீட்டில் நவராத்திரி கொண்டாடும் போது இந்த ஜோடி மரப்பாச்சி பொம்மைகளை முதலில் ஒரு படியில் வைத்த பிறகே மற்ற பொம்மைகளை வைக்கும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.
மரப்பாச்சி பொம்மைகள் செஞ்சந்தனம், முள்ளிலவு, ஊசியிலை போன்ற மரங்களிலிருந்து தயாரிக்கப் படுகிறது. பொதுவாக ஆண்பெண் வடிவில் நிர்வாண பொம்மைகளாக அவை இருக்கும். அவரவர் விருப்பப்படி வண்ணத்துணிகளால் ஆடை தைத்து அணிவித்து அதை அலங்கரித்து வைப்பார்கள். இந்த பொம்மைகள் தயாரிப்பில் ஆந்திர மாநிலம் திருப்பதி குறிப்பிடத்தக்கது. ஏழுமலையானையும், பத்மாவதி தாயாரையும் குறிப்பிடும் வகையில் உருவாக்கப்படுகின்றன. கொண்டபள்ளி கிராமத்தில் ராஜாராணி பொம்மைகளாக தயாரிக்கப்படுகின்றன.
அந்த நாளில் தவழும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளாக வெவ்வேறு வடிவில் மரப்பாச்சி பொம்மைகளைத்தான் தருவார்கள். பொதுவாக செஞ்சந்தன மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகள் மருத்துவகுணம் மிக்கவை.
ஆகவே அவற்றை வாயில் வைத்துச் சப்புவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக உடலுக்கு நன்மை செய்வதாகவே இருந்தன. பொம்மைகளுக்கு கைகால் இருந்தாலும் அவை முனைகள் மழுங்கலாக இருப்பதால் குழந்தை வாயில் குத்திவிடும் அபாயம் இருக்காது. இந்த பொம்மைகள் கர்நாடகா, குஜராத் ஒரிசா மாநிலத்துக்கும் அனுப்பப்பட்டு அங்கு கொண்டாடப்படுகின்றன.
பாரம்பரிய நம்பிக்கைபடி வீட்டின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் உடல் நலத்துக்கும் உகந்ததாக மரப்பாச்சிப் பொம்மைகள் கருதப்படுகின்றன. பொம்மை கடைகளில் இது அரிதாகவே காணப்படுகிறது.
யாருக்காவது சூடு காரணமாக கிரிக்கட்டி கண்இமையில் வீக்கம் இருந்தால் மரப்பாச்சி பொம்மையை லேசாக உறைந்து அந்த விழுதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி குணப்படுத்தும் பாட்டி வைத்தியம் மிகச் சிறந்தது.
திருமணம் ஆகாத வீட்டில் மகனோ மகளோ இருந்தால் மரப்பாச்சி பொம்மைகளுக்குத் திருமணம் செய்து வைக்க அவர்களுக்குத் திருமணம் நிச்சயம் ஆகும். திருமணம் விரைவில் நடக்கும். ஆண் பெண் மரப்பாச்சி பொம்மைகள் வாங்கி வந்து திருமண மாதங்கள்தான் சித்திரை, வைகாசி, தை, ஆவணி மாதங்களில் நல்லதாம் பார்த்து மரப்பாச்சி பொம்மைகளை மணமகன் மணமகனாக அலங்கரித்து திருமணம் நடத்த வேண்டும்.
மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டிய பிறகு விருந்து படைக்கவேண்டும். இவ்வாறு ஆத்மார்த்தமாக இந்த திருமணத்தை நடத்தினால் மூன்றே மாதங்களில் அந்த வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். திருமணம் முடிந்த பெண்ணுக்கு சீராக இந்த பொம்மைகளை தரவேண்டும். உங்கள் கொலுவில் பாரம்பர்யம் மிக்க மரப்பாச்சி பொம்மைகளையும் வையுங்கள்.