ஆடியில் தம்பதிகளைப் பிரிப்பது ஏன்? - மூடநம்பிக்கையா? மருத்துவக் காரணமா?

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைப்பதற்கான ஆன்மீக மற்றும் அறிவியல் உண்மைகள் இதோ!
No wedding in Aadi | ஆடி மாதம்
No wedding in Aadi | ஆடி மாதம் AI Image
Updated on

ஆடி மாதம் தமிழர் கலாச்சாரத்தில் சக்தி வழிபாடு, அம்மன் திருவிழாக்கள், ஆன்மீக சாதனைக்கு உகந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் திருமணம், குடும்ப சுபநிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. புதுமணத் தம்பதிகள் பிரிந்து தாய் வீட்டில் தங்குவது வழக்கம். இதன் பின்னணியில் ஆன்மீக காரணங்களோடு, பழைய கால மருத்துவ, அறிவியல் சிந்தனைகளும் உள்ளன.

தமிழ் நாட்காட்டியில் நான்காவது மாதமான ஆடி மாதம் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக ஆடி மாதம் தேவர்களின் இரவு நேரத் தொடக்கமாகக் கருதப்படுவதால் (தட்சிணாயன காலம்), இது ஆன்மீக சாதனைக்கும், விரதங்களுக்கும் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இம்மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு என பல விசேஷங்கள் இந்த மாதத்தில் கொண்டாடப்படும்.

No wedding in Aadi | ஆடி மாதம்
No wedding in Aadi | ஆடி மாதம் AI Image

ஆடி மாதம் ஏன் திருமணம் கிடையாது மற்றும் அதன் ஆன்மீகப் பின்னணி என்ன?

தமிழ் கலாச்சாரத்தில் ஆடி மாதம் என்பது ஆன்மீக வழிபாட்டிற்கும், பெண் தெய்வங்களுக்கும், இயற்கை மற்றும் விவசாயத்திற்கு மிகவும் உகந்த புனித மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் சக்திக்குரிய மாதமாகும். இம்மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல், தீமிதித்தல், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் போன்ற விழாக்கள் கோலாகலமாக நடைபெறும்.

ஆனால் இவ்வளவு சிறப்புகள் நிறைந்த ஆடி மாதத்தில் தனிப்பட்ட குடும்ப விசேஷங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. அந்த வகையில், ஆடி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் தான் திருமணம், போன்ற எந்த ஒரு சுப நிகழ்சிகளும் நடத்தப்படுவதில்லை. அதுமட்டுமல்ல ஆடி மாதத்தில் புதிதாக திருமணமான தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. அதுவும் பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு சீர் செய்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்வது வழக்கம். இந்த வழக்கம் பண்டைய காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகிறது.

பொதுவாக ஆன்மீக ரீதியாக ஆடி மாதம் என்பது வழிபாட்டிற்கும், இயற்கை சார்ந்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தரும் மாதமாக இருப்பதால், தம்பதியர் இல்லற உறவைத் தவிர்ப்பது நல்லது என்ற கருத்தும் உள்ளது.

அதனால் தான் இந்த மாதத்தில் புதிதாகத் திருமணமான தம்பதிகள், பிரிந்திருந்து ஆடி மாதத்தைக் கழிக்க வேண்டும் என்ற மரபுக்காக, தலை ஆடி அன்று மணமகளைத் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று சீர்வரிசை கொடுத்து வழியனுப்பும் வழக்கம் நமது கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் பிரிந்து அவரவர் குடும்பத்தினருடன் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே, ஆடி மாதத்தில் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் வழக்கம் உருவானது.

Newlyweds Separation Aadi | ஆடி மாதம்
Newlyweds Separation Aadi | ஆடி மாதம் AI Image

ஆடி மாதம் ஏன் திருமணம் கிடையாது என்பது குறித்த மருத்துவக் பார்வை

அதுமட்டுமின்றி ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதற்கு நமது முன்னோர்கள் வகுத்த அறிவியல், மருத்துவம் மற்றும் ஆன்மீக காரணங்களே முக்கியமாகும்.

ஏனெனில், இக்காலத்தில் புதிதாக திருமணமான தம்பதியர் ஆடி மாதத்தில் கருத்தரித்தால் 10ம் மாதமான சித்திரை (ஏப்ரல் - மே) மாதமாக கோடைக் காலத்தில் குழந்தை பிறக்கும். அந்த மாதம் வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

மேலும் அப்போது ஏற்படும் அதிக வெப்பம் தாய், சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல என்பதால் முன்னோர்கள் இந்த மாதத்தைத் தவிர்த்து வந்தனர். அதையும் மீறி சித்திரையில் பிள்ளை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று மூட நம்பிக்கையையும் பரப்பி வைத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் சுய வலிமையை பறைசாற்றும் உற்சாகக் காலமே ஆடி மாதம்!
No wedding in Aadi | ஆடி மாதம்

மேலும் சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், பண்டைய காலத்தில் மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த சூழலில், தாய்க்கும் சேய்க்கும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைக்கும் நடைமுறை நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை காலம்காலமாக இன்னும் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் இந்த வழக்கம் இன்றும் பாரம்பரிமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த வழக்கம் மற்றும் இது தொடர்பான நம்பிக்கைகள் தென் மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் பின்பற்றப்படுகின்றன.

கர்நாடகா மற்றும் ஆந்திரா / தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆடி மாதம் 'ஆஷாட மாசம்' (Ashada Masam) என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் இதே போன்ற பாரம்பரிய முறை கடைபிடிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல; கணபதிக்கும் சிறப்பு! ஏன் தெரியுமா?
No wedding in Aadi | ஆடி மாதம்

இந்த வழக்கம் கிராமப்புறங்களில் தீவிரமாகவும், பாரம்பரியமான குடும்பங்களிலும் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும், நவீன மருத்துவ வசதிகள் மற்றும் ஏசி (Air Conditioning) போன்ற தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இன்றைய காலக்கட்டத்தில், இந்த நடைமுறை பலரால் விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டு வருகிறது.

அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது, கருத்தரிப்பிற்கும் மாதங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தாயின் உடல் நலம், ஊட்டச்சத்து மற்றும் மனநிலைதான் குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன.

நவீன மருத்துவ வசதிகள் நிறைந்த தற்காலத்தில், சரியான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் ஊட்டச்சத்துகளுடன் எந்த மாதத்திலும் ஆரோக்கியமாகக் குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com