
ஆடி மாதம் என்றாலே பொதுவாக, இது அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் திருவிழா, தீ மிதித்தல் போன்றவை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் காய்ச்சி அம்மனுக்குப் படைத்து விட்டு, பிறகு எல்லோருக்கும் கொடுப்பார்கள். வரலக்ஷ்மி விரதம், ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை என பல்வேறு விசேஷமான தினங்களை கொண்டதுதான் இந்த ஆடி மாதம். இவற்றோடு, பண்டிகைகளுக்கான துவக்க மாதமாக இந்த ஆடி மாதத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்று நம் எல்லோருக்குமே தெரியும். இதைத் தவிர, இந்த ஆடி மாதம் முழுவதும் பிள்ளையார் கோயில்களில் கணபதி ஹோமமும் நடைபெறும். சில பேர் வீட்டிலும் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அவர்களுக்குரிய நட்சத்திரம் அன்று இந்த ஹோமத்தை செய்வார்கள். ஏதாவது பூஜை செய்யும்போது அல்லது கிரஹப்பிரவேசம் செய்யும்போது இந்த கணபதி ஹோமத்தை முதலில் செய்து விட்டு, பிறகு மற்ற ஹோமங்களை செய்வதுதான் வழக்கம். ஆனால், இந்த ஹோமத்தை குறிப்பிட்டு ஆடி மாதம் முழுவதும் நடத்துகிறார்கள். இதற்கான காரணங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆடி மாதம் தொடங்கிய பிறகுதான் எல்லா பண்டிகைகளும் விசேஷங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன. நாம் எந்த பூஜை செய்தாலும் எந்தக் கடவுளை முதலில் வணங்குவோம்? பிள்ளையாரைத்தானே? மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து அதற்கு பூஜை செய்த பிறகுதானே மற்ற கடவுளுக்கான பூஜையை செய்வோம். முழுமுதற் கடவுள் அவர்தானே. ஆகவேதான், வருடம் முழுவதும் வரும் எல்லா பண்டிகைகளையும் சிறப்போடு நடத்த அருள்புரிய வேண்டி, ஆடி மாதத்தில் கணபதி ஹோமத்தை செய்கிறோம்.
இந்த ஹோமத்தை வருடம் ஒரு முறை வீட்டில் செய்யும்போது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியிலும், கல்வியிலும் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து தடைகளையும் பிரச்னைகளையும் அகற்ற முடியும். கணபதி ஹோமம் செய்வதால் பொருளாதார ரீதியான பிரச்னைகள் அகற்றப்பட்டு வீட்டில் செல்வம் சேரும். குடும்பத்தில் உள்ள எதிர்மறை சக்திகளும் அகற்றப்படும்.
பொதுவாக, ஆடி மாதத்தில் நமக்கு பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும். ஏனென்றால், வெயில் காலம் முடிந்து மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் நமக்கு சளி, காய்ச்சல், மலேரியா போன்ற உடல் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கணபதி ஹோமத்தை நாம் வீட்டிலேயோ அல்லது கோயிலிலோ செய்யும்போது அந்த ஹோமத்திலிருந்து எழும் புகையால் நம்முடைய சுற்றுப்புறம் தூய்மை அடையும். கொசுக்களை அழிக்க உதவும். மேலும், நம் கண்களிலிருந்து வடியும் நீர் மூலமாக கண்களும் சுத்தமாகும். உடலில் இருக்கும் சளி மற்றும் கிருமிகளும் இந்த கண்ணீரின் மூலமாக வெளியேற்றப்படும்.
ஆகவே, இந்த கணபதி ஹோமத்தை வருடத்திற்கு ஒரு முறை வீடுகளில் நடத்தி, அதுவும் ஆடி மாதத்தில் செய்து விநாயகரை வழிபடுவதன் மூலம் செல்வச் செழிப்பு, குடும்ப வளம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம். மேலும், இந்த ஹோமமானது நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றி ஆரோக்கியமான வாழ்க்கையையும் அளிக்கும்.