
வீட்டின் எந்த விழாவானாலும் உறவினர்கள் ஒன்று கூடுவதும், பரிசுகளை வழங்குவதும் நம்மிடையே தொடர்ந்து வரும் வழக்கம்! பரிசுகளைத் தங்க ஆபரணங்களாகவும், வீட்டு உபயோகப் பொருட்களாகவும், பணமாகவும் கொடுப்பது வழக்கத்தில் இருந்தாலும், அதிகப்படியான இடத்தைப் பிடிப்பது பணக் கவர்களே!நெருங்கிய உறவினர்கள் கோல்ட் நகைகளைக் கொடுக்க, நெருக்கமான நண்பர்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தர, பெரும்பாலானவர்கள் பணக் கவர்களையே கொடுக்கிறார்கள்!
கவர்களில் 50,100,1000 என்றும் அதற்கு மேலும், அவரவர் தகுதிக்கும், விழா நடத்தும் குடும்பத்தினர் ஏற்கெனவே இவர்களுக்குச் செய்துள்ளதைக் கருத்தில் கொண்டும், தொகையை நிர்ணயம் செய்கிறார்கள்! ஐம்பதோ, ஐயாயிரம் பத்தாயிரமோ எதுவாக இருந்தாலும் அந்தத் தொகையுடன் ஒரு ரூபாய் காசை வைத்துக் கொடுப்பதை நாம் பழக்கமாகக் கொண்டுள்ளோம்! ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்பதை என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
அந்த காயின் ஒரு ரூபாயாக மட்டுமே இருக்க வேண்டுமாம். 2,5,10 ரூபாய் என்ற மதிப்பில் காயின்கள் இருந்தாலும், இந்த இடத்தில் ஒரு ரூபாய்க்கு மட்டுமே மவுசு!
அதற்காகச் சொல்லப்படும் காரணங்களைப் பார்ப்போமா?
- பூஜ்யம் என்பது முடிவைக் குறிப்பது. அதே நேரம் ஒன்று என்பது தொடக்கத்தைக் குறிப்பது. நாம் எக்ஸ்ட்ராவாகச் சேர்க்கும் ஒன்று, ஆரம்பத்தைக் குறித்து, பெறுபவர்களை உற்சாகப் படுத்துகிறது!
- 50,100,1000 என்பதெல்லாம் வகுபடக் கூடிய ‘டிவிசிபிள்’ (divisible) எண்கள். அவற்றுடன் ஒன்று சேர்கையில், அவை இன்டிவிசிபிள் (indivisible) எண்களாகி விடுகின்றன. பிரிபடாமல் இருப்பதுதானே நல் வாழ்வின் அடிப்படை! நமது ஆசீர்வாதங்களும், வாழ்த்துக்களும், சேர்ந்திருக்கத்தானே!
- 10000 ரூபாயாக இருந்தாலுங்கூட அது முடிவாக இருக்கையில், அதனுடன் சேரும் ஒன்று, அதனைத் தொடரும் ஒன்றாக மாற்றுகிறது. அந்தத் தொடர்ச்சிதானே நமது உறவுகளை மேலும் பலப்படுத்தி நம் உற்சாகத்தை வளர்க்கிறது.
- நாம் எக்ஸ்ட்ராவாக சேர்க்கும் ஒரு ரூபாய், நாணயமாக மட்டுமே (coin) இருக்க வேண்டும். நோட்டாக இருக்கக் கூடாது. அதற்கும் ஒரு காரணம் உண்டு. நாணயம் செய்யப் பயன்படும் உலோகம் பூமித்தாயின் பரிசு! அந்த உலோகம் இயற்கையின் நன்கொடை! அதோடு மட்டுமல்ல, அந்த உலோகக் காயினில்தான் லட்சுமி வாசம் செய்கிறாள்!
கவரிலுள்ள பெருந்தொகை மூலதனமாகப் (investment) பயன்படுகையில், கூட இருக்கும் காயின் வளர்ச்சிக்கு விதையாகப் (seed) பயன் படுகிறது! மூலதனம் நன்கு பயனளித்து லாபத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஆசீர்வாதங்களும்!வாழ்த்துக்களும்!
சரிங்க! பரிசளிக்க வாங்கி வைத்திருக்கும் வண்ணக் கவர்களுடன் கொஞ்சம் ஒரு ரூபாய் நாணயங்களையும் சேர்த்து வையுங்கள்! விழாவுக்கு அவசரமாகக் கிளம்பும்போது காயின் தேடி, தாமதிக்க வேண்டாம்!
ஓ! விழாவுக்குக் கிளம்பிட்டீங்களா? கவரில் ஒரு ரூபாய் காயினையும் சேர்த்துப் போட்டுட்டீங்கதானே!?!