
பண்டிகை நாட்கள் மற்றும் வீட்டில் விசேஷம் போன்ற தினங்களில் மங்கல நிகழ்வாக வீட்டின் வாயிற்படியில் தோரணம் கட்டுவது நம் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாகும். வீட்டுக்குத் தோரணம் கட்டுவது குடும்ப நன்மைக்காக மட்டுமின்றி, அழகிற்காகவும் கட்டப்படுகிறது. கோயில் திருவிழாக்களில் மங்கல தோற்றத்தை அளிக்கக்கூடிய தோரணங்கள் தவிர்க்கவே முடியாதவை. அதிக செலவில்லாத இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டே இந்தத் தோரணங்கள் செய்யப்படுகின்றன.
முந்தைய காலத்தில் அழைப்பிதழ் கொடுக்கும் பழக்கம் இல்லாததால் ஒரு வீட்டில் நல்லதோ, கெட்டதோ நடந்தால் அதைக் குறிக்க வீட்டு வாசலில் கட்டப்படும் தோரணங்களின் முறையை வைத்து விசேஷம் என்று கண்டுபிடித்து விடலாம். அத்தகைய தோரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
தென்னங் குருத்தோலை: தென்னங் குருத்தோலைகளைக் கொண்டு தயார் செய்யும் குருத்தோலை தோரணங்களில் மங்கல மற்றும் அமங்கலத் தோரணங்கள் என இரு வகைகள் இருக்கின்றன. இதில் உள்ள மடிப்புகள், வடிவமைப்புகள் குருவிகள் எனப்படுகிறது. சமயம் சார்ந்த விழாக்களிலும், திருமணம் போன்ற சுபநிகழ்விலும் கட்டப்படும் தோரணங்களில் 4 குருவிகள் அதன் தலைப் பகுதி மேலேயும் வால் பகுதி கீழேயும் இருக்கும் தோரணங்கள் மங்கல தோரணங்களாகும். இதுவே மரணம் போன்ற துயர்மிகு நிகழ்வுகளில் மூன்று குருவிகள் தலைகீழேயும் வால் பகுதி மேல் நோக்கியும் இருப்பது அமங்கல தோரணங்கள் எனப்படும்.
மாவிலை தோரணம்: மங்கலத்தின் அடையாளமாக அனைத்து பண்டிகை நாட்களிலும் நிலை வாசற்படியில் கட்டப்படும் மாவிலை தோரணம் வீட்டிற்குள் துயர் தரும் கெட்ட சக்திகள் எதுவும் வர இயலாது என்ற பாரம்பரிய நோக்கத்துடன் கட்டப்படுவதாக ஐதீகம்.
மாவிலை தோரணம் கட்டும் முறை: மஞ்சள் தேய்த்த நூலில் ஒரே அளவில் உள்ள மாவிலைகளை மஞ்சள் பூசி குங்குமம் வைத்து 11, 21 அல்லது 101 என்ற எண்ணிக்கையில் கோர்த்து மாவிலைகளை தோரணமாக வாயிற்படியில் கட்ட வேண்டும்.
மாவிலை தோரணங்களின் சிறப்பு: மாவிலைகளில் மகாலட்சுமியும், வேப்பிலையில் ஆதிசக்தியும் வாசம் செய்வதோடு மாவிலை தோரணம் நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதோடு, காற்றில் உள்ள கரியமில வாயுவான கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. வேப்பிலைகள் காற்றில் உள்ள நச்சுக்களை உறிஞ்சிக்கொள்ளும் ஆற்றல் உடையது. இவை இரண்டும் அழுகிப் போகாத இலைகளாக இருப்பதாலேயே இத்தோரணங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வேப்பிலையில் தோரணம்: மஞ்சள் தோய்த்த ஒரு நூலில் வேப்பிலைகளை கொத்து கொத்தாகக் கட்டி வேப்பிலை தோரணம் செய்வார்கள். இந்தத் தோரணம் பொதுவாக அம்மன் கோயில் திருவிழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக. கிருமி நாசினியாக இருப்பதாலும் அம்மை நோயை குணப்படுத்துவதில் வேப்பிலையின் பங்கு அளப்பரியது என்பதாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு அம்மை நோய்த்தொற்று ஏற்பட்டால் அவ்வீட்டில் வேப்பிலை தோரணம் அமைப்பார்கள்.
பூத்தோரணங்கள்: ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்ற அழகான மற்றும் வாசனையான பூக்களைக் கொண்டு அலங்காரத்திற்காக வீடுகளில் பூத்தோரணங்கள் கட்டப்படுகின்றன. பொதுவாக, குழந்தைகளுக்குப் பிறந்த நாள் விழாக்களிலும், பெண் குழந்தைகளின் சடங்கு விழாக்களிலும் பூத்தோரணங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இனி, விசேஷ நாட்களில் தோரணங்கள் கட்டும்போது அதன் பாரம்பரியத்தை தெரிந்து கொண்டு கட்டுவோம்!