
பெண்களை உடல் வலிமையற்றவர்கள் என்று ஒரு காலத்தில் ஒதுக்கி வைத்தது உண்டு. ஆனால் இன்றைக்கு அவர்கள் எல்லாவற்றையும் சாதித்து காட்டிவிட்டதால் அப்படி யாரும் சொல்வதில்லை. என்றாலும் இயற்கையாகவே அவர்களுக்கு எதையும் தாங்கும் மனவலிமை அதிகம் உண்டு. அதற்கு காரணம் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
மூன்று வருடங்களுக்கு முன்பு என் தோழிகள் மூன்று பேர் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் என்று மூன்று தேசங்களுக்கு அவர்களின் பெண்களின் பிரசவத்திற்காக செல்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கவும் அவர்களால் அங்கு செல்ல முடியாமல் பயணம் தடைப்பட்டது.
அப்பொழுது அவர்களும் அவர்களின் பெண்களும் மிகவும் துன்பமடைந்தனர். சரியான நேரத்தில் பெண்ணிற்கு உதவி செய்ய முடியவில்லையே என்று தாய்மார்களும், நாம் பிரசவிக்கும் நேரத்தில் அம்மா அருகில் இல்லையே என்று பெண்களும் கவலை உற்றனர்.
ஆனால் எல்லாம் சிறிது காலம்தான். அதன் பிறகு அவர்களின் பெண்களே ஒன்றும் பயப்படுவதற்கில்லை. எல்லாவற்றையும் தாராளமாக எதிர்கொள்ள நான் தயாராகிவிட்டேன். நீங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொண்டு இருங்கள். எல்லாம் சுகமாக முடியும் என்று கூறினார்கள். அதன்படியே முடிந்தது. பின்பு அனைவரும் பெண்களின் மனவலிமையை நினைத்து சந்தோஷமடைந்து மகிழ்ந்து பேசினர்.
ஆமாம் தாய்மை என்பதும் அதுதானே. எல்லா வலிகளையும் தாங்கிக்கொள்ளக் கூடிய வலிமையை கொடுத்துதான் இறைவனும் இயற்கையும் தாய்மையை உண்டாக்குகிறது. பெண்களுக்கு 9 மடங்கு வலியை தாங்கும் திறன் உண்டு என்று கூறுகிறது விஞ்ஞானம். அப்படி பார்த்தால் பிரசவ வலியை விடவா?
நம் தென்னகத்தில் தாய்மை உற்ற பெண்ணிற்கு வளைகாப்பு செய்தவுடன் தாயார் வீட்டிற்கு அழைத்து வந்து பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் நலமுடன் கவனித்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது வைத்திருந்து விட்டு அனுப்புவோம்.
ஆனால் டெல்லி போன்ற வட மாநிலங்களில் அப்படி இல்லை. பிரசவத்தை மாமியார் வீட்டில்தான் பார்ப்பார்கள். அது அவர்களின் வழக்கம். எங்கள் குலக்கொடியை நாங்கள்தான் பார்க்க வேண்டும். எங்கள் குலம் தழைக்க நாங்கள் மனமுவந்து செய்யும் ஏற்பாடு இது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
இன்னும் ஒரு சில கிராமங்களில் பெண் தன்னுடைய பிரசவத்தை தாமே ஊருக்கு வெளியில் இருக்கும் ஒதுக்குப்புற வீட்டிற்கு சென்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முறை இருப்பதையும் படித்திருக்கிறோம்.
ஒரு பெண் தன்னுடைய கஷ்ட நஷ்ட இன்ப துன்பங்களை தாயிடம் பகிர்ந்து கொள்வது போல் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. அதிலும் பிரசவ காலங்களில். இப்படி இருந்தும் இவர்கள் அனைவரும் எந்த உந்துதலின் காரணமாக இவற்றையெல்லாம் சகித்துக் கொள்கிறார்கள் என்றால், "கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காரணமாக கூறுகிறார்கள்".
இதன் விளைவாக அவர்களுக்கு கூடுதல் சக்தி கிடைக்கிறது என்றும், கருவில் குழந்தை வளர்வதால் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கிக்கொண்டு அவர்களால் பல வேலைகளை அநாயாசமாக செய்ய முடிகிறது என்றும் விஞ்ஞான பூர்வமான உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்.
அப்படிப் பார்த்தால் எதையும் தாங்கும் இதயம் உடையவர்கள் பெண்கள் இல்லையா?