
‘மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை, மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதே மதிப்பை நீயும் அவர்களுக்கு அளி!’ என்பதே மனித உரிமையின் அடிப்படை தத்துவம். மனித உரிமை என்ற வார்த்தை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது 1786ம் ஆண்டு வெளிப்பட்ட அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில்தான். பிரெஞ்சு புரட்சியின் விளைவாக 1789ல் மனித மற்றும் குடிமக்கள் உரிமை பிரகடனம் உருவாயிற்று. மனித உரிமை வரலாற்றுக் களத்தில் இதை முதல் தடம் என்கிறார்கள்.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது கணக்கற்ற மனிதர்கள் கொல்லப்பட்டனர். இதை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய உறுதிமொழியை வெளியிட முடிவு செய்தது. இதன் பின்னணியில் ஜூன் 22, 1946ல் மனித உரிமைகள் பற்றி ஆராய 8 பேர் கொண்ட குழுவை நியமித்தது.
மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினார் ரூஸ்வெல்ட் தலைமையில் அந்த 8 பேர் குழு மனித உரிமைகள் பிரகடனத்தை உருவாக்க முயற்சி எடுத்து. 1948ல் பிரகடனத்தை ஐ.நா. சபையிடம் சமர்ப்பித்தது. உறுப்பினர்கள் அலசி ஆராய்ந்து 400 முறை ஓட்டெடுப்பு நடத்திய பிறகே மனித உரிமை பிரகடனத்தை வெளியிடத் தங்களது ஆதரவை தெரிவித்தனர். சில இஸ்லாமிய நாடுகள் அவர்கள் மத வழக்கப்படி பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கூடாது என்றனர். சில மேற்கத்திய நாடுகள், மனித உரிமை பிரகடனத்தில் சமூக, பொருளாதார பண்பாட்டு உரிமைகள் சேர்வதை எதிர்த்தனர்.
இறுதியில், ஒருவழியாக ஐ.நா. சபையின் பொதுசபை கூடி 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை வெளியிட்டது. அதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி மனித உரிமைகள் தினம் உலகெங்கும் ஐ.நா. சபையால் கடைபிடிக்கப்படுகிறது. 1950ம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித உரிமைகள் பிரகடனத்தின் சாரம் 30 பிரிவுகளை உள்ளடக்கியது. அதன்படி தனி மனிதனுக்கு பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படை அம்சங்கள், மனிதன் மனிதனாக வாழ்வதற்கான அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகளாக சொல்லப்படுகிறது. பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமை, குடும்பம் அமைத்துக் கொள்வதற்கான உரிமைகள், சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமைகள், சமூக நலம் மற்றும் மருத்துவ உதவி பெறுவதற்கான உரிமை, குழந்தைகளுக்கு கல்வி பெறுவதற்கான உரிமை, விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் பெறும் உரிமை இவையனைத்தும் மனித உரிமைகளின் சாராம்சம்.
தற்போது உலகில் உள்ள 250 மொழிகளில் மனித உரிமைகள் பிரகடனம் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அதன் போக்கை கண்காணிப்பதற்காக 1961ம் ஆண்டு மே 28ம் தேதி மனித உரிமைகள் கழகம் உருவானது. அதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் பிரிட்டிஷ் வழக்கறிஞர் பீட்டர் பெரன்சன். மனித உரிமைக் கழகம் சிறப்பாக பணியாற்றியது என 1977ம் ஆண்டு அதற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 1968ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விருது வழங்கப்படுகிறது.1988ம் ஆண்டு பாபா முரளிதர் தேவதாஸ் ஆப்தே என்ற இந்திய நீதிபதி இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1991ம் ஆண்டு அக்டோபர் 13ல் இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.