
நமது வீடுகளில் அதிக அளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனப்படும் எவர்சில்வர் பாத்திரங்களைத்தான் அதிகமாக உபயோகிக்கிறோம். இவை நீடித்து உழைக்கும் மற்றும் இவற்றில் வைக்கும் பொருள்கள் கெடாமல் பாதுகாக்கப்படும். இவை சுத்தம் செய்ய எளிதானவை. ஆனாலும், சில உணவுப் பொருட்களை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் வைக்கக் கூடாது.
1. ஊறுகாய்கள்: பொதுவாக, ஊறுகாய்கள் அதிகமாக அமிலத்தன்மை கொண்டவை. எலுமிச்சை, மாங்காய், நார்த்தங்காய், வடுமாங்காய் போன்ற புளிப்புத் தன்மை நிறைந்த பொருள்களில் ஏற்கெனவே அமிலத்தன்மை இருக்கும். இதில் உப்பு மற்றும் எண்ணெயும் சேரும்போது அது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுடன் வினைபுரிந்து பாத்திரத்தின் நிறம் மாறும். ஊறுகாயின் சுவையும் மாறும். எனவே, ஊறுகாய்களை கண்ணாடி ஜாடிகளில் அல்லது பீங்கான் ஜாடிகளில் சேமித்து வைப்பதே சிறந்தது.
2. தயிர்: பாலைக் காய்ச்சி ஆற வைத்து ஒரு துளி தயிர் சேர்த்து உறை ஊற்றி வைத்தால் உருவாவதுதான் தயிர். இதில் நொதித்தல் என்கிற பிராசஸ் நடைபெறுகிறது. அப்போது லாக்டிக் அமிலம் வெளிப்படுகிறது. தயிர் இயற்கையிலேயே அமிலத்தன்மை கொண்டது. எவர்சில்வர் பாத்திரங்களில் தயிரை சேமித்து வைக்கும்போது அதனுடைய சுவை மாறிவிடும். பாத்திரத்துடைய சுவையை தயிர் எடுத்துக்கொண்டு தயிரின் உண்மையான சுவையை மாற்றும். எனவே, தயிரை பீங்கான் அல்லது கண்ணாடி கிண்ணங்களில் உறை ஊற்றி வைத்து சேமித்து வைத்தால்தான் தயிரின் உண்மையான சுவையும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
3. சிட்ரஸ் சார்ந்த உணவு வகைகள்: மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், எலுமிச்சை சாறு அல்லது புளி கொண்டு செய்யப்படுகின்ற ரசம் போன்ற உணவுப் பொருள்களில் அமிலத்தன்மை இருக்கும். இவை எவர்சில்வர் பாத்திரங்களில் உள்ள உலோகத்துடன் வினைபுரிந்து உணவின் சுவையையும் மங்கச் செய்யும். காலப்போக்கில் அந்த பாத்திரங்களில் சிறிய குழிகள் அல்லது நிற மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, கண்ணாடி அல்லது உயர்தரமான பிளாஸ்டிக் பொருட்களில் இவற்றை சேமித்து வைக்க வேண்டும்.
4. தக்காளி சேர்த்த உணவுகள்: தக்காளியில் இயற்கை அமிலங்கள் உள்ளன. இதன் காரணமாக தக்காளியைக் கொண்டு செய்யப்படும் கிரேவி உணவுகளான ராஜ்மா, பாஸ்தா, சாஸ்கள், பன்னீர் பட்டர் மசாலா, தக்காளி சாதம் போன்றவை அமிலத்தன்மை கொண்டவையாக மாறிவிடும். நல்ல உயர்தரமான துருப்பிடிக்காத எவர்சில்வர் பாத்திரமாக இருந்தாலும் அதிக புளிப்புத் தன்மையும் அமிலத் தன்மையும் கொண்ட தக்காளி சார்ந்த உணவுகளுடன் வினைபுரிந்து சில தேவையில்லாத எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். எவர்சில்வர் பாத்திரங்களில் இவற்றைப் போட்டு வைக்கும்போது சில தினங்களில் அவை பாத்திரத்தின் நிறத்தையும் தோற்றத்தையும் பாதிக்கும். எனவே, இவற்றை கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணங்களில்தான் சேமித்து வைக்க வேண்டும்.
5. பழங்கள் மற்றும் பழ சாலடுகள்: பழங்களை வெட்டும்போது, குறிப்பாக ஆரஞ்சு, அன்னாசி போன்ற அமிலத்தன்மை கொண்ட பழங்கள் மற்றும் வாழைப் பழங்கள் போன்ற மென்மையான பழங்கள் விரைவில் பழுப்பு நிறமாக மாறிவிடும். இவற்றை எவர்சில்வர் கிண்ணங்களில் போட்டு வைக்கும்போது அது உலோகத்துடன் வினைபுரிந்து பழங்களில் உள்ள இயற்கையான சுவை மாறிவிடும். பழங்களும் விரைவில் பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். எனவே, காற்று புகாத கண்ணாடிக் கொள்கலன்களில் அவற்றைப் போட்டு வைக்கும்போது அவை ஃபிரஷ்ஷாக இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்.