

குளிர்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியம் சார்ந்த விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் மற்றும் அலர்ஜி போன்ற நோய்கள் வராமல் தடுக்க உங்கள் வீட்டிற்குள் செய்ய வேண்டிய 5 மாற்றங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. ஜன்னல்களை திறந்து விடுங்கள் (Ventilation is Key): குளிர்காலத்தில் வீட்டிற்குள் வரும் குளிர் காற்றை தடுப்பதற்காக ஜன்னல்களை 24 மணி நேரமும் மூடி வைப்பதால் வீட்டிற்குள் இருக்கும் அசுத்தக் காற்று (Indoor pollution) வெளியேற முடியாமல் உள்ளேயே சுற்றிக் கொண்டே இருக்கும். இது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகவே, தினந்தோறும் காலையில் வெயில் வரும் நேரத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் ஜன்னல்களை திறந்து வைப்பதால் இயற்கையான சூரிய ஒளி வீட்டிற்குள் வந்து கிருமி நாசினியாக செயல்பட்டு காற்றில் உள்ள ஈரப்பதத்தையும், கெட்ட வாடையையும் விரட்டும்.
2. போர்வை மற்றும் விரிப்புகள் (Bedding Care): குளிர்காலத்தில் பலருக்கு தும்மல் மற்றும் ஆஸ்துமாவை வரவழைக்கும் பொருட்களாக நாம் பயன்படுத்தும் கம்பளிப் போர்வைகள் (Woolen Blankets), தரை விரிப்புகள் உள்ளன. இவற்றில் தூசுப் பூச்சிகள் (Dust Mites) அதிகம் வாழ்கின்றன. ஆகவே, வாரத்திற்கு ஒருமுறை நாம் வீட்டில் பயன்படுத்தும் பெட்ஷீட்டுகளை வெந்நீரில் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். மேலும், கனமான போர்வைகளை துவைக்காவிட்டாலும் வாரத்திற்கு ஒரு முறை நல்ல வெயிலில் காயவைத்து எடுத்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
3. ஈரப்பதம் என்னும் எதிரி (Mold Prevention): குளிர்காலத்தில் வீட்டிற்குள் மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக வீட்டின் சுவர்களில் ஈரம் இறங்குவதோடு, கறுப்பு நிறப் பூஞ்சை (Mold) வர வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இது சுவாசப் பிரச்னையை உண்டாக்கும் என்பதால் பாத்ரூம் மற்றும் சமையலறை சுவர்களில் ஈரமாகாமல் பார்த்துக் கொள்வதோடு எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இது அங்குள்ள ஈரப்பதத்தை வெளியேற்றும்.
4. செருப்புக்கு ‘நோ’ சொல்லுங்கள்: மழைக்காலத்தில் வெளியே சென்று விட்டு வரும்போது சேறும் சகதியுமாக இருக்கும்போது வீட்டிற்கு செருப்பு அணிந்து வந்தால் பல்வேறு கிருமிகள் வீட்டிற்குள் நுழைந்து குடும்பத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடும். ஆகவே, வாசலிலேயே ஒரு நல்ல மிதியடியைப் (Doormat) போட்டு கால்களை துடைத்துவிட்டு வீட்டிற்குள் வருவதோடு, வீட்டு வாசலிலேயே செருப்புகளை கழற்றி வைக்கும் பழக்கத்தை கண்டிப்பாக பின்பற்றுவது குடும்ப ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும்.
5. ஃபில்டர்களைச் சுத்தம் செய்யுங்கள்: நாம் பயன்படுத்தும் ஏசி மற்றும் ஏர் பியூரிஃபையரில் தேங்கி இருக்கும் தூசி, மூடிய அறைக்குள் சுற்றிக்கொண்டே இருந்தால், சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் என்பதால் ஏசி, ஏர் பியூரிஃபையர் பயன்படுத்துபவர்கள் பில்டர்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
மேற்கூறிய 5 மாற்றங்களை குளிர்காலத்தில் செய்வதன் மூலமாக குளிர்காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.