சமூக சீர்கேடுகளுக்கு வழிகோலும் பொய்யுரைத்தல்!

Lying
Lying
Published on

ன்றைய இணைய உலகில் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துப் பேசுவது என்பது மிகவும் அரிதாகி விட்டது. அவ்வாறு பேசினாலும் உண்மை பேசுவது மிகவும் குறைந்து வருகிறது. நமது சமூகம் காலம் காலமாக உண்மை பேசுதலை ஓர் உயரிய பண்பாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இன்று மக்களிடையே அழிந்து வரும் நல்ல பண்புகளில் உண்மை பேசுதலும் ஒன்று ஆகும். மனதால் கூட பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள் பிறர் மனதில் நிலையான இடத்தைப் பெற்று வாழ்கிறார்கள். சமூக ஒற்றுமைக்கு அடிப்படை உண்மை பேசுதல் ஆகும்.

உண்மை கசப்பானதாக இருக்கலாம். ஆனால், அதுதான் ஒருவருக்கு நற்பெயரைத் தேடித்தரும். உண்மையைப் பேசுவதால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் பல. வரலாற்றில் உண்மை பேசுவதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த அரிச்சந்திரன் இன்றும் மக்களால் நினைவு கூறப்படுகிறான். ஒரு மன்னனாக அவன் அனுபவித்த துண்பங்கள் ஏராளம். இருந்தும் உண்மையையே பேசினான். இறுதியில் வெற்றியும் பெற்றான். மகாத்மா காந்தியின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது அவர் ரசித்துப் பார்த்த அரிச்சந்திரன் நாடகமே ஆகும்.

இதையும் படியுங்கள்:
ரூபாய் நோட்டில் இருக்கும் (*) இந்த நட்சத்திர அடையாளத்திற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
Lying

ஒளவையார் தனது உலக நீதியில் ‘நெஞ்சாரப் பொய்தன்னை சொல்ல வேண்டாம்’ என்கிறார். முண்டாசுக் கவிஞன் பாரதியும் ‘பொய் சொல்லக் கூடாது பாப்பா’ என சிறுவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அய்யன் வள்ளுவரும் தனது திருக்குறளில் வாய்மையுரைத்தலுக்கு என தனியானதொரு அதிகாரத்தை ஒதுக்கி, மற்றவர்களுக்கு தீங்கு தரும் சொற்களைக் கூட உரைக்காமல் இருப்பதே வாய்மை என்கிறார். ‘தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்கிறார். உண்மையை பேசுவதினால், நாம் சிறந்த மன வலிமையையும், மன நிறைவையையும் பெற முடியும். உண்மை மற்றவர்களை நம்பால் ஈர்க்கும் வல்லமை பெற்றது.

நாம் பொய்யுரைக்கும்போது அதனை நிரூபிக்க மீண்டும், மீண்டும் பொய் பேச வேண்டியிருக்கும். நாம் யாரிடமாவது பொய் பேசி அது நிரூபிக்கப்பட்டால், நம் மீது அவர்களின் நம்பிக்கையையும், சமூகத்தில் நமக்குள்ள நன்மதிப்பினையும் நாம் இழக்க நேரிடும். அதன் பிறகு நாம் பேசும் உண்மையைக் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
ஒரு நாய்க் குட்டி வாங்கிடுங்க; இந்த நன்மைகளை அனுபவியுங்க!
Lying

நாம் கூறும் பொய்களால் அடுத்தவருக்கு மன உளைச்சலும், நம் மீதான அதிருப்தியும் ஏதோ ஒரு நிலையில் தோன்றும். பொய்யினால் மன அமைதியும் நேர்மறையான எண்ணங்களும் நம்மை விட்டு அகன்று, அவமானமும், தலைகுனிவும் நமக்கு ஏற்படும். பொய் பேசுதலை அடியோடு தவிர்ப்பதே மன அமைதிக்கான சிறந்த வழியாகும். மக்கள் பொய் சொல்லும்போது, தங்கள் உறவுகளையும், சமூகத்தில் பெருமையையும் இழக்கிறார்கள்.

பொய் சொல்வது ஒரு பொதுவான ஒப்புக்கொள்ளப்பட்ட நடத்தையாக இன்று மாறிவிட்டது. பலர் பொய்யினையே உண்மையினைப் போல் பேசுவது வழக்கமாகி விட்டது. அவதூறு கூறுதல், பணத்திற்காக பொய் சாட்சியம் சொல்லுதல் போன்ற அனைத்துப் பொய் பேசும் செயல்களுக்கும் மனிதனுக்கு பணத்தின் மேலுள்ள ஆசையே காரணம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
சிக்கனத்தின் சிகரம் ஆண்களா? பெண்களா?
Lying

பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் பேசும் பொய்கள் சமூக சீர்கேடுகளுக்கு வழிகோலுகின்றன. நாம் பேசும் பொய்கள் தற்காலிகமாக நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரலாம். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். இது சாதாராண குடிமகன் முதல் அரசு உயர் பதவியில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும். உண்மை பேசுபவர்களுக்கு நீதி கிடைக்க தாமதமாகலாம். ஆனால் உண்மை ஒருபோதும் தோற்காது. இதை நாம் உறுதியாக நம்ப வேண்டும். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்போது வாய்மை தவறியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

தொடக்கத்தில் பேசப்படும் பொய்யே திருடாக, வழிப்பறியாக மாறி கொலை செய்வதில் சென்று முடிகிறது. சமூகத்தில் குற்றங்களைத் தடுக்க பொய் பேசுதலை முதலில் நாம் தவிர்க்க வேண்டும்.உண்மை பேசும் பண்பினை இளமையிலேயே நமது குழந்தைகளுக்கு நாம் பயிற்றுவிக்க வேண்டும்.

உண்மை பேசுவதில் குடும்பங்களும் ஆசிரியர்களும், அரசியல்வாதிகளும் முறையே குடும்பங்களிலும், வகுப்பறைகளிலும், பொதுவெளிகளிலும் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அப்போதுதான் எதிர்கால இந்தியா சிறப்பான சமுதாயமாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com