
மனிதர்கள் பூச்சிகளை உணவாக உட்கொள்வதை, ‘பூச்சியுண்ணல்’ (Entomophagy) என்கின்றனர். சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே, பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக அவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும், பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத் தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது.
தாய்லாந்து, சீனா, ஜப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா போன்ற நாடுகளில் பூச்சியுண்ணும் பழக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. தமிழக நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.
உலகின் சில பகுதிகளில் பூச்சியுண்ணல் மக்களின் கலாச்சாரத்துடன் இணைந்துள்ளது. 1000-க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் உலக சனத்தொகையின் 80% பேர்களால் உண்ணப்படுவதாக அறியப்படுகின்றது.
இருப்பினும், பல சமூகங்களில் இது சாதாரணமாக நிகழ்வதில்லை. பூச்சியுண்ணல் அபிவிருத்தி அடைந்த பல இடங்களில் அரிதாகவே இருந்தாலும், இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியாவின் பல அபிவிருத்தியடைந்து வரும் இடங்களில் இந்த பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. பூச்சிகளில் பல்வேறு பூச்சிகள் உண்ணக்கூடியவைகளாக இருக்கின்றன. அவற்றுள், வெட்டுக்கிளிகள், எறும்புகள், வண்டுகள், பட்டுப்புழு, சில பூச்சிகளின் குடம்பி, கூட்டுப்புழு பருவநிலைகள் ஆகியவை அதிக அளவில் உண்ணப்படும் பூச்சிகளாக இருக்கின்றன.
பூச்சிகளை உணவாகக் கொள்ளும் போது புரதம் மட்டுமல்லாமல், உயிர்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்ற கனிமங்கள், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. அத்துடன் இவற்றை வளர்க்க மிகச் சிறிய இடமே போதுமானதாக இருக்கிறது.
இருப்பினும், பூச்சிகளில் வேறு தீமை தரும் ஒட்டுண்ணிகள் இருக்கக் கூடும். இவை சமைப்பதன் மூலம் நிவர்த்தி செய்யப்படலாம். மேலும், பூச்சிகளில் பூச்சிக்கொல்லிகள் சேர்ந்து இருக்கக்கூடும் என்பதனால் சில சமயங்களில் அவை உண்ண முடியாதவை ஆகின்றன. அத்துடன் பூச்சிகள் தாவரங்களை உணவாகக் கொள்ளும் போது, அங்கு களைக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பின், அதன் நச்சுத்தன்மை பூச்சிகளில் பெருக்கமடைந்து இருக்கும். எனவே, பூச்சிகளை உண்பது சில வேளைகளில் ஆபத்தை ஏற்படுத்தலாம்.