

வாழ்க்கை வாழ்வதற்கே..! பிறகு எதற்கு தேவையில்லாத காரணங்களுக்கும், பொய்யான விமர்சனங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் நாம் ஏன் பயப்படவேண்டும் என்கிற யோசனை எப்போதாவது வந்திருக்கிறதா..? இன்பம், துன்பம், கவலை, பசி, தூக்கம் போன்ற எல்லாமே மனிதனின் வாழ்க்கையில் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத அச்சாணியாகவே இருந்து வருகிறது.
இருந்தும் நம் வாழ்க்கையில் ஒரு சில கடினமான சூழ்நிலைகளை நமது திறமையாளும்,அறிவாலும் கடக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பயத்தில் முடங்கி விடுவது நமக்கு நாமே கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாகும்..! இந்த பயத்திலிருந்து எப்படி வெளிவரும் உத்திகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..!
பயம்,பதட்டமில்லாமல் செயல்படுவதற்கான 8 உத்திகள் இதோ..!
1. Delayed Gratification (தாமதமான மன நிறைவு):
உடனே எல்லாம் நடைபெற வேண்டும் என்று நினைத்து நாம் நினைக்கும் சாப்பாட்டில் இருந்து கடைக்குச் சென்று பொருள்கள் வாங்குவது வரை என்று பல விஷயங்களை நாம் செய்துவிட்டால்,பிறகு எதிர்காலத்தில் இதனால் நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரலாம். அது ஆரோக்கியம் சம்பந்தமாகவோ அல்லது பணப்பிரச்சனை சம்பந்தமாகவோ இருக்கலாம்..! எனவே என்றைக்குமே நாம் ஒரு முடிவை எடுத்தால் அதற்கு உடனடி தீர்வு எதிர்பார்ப்பது நல்ல அணுகுமுறை கிடையாது. ஒரு சில விஷயங்கள் எப்போது கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் தாமதமான மனநிறைவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.Discipline (ஒழுக்கம்):
ஒழுக்கம் இதுதான் மிக முக்கியமானது. பிறரின் தூண்டுதல்கள் இல்லாமல் நாம் நினைக்கும் அல்லது அடைய நினைக்கும் குறிக்கோளை தானாக சுயமாக சிந்தித்து எண்ணங்களை சீரமைத்து வெற்றிக்கான நல்ல பாதையில் செல்வதே ஒழுக்கமாகும். இதனால் நமக்கு எந்த ஒரு பயமும் பதட்டமோ ஏற்படாது. வேண்டுமென்றால் அலுப்பு ஏற்படலாம். ஆனால் அதையும் நாம் முறியடிக்க வேண்டும்.
3. Learning how to learn? (கற்றுக்கொள்வது எப்படி என்பதை கற்பது):
புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பது. அந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, எடுத்துக்காட்டாக: உடற்பயிற்சி செய்வது, புதிய மொழியை கற்றுக் கொள்வது, உணவு பழக்க வழக்கங்களை சீரமைத்துக் கொள்வது என்று பல விஷயங்கள் இருக்கிறது. படிக்கும் விஷயத்தில் நாம் ஏன் இதை படிக்கிறோம்..! இதனால் என்ன ஆகும்! என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டோமானால் அது எப்போதும் நமக்கு மறக்காமல் இருக்கும். எப்படி செயல்படுகிறோம் என்பது முக்கியமல்ல.. அதனை எப்படி கற்றுக் கொண்டு செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்..!
4. Selling Skills (விற்பனை உத்திகள்):
சுயமாக பொருள்களை தயாரிக்க தெரியாவிட்டாலும் அது போன்ற பொருட்களை விற்பனை செய்யும் உத்திகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சில நேரங்களில் இது போன்ற விற்பனை உத்திகளும் நமது வாழ்க்கையின் பொருளாதாரத்திற்கு கை கொடுக்கும். ஆன்லைன் அல்லது நேரடியான அணுகுமுறை போன்ற எந்தவித விற்பனையாக இருந்தாலும் முறையான உத்திகளை நாம் கையாள வேண்டும். நமது சிந்திக்கும் திறன், நடந்து கொள்ளும் விதம், பேசும் திறன் இது எல்லாம் தான் நமது விற்பனை உத்திகளை நிர்ணயிக்கிறது.
5. Focus and Deep Work (கவனம் மற்றும் ஆழமான செயல்படும் திறன்):
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன் நமது எண்ணங்களை சீரமைக்க வேண்டும். அதேபோல் கவனச் சிதறல் ஏற்படக்கூடிய விஷயங்களில் இருந்து நம்மை நாமே தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். போன், டிவி இதுபோன்ற பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்க்கவும். முழு கவனத்தையும்,ஆற்றலையும் நாம் வேலை பார்க்கும் அல்லது செயலாற்றும் களத்தில் செலுத்த வேண்டும். கவனச் சிதறல் மூலம் நமக்கு மேலும் பயமும்,பதட்டமும் ஏற்படும். என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயலை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனால் கவனிச்சிதறலை நாம் சுலபமாக கையாள முடியும்.
6. Confident Communication (தைரியமான தொடர்பு கொள்ளல்):
இந்த பதில் சரியா இருக்குமா..? என்று யோசித்து பதிலை சொல்லாமல் வாய்க்குள்ளையே முழுங்கி விடுவது. மேலாளர் அல்லது உயர் அதிகாரியிடம் பேச தயங்குவது இதுபோன்று பல விஷயங்கள் நமது தொடர்பு கொள்ளும் திறனை பாதிக்கிறது.
எதுவாக இருந்தாலும் தைரியமாக தொடர்பு கொள்ளும் திறனை படிப்படியாக பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தனியாக இருக்கும் பொழுது பிறரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பேசி பார்ப்பது. அதேபோல் பிறரின் உரையாடல்களை கவனமாக கேட்பது. அதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டால் நாமும் தைரியமாக தொடர்பு கொள்ள முடியும்.
7. The skill of emotional control (உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன்):
உங்கள் மீது சாட்டப்படுகின்ற பொய்யான விமர்சனங்களுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றியே தீர வேண்டும் என்ற மனப்பான்மையை ஓரம் கட்டுங்கள். உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அழுகை, கோபம், சிரிப்பு, ஏமாற்றம், துக்கம் இவையெல்லாம் வாழ்க்கையின் உச்சகட்ட உணர்ச்சிகள் என்றே சொல்லலாம். இந்த உணர்ச்சிகளையும் முறையான அளவில் கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். உணர்ச்சிகள் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் அதுவே நம் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கும் அரணாக அமைந்துவிடும். முடிந்த அளவுக்கு தியானம், உடற்பயிற்சி, நல்ல எண்ணங்களை சிந்திப்பது இதுபோன்று பல நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
8. Health management (ஆரோக்கிய மேலாண்மை):
உடலின் ஆரோக்கியத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அனைத்தையும் பெற நினைத்தால் மட்டும் போதாது, உடலையும் நமது சுகாதாரத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியமே நம் மனதின் ஆரோக்கியம். சரிவிகித உணவு, போதுமான நீர், உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சி, தியானம், நீராடுதல், கழிவுகளை வெளியேற்றுதல், தூய்மையான ஆடைகளை அணிதல் இதுபோன்ற நல்ல செயல்முறைகளையும், நடைமுறைகளையும் வாழ்க்கையில் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்புறம் என்னங்க மேல சொன்ன இந்த எட்டு உத்திகளை உங்க வாழ்க்கையில நடைமுறைப்படுத்துங்கள். நீங்களும் பயம் இல்லாமல் பதட்டப்படாமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம்..! பதறாத காரியம் சிதறாது..!