

பேச்சுக் கலையில் சிறந்து விளங்க, காலம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பேசக் கற்றுக் கொண்டால் பிறரை எளிதில் கவர முடியும். சாணக்கிய நீதி மற்றும் உளவியலை அடிப்படையாகக் கொண்டு தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்க உதவும் 10 நுட்பங்களை தெரிந்து கொள்வோம்.
சாமர்த்தியமாக பேசுவதற்கான 10 உளவியல் நுட்பங்கள்
1. தன்னை மதித்தல்
உங்கள் வார்த்தைகளை பிறர் மதிக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களுக்கு மரியாதை கொடுங்கள். தன்னைத் தானே மதிக்காத ஒருவரை உலகம் மதிக்காது என்கிறார் சாணக்கியர். பேசும்போது தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் திடமாகவும், சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டும். தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், குரலின் தொனி, உடல் மொழி ஆகியவை பேச்சின் தாக்கத்தை நிர்ணயிக்கின்றன.
2. கண் தொடர்பு
கண்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் கருவி. முறைத்துப் பார்ப்பது போல் இல்லாமல் இயல்பாக எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும்.
3. எதிராளியைப் புரிந்து கொள்ளுதல்
சாமர்த்தியமாக பேசுவதன் ரகசியம் எதிராளியைப் புரிந்து கொள்வதில் உள்ளது. எதிரியை தோற்கடிப்பதற்கு முன்பு அவனது பலவீனத்தை அறிந்து கொண்டால் அவர்களின் இதயத்தை வெல்லலாம். அவரது பலவீனத்தைப் புரிந்து கொண்டு உரையாடலைத் தொடங்கும் போது அவர் உண்மையான தோழனாக மாறுவார்.
4. உண்மைத்தன்மை
சாமர்த்தியமாக பேசுவதற்கான மிகப்பெரிய மந்திரம் உண்மைத்தன்மையுடன் இருப்பது. பிறரைக் கவர நினைத்து, குரலையும் பேசும் தொனியையும் மாற்றினால், நீங்கள் ஒரு போலியானவர் என தெரிந்துவிடும். ஒரு மனிதனின் உண்மையான அடையாளம் அவனது நடத்தையே, வார்த்தைகளின் வெளிவேஷம் அல்ல என்கிறார் சாணக்கியர்.
5. மௌனம்
எப்போது பேச வேண்டும், எப்போது பேசக்கூடாது என்பதைத் தெரிந்து வைத்திருப்பவரே உண்மையான சாமர்த்தியசாலி. கேட்காமலேயே ஆலோசனை வழங்குவதும் யோசிக்காமல் பேசுவதும் முட்டாள்களின் அடையாளம். மௌனம் என்பது பலவீனமல்ல, மிகப்பெரிய சுய கட்டுப்பாடு. குறைவான வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம்.
6. ஆழமான அறிவு
பேச வேண்டிய விஷயத்தைப் பற்றிய ஆழமான அறிவு இருக்க வேண்டும். தயாரிப்பு இல்லாமல் பேசுவது வெற்றுக் கூச்சலாக இருக்கும். சமூக ஊடகங்களில் எதிராளி எதை விரும்புகிறார், பின்பற்றுகிறார் என்ற விஷயங்களை தெரிந்து கொண்டு பேசும் போது அவர் உங்களது பேச்சை ஆர்வமுடன் கேட்பார்.
7. நோ சொல்லுதல்
எல்லாரையும் திருப்தி படுத்த முயல்வது உங்களது மதிப்பைக் குறைக்கும். அந்த நபர் இறுதியில் தன்னையே இழந்து விடுகிறார் என்கிறார் சாணக்கியர். ஒரு விஷயத்தை வேண்டாம் என்று மறுக்கும் போது அது தெளிவாகவும் நேரடியாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய எல்லைகளை பிறர் அறிந்து கொள்வார்கள். இதனால் நீங்கள் நேர்மையான மனிதராக பார்க்கப்படுவீர்கள்.
8. குறைவாகப் பேசுதல்
குறைந்த வார்த்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறைவான வார்த்தைகளில் ஆழமாக ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லும்போது கேட்பவர்களின் இதயத்தைத் தொட்டு ஆழப் பதிந்து விடும்.
9. கேட்டல்
உங்கள் பேச்சை மக்கள் கேட்க வேண்டும் என்றால் நீங்கள் பிறர் பேசுவதை கவனமாக கேட்க வேண்டும். வெறும் வார்த்தைகளை மட்டுமல்ல, எதிராளியின் உணர்ச்சிகள், சிந்தனைகள் மற்றும் நோக்கங்களை புரிந்து கொள்வதும் இதில் அடங்கும். அவர் மனதின் வரைபடத்தை படிக்க முடிந்த ஒருவரால் அவர்கள் மனதை எளிதாகக் கவர முடியும்.
10. உடல் மொழி
மனிதனின் உடல் மொழியும் முகபாவனைகளும் அவனது உள்ளத்தை அப்படியே எடுத்துக்காட்டுகின்றன. எதிராளியை உன்னிப்பாக கவனித்து புரிந்து கொள்ள வேண்டும். அவரது கண்கள் என்ன சொல்கின்றன? உங்கள் பேச்சை ஆர்வமாக கவனிக்கிறாரா, இல்லையா? கடிகாரத்தை அடிக்கடி பார்த்தால் பேசும் விஷயத்தை மாற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்
இந்த பத்து விஷயங்களையும் பின்பற்றினால் நிச்சயமாக பேச்சுக்கலையில் சிறந்து விளங்கமுடியும்.