
நிறைய சம்பளம், ஆடம்பரமான வீடு, பெரிய கார், மற்றும் பிற வசதிகளுடன், பிக்கல், பிடுங்கல் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியானது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் இல்லாமலேயே ஒரு மனிதனால் நிம்மதியாக இருக்க முடியும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. சிறிய விஷயங்களில் மகிழ்ச்சி;
வாழ்வின் எளிய அன்றாட நிகழ்வுகள் கூட ஒரு மனிதனை நிம்மதியாக வைத்திருக்கக்கூடும். காலை காபியை அவசரமோ பதட்டமோ பரபரப்போ இன்றி ரசித்துக்குடிப்பது, நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவது குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்வது போன்ற நிகழ்வுகளை கூட ரசித்து அனுபவித்து செய்யும்போது மனதில் ஒரு நிம்மதி உண்டாகும்.
2. தனக்குப் பிடித்த வாழ்க்கை;
தனக்குப் பிடித்த மாதிரியான வேலையை செய்து, இஷ்டப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழும் மனிதன் மனதில் எப்போதும் நிம்மதி இருக்கும். பிறரைக் கவரவேண்டும் அல்லது மற்றவர்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொண்டு அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று அவர் எந்த காரியத்தையும் செய்வதில்லை. இவர் மனதில் எப்போதும் நிம்மதி இருக்கும்.
3. நிகழ்கால மகிழ்ச்சி;
கடந்த காலத்துயரங்களை நினைத்து அழுவதும், வருந்துவதுமாக பழைய சுமைகளை மனதில் சுமந்து கொண்டிருப்பதில்லை நிம்மதியான மனிதன். அவற்றை ஒரு பாடங்களாக அனுபவங்களாக மட்டுமே நினைத்துப் பார்த்துக் கொண்டு தனது நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
4. எனக்கு நானே நண்பன்;
நிறைய நண்பர்கள் இருந்தால்தான் ஒருவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது இல்லை. நிம்மதியான மனிதன் நண்பனே இல்லாவிட்டால் கூட அமைதியாக தனது வேலைகளை செய்யவும் தனியாக வெளியே செல்லவும் அஞ்சுவதில்லை. தனக்குத்தானே நண்பனாகி மகிழ்ச்சியாக இருக்கிறார்.
5. துயரத்தில் உடைந்து போவதில்லை;
வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு அஞ்சுவதுமில்லை, பின் வாங்குவதுமில்லை. தீர்வுகளை கண்டுபிடித்து எளிதில் அமைதியாக செயல்படுத்துபவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.
6. மன்னிக்கும் குணம்;
தனக்கு கெடுதல் செய்தவரை மன்னித்து மறந்துவிடும் மனிதன் எப்போதும் நிம்மதியாக இருக்கிறார். யார் மேலும் வெறுப்போ கசப்போ காட்டுவதில்லை.
7. பொறாமைப் படுவதில்லை;
பிறருடைய வெற்றியையும் உயர்வையும் கண்டு பொறாமைப்படுவதை நிம்மதியான மனிதன் செய்வதில்லை. அவரை முழுமனதோடு வாழ்த்துவார்.
8. மாற்றத்தை ஏற்றுக்கொள்தல்;
புதிய சூழ்நிலைகள், எதிர்பாராத மாற்றங்கள் போன்றவற்றை மிகவும் ஆர்வத்தோடு எதிர்கொள்ளும் மனிதன் நிம்மதியாக இருக்கிறார்.
9. அங்கீகாரம் தேவையில்லை;
பிறர் தங்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும், பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதவர் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார். தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு கொண்டிருக்கும் மனிதன் பிறருடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை.
10. உள்ளார்ந்த மகிழ்ச்சி;
தன்னிடம் இருப்பதை வைத்து திருப்தி அடையும் குணம் கொண்ட மனிதனுக்கு வாழ்வில் நிம்மதி இருக்கிறது. தன்னிடம் இது இல்லையே என்று நினைத்து ஏங்குவது கிடையாது. அதனால் அவர் எப்போதும் நிம்மதியாக உணர்கிறார்.