
துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும். துணிந்துவிட்டால் வாழ்க்கை வழிகாட்டும் என்பார்கள். எனவே எந்த ஒரு செயலிலும் துணிந்து கால் வைக்க அவை வெற்றியைத்தான் தரும். வாழ்க்கை போராட்டம் நிறைந்ததுதான் என தெரிந்தாலும் துணிந்து போராடி விடவேண்டும். அப்போதுதான் வெற்றி நம் காலடியில் வந்து விழும். ஒரு நொடி துணிந்தோம் என்றால் வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிடலாம். ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அந்த வாழ்க்கையை அருமையாக ஜெயித்து காட்டிவிடலாம். துணிந்த பின் துக்கம் எது?
தினம் தினம் இப்படி வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறோமே வெற்றி கிடைக்குமா என்று வருந்த தேவையில்லை. தனியாக போராடுவதே வெற்றிதான். வாழ்க்கை என்பது போராட்டகளம். அதில் போராடுவதற்கு துணிச்சல் அவசியம். துணிந்துவிட்டால் பயம் என்பது ஓடிப் போகும்.
எந்த ஒரு காரியத்தையும் எடுக்கும் பொழுது மனஉறுதி என்பது மிகவும் அவசியம். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது அதில் இருக்கும் கஷ்டங்களையும், எதிர் நோக்க வேண்டிய பிரச்னைகளையும் மனதில் கொண்டு அந்த காரியத்தை எடுக்க தயங்கக்கூடாது. எது வந்தாலும் எதிர் நோக்கும் மன தைரியம் என்பது அவசியம்.
எந்த ஒரு விஷயத்திலும் இறங்குவதற்கு முன்பு அதனால் உண்டாகக்கூடிய பின் விளைவுகளை யோசித்து அதற்கான வழிகளையும் மனதில் வகுத்துக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அந்த செயலில் இறங்குவதற்கு போதுமான தைரியம் உண்டாகி சிரமம் எதுவும் இன்றி அந்த செயலை முடித்து விட முடியும். அதற்கு மன உறுதி என்பதும் மிகவும் அவசியம். செய்யத் துணிந்த பின் எவ்வளவு இடர்கள் வந்தாலும் அதை நோக்கி தொடர்ந்து போராடவும், அதிலிருந்து விலகி விடாமல் இருக்கவும் மன உறுதியும், தைரியமும் அவசியம் இருக்க வேண்டும்.
தயங்குபவர்களுக்கும், பயப்படுபவர்களுக்கும் இந்த உலகில் எதுவுமே சாத்தியம் இல்லை. துணிவும் முயற்சியும் இருந்துவிட்டால் போதும் எதையும் சாதித்து விடலாம். வானத்தில் காற்று எதிராக வீசினாலும் கழுகு பறப்பதற்கு பயப்படுவதில்லை. சோம்பி மரக்கிளையில் அமர்ந்து விடுவதில்லை. இங்கு துணிவும் முயற்சியும் இன்றி எதுவும் சாத்தியம் இல்லை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது வள்ளுவர் வாக்கு.
எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். விடாமுயற்சி உள்ளவர்கள் ஒருபோதும் இகழ்ச்சிக்கு உள்ளாக மாட்டார்கள். அதாவது அவமானப்பட மாட்டார்கள் என்பதை மிக அழகாக சொல்லியுள்ளார். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
ஒரு செயலை செய்ய தயங்குவதும், பயப்படுவதும், முயற்சிக்காமல் இருப்பதும் தவறு. அப்படி பயந்து கொண்டு அந்த செயலை செய்யாமல் இருப்பதால் அந்த செயலைப் பற்றிய கவலையும், பயமும், அதனால் பிரச்னைகள் ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கமும் ஏற்படும்.
அதுவே தைரியமாக எந்தவித தயக்கமும் இன்றி அந்த செயலை செய்ய முயற்சித்தால் அதற்கான வழிகள் தானாக புலப்படும். கடைசியில் வெற்றிக்கான பாதைகள் புலப்பட்டு அதை நோக்கி பயணிக்கவும் உதவும். எனவே வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமிருந்தால் துணிச்சல் என்பது மிகவும் அவசியம்.
சிலர் எதற்கெடுத்தாலும் தயங்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதை எப்படி செய்வது? செய்தால் சரியாக வருமா? பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? என்று எந்த ஒரு செயலையும் செய்வதற்கோ, முயற்சி எடுப்பதற்கோ தயக்கம் காட்டுவார்கள்.
இப்படிப்பட்ட தயக்கத்தை போக்குவதற்கு முதலில் தயக்கத்திற்கான காரணத்தை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எதனால் தயங்குகிறோம் என்பதையும், அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து அவற்றிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். அத்துடன் அதை எதிர்கொள்ளவும் பழக வேண்டும். இப்படி செய்தால் வாழ்க்கையில் என்றும் வெற்றி தான்.
முயற்சிப்போமா நண்பர்களே!