
தற்போது எல்லா இடங்களிலும், ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு அதிகரித்து சின்னஞ்சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதிகமான நேரம் செல்போனில் செலவழித்து வருகின்றனர். இதனால் சிறுவர்களுக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் போவதுடன் கவனக்குறைவும் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கும் பலவிதமான உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
ஜெனரேஷன் z என்பது பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்த தலைமுறையைக் குறிக்கிறது. தற்போது ஜெனரேஷன் z இளைஞர்களும் இளம்பெண்களும் டிஜிட்டல் டீடாக்ஸ் கலாச்சாரம் எனப்படும் செல்போன் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் காலகட்டத்தில்தான் அவர்களும் பிறந்து வளர்ந்தார்கள். அதனால் அவர்களுக்கு அதீதமான செல்போன் பயன்பாடு ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நன்கு தெரியும். எனவே இவர்கள் போன் இல்லாத பகுதிகளில் வாரத்தில் அல்லது தினமும் சில மணிநேரம் செலவிடுவதை வலியுறுத்துகிறார்கள்.
அதீத செல்போன் பயன்பாட்டின் தீமைகள்;
ஃபோனில் அதிக நேரம் செலவிடும்போது பிறர் அருகில் இருந்தாலும் சமூகத் தனிமையை உண்டாக்குகிறது. கைபேசிகள், செய்யும் வேலை, உறவுகள் மற்றும் பிற செயல்களில் கவனத்தைக் கலைக்கின்றன. செல்போனின் திரை வெளிச்சம் மற்றும் அதன் நீல நிற விளக்கு வெளிச்சம் தூக்கத்தை தூண்டும் மெலட்டோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. அதிலிருந்து வரும் நோட்டிபிகேஷன் சத்தங்கள் தூக்கத்தை கிடைக்கின்றன.
டிஜிட்டல் டீ டாக்ஸ் என்பது என்ன?
டிஜிட்டல் டீ டாக்ஸ் என்றால் செல்போன் பயன்பாட்டை அறவே நீக்குவது அல்ல. மாறாக ஸ்மார்ட் ஃபோன்களை வார இறுதி நாட்கள் அல்லது பகலில் சில குறிப்பிட்ட மணி நேரங்கள் பயன்படுத்தாமல் இடைவெளிகளை உருவாக்குவது பற்றியது ஆகும். எல்லா நேரமும் போனை எடுக்காமல் சில மணி நேரங்கள் போனை பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கிறது.
ஜென் z கள் ஏன் டிஜிட்டல் டீ டாக்சை வலியுறுத்துகிறார்கள்?
பல ஜெனரேஷன் இசட் மக்கள் தொடர்ச்சியான ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் தீமையான விளைவுகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். ஸ்மார்ட்போனில் வரும் ரீல்ஸ்கள், வீடியோக்கள் போன்றவற்றை அதிகளவு ஸ்க்ரோல் செய்து பார்க்கும் போது மன அழுத்தமும் திருப்தியின்மையும் ஏற்படுகிறது. குறைந்த அளவு செல்போனை பயன்படுத்தும்போது அது மனநிலை மேம்பாட்டை அதிகரிக்கிறது, பதட்டத்தை குறைக்கிறது, ஆழ்ந்த நினைவாற்றல் மற்றும் உணர்ச்சி சமநிலையை வளர்க்க உதவுகிறது.
கவனச் சிதறல்கள்களை குறைப்பதன் மூலம் தனிநபர் தங்கள் அறிவுச்செறிவை மேம்படுத்தலாம். உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடலாம். டிஜிட்டல் இணைப்பை குறைத்து உண்மையான நேருக்கு நேர் மனித தொடர்புகளை ஏற்படுத்தி அதில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை அனுபவப்பூர்வமாக உண்ர்ந்திருக்கிறார்கள்.
நோ ஃபோன் ஏரியாக்கள்:
இந்தியாவில் ஜெனரல் இஸட் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் டிஜிட்டல் போன் பயன்பாட்டில் இருந்து விலகி அமைதியாக நேரம் செலவிடுவதில் ஈடுபட்டுள்ளார்கள். டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் இந்த கலாச்சாரம் சமீபத்தில் பரவி வருகிறது. நோ ஃபோன் ஏரியா எனப்படும் தொலைபேசி இல்லாத இடங்களில் நேரம் செலவிடுவது பிரபலமாகி வருகின்றன. சைலன்ட் கஃபேக்கள் சத்தமாக இசைக்கும் பாடல் ஒலி இல்லாமல், தொலைபேசி அழைப்புகள் இல்லாமல், கூட்டம் இல்லாத அமைதியாக செயல்படும் காபி கடைகளைக் குறிக்கிறது.
இங்கு வாடிக்கையாளர்கள் தொலைபேசியை பத்திரமாக வைத்திருக்க லாக்கர்கள் அல்லது பைகளை கூட வழங்கப்படுகின்றன. மேலும் உணவகங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் ஃபோன்கள் இல்லாமல் நேருக்கு நேர் மக்கள் ஒருவருடன் ஒருவர் உரையாடலாம் ஓய்வாக இருக்கலாம். புத்தகம் வாசிக்கலாம்.
பயன்கள்;
இயற்கையான சூழல்களில் நேரத்தை செலவிடும்போது அது மன அழுத்த ஹார்மோன்களை குறைத்து நரம்பு மண்டலத்தை மீட்டெடுத்து அமைதியான சூழலை உருவாக்குகிறது. இதனால் படைப்பாற்றல் அதிகரிக்கிறது ஓய்வெடுத்து மீண்டும் செயல்பட ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.