
மனிதன் எதனையும் வெல்ல வேண்டுமாயின் அவன் இயங்க வேண்டும். செயல்பட்டு உழைக்கவேண்டும். ஒரு குறிக்கோளை உண்டு பண்ணிக்கொண்டு அதனை அடைவதற்காக முயலவேண்டும். முயற்சிதான் உலகின் முகத்தையே மாற்றி அமைத்தது. எவர் எவரோ முயன்றதன் பலன்கள்தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை வசதிகளும் வளர்ச்சிகளும்.
வியாசர், துளசிதாசர், கம்பர் போன்றவர்கள் முயன்றிருக்காவிட்டால் மகாபாரதம், இராமாயணத்தை எழுதியிருக்க முடியாது. அதற்கு இணையாக சொல்லப்படும் ஹோமர் முயன்றிருக்காவிட்டால் இல்லியட், ஒடிசி காவியம் கிடைத்திருக்காது. திருவள்ளுவர் முயன்றிருக்காவிட்டால் திருக்குறள் கிடைத்திருக்குமா? எடிசன் முயற்சி செய்யாதிருந்தால் நமக்கு மின்விளக்கு கிடைத்திருக்குமா? மார்க்கோனி முயன்றிருக்காவிட்டால் நமக்கு வானொலி பெட்டி கிடைத்திருக்குமா? இப்படி எல்லா பொருள்களுமே எவரோ ஒருவர் முயன்றதன் பலன்தான். அவர்கள் மட்டும் முயலாது முழங்காலை கட்டிக்கொண்டு இருந்திருப்பார் களாயின் மனித நாகரிகமும், முன்னேற்றமும் முடமாகி கிடந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
முயற்சி மட்டுமில்லாது இருக்குமாயின் உலகில் மலர்ச்சி ஏற்பட்டிராது என்பது உண்மை. சிறு குடிசையில் பிறந்த ஜான் டி ராக் பெல்லர் முயற்சியால் முயன்று முயன்று உயர்ந்து "தி ஸ்டாண்டர்ட் ஆயில் டிரஸ்ட்" என்ற தொழிற்சாலையை நிறுவியது, ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ் ஈஸ்ட்மேன் விடாமுயற்சியால் வெற்றி பெற்று சினிமா தொழிலுக்கு தேவையான ஈஸ்ட்மேன் ஃபிலிமைக் கண்டுபிடித்தது, வறுமை சூழ் குடும்பத்தில் பிறந்த தாமஸ் லிப்டன் தொடர் முயற்சியினால் தேயிலை தயாரித்து விற்பனை செய்வதில் வெற்றி பெற்றது.
இப்படி குடிசையில் பிறந்த இவர்களை செல்வர் ஆக்கியது முயற்சிதான். முயற்சி மட்டும் காட்டாது இருந்திருப்பார்களாயின் இவர்கள் ஏதோ ஒரு மூலையில் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்து தம் வாழ்வை முடித்துக்கொண்டிருப்பார்கள். முயற்சியால் முன்னுக்கு வந்துதான் செய்த தர்மங்களால் உலகின் நன்மதிப்புக்கு ஆளானவர்கள் இவர்கள் அனைவரும்.
எனவே வாழ்வில் வகையும், வனப்பும்பெற வேண்டுமாயின் நாம் முயன்று முயன்று கடுமையாக உழைத்து உரியன புரிந்தாக வேண்டும். முயன்று வினைமுடித்து வாகை சூடியவர்கள் மட்டுமே கால வெள்ளத்தை தம் காலால் உடைத்தெறிந்து மாந்தர் உள்ளத்தில் என்றும் வாழமுடியும் என்பதற்கு இவர்கள் போன்றவர்கள்தான் எடுத்துக்காட்டு.
மேலும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உண்மையில் துன்பங்கள் ஒரு தடையே அல்ல. அவை வெற்றிக்குத் துணையானவை. வெற்றி பெற்றே தீருவது என்னும் உறுதி கொண்டவர்கள் ஒருபோதும் துன்பங்களை கண்டு மனம் தளர்வதில்லை. துன்பங்கள் அவர்களை துவள செய்வதற்கு மாறாக துடிப்புடன், வேகத்துடன், ஆர்வத்துடன் வேலை செய்ய தூண்டச் செய்திருக்கிறது. அதனால்தான் துன்பங்கள் நமக்கு துணை செய்கின்றன என்று நினைத்துக் கொள்ளவேண்டும்.
துன்பங்கள் நம் திறமைக்கு, நம் வலிமைக்கு விடப்படும் அறைக்கூவல். இடற்கு இடர் சூழ்ந்து வெற்றி பெற்றே மீள்வது என்று உறுதிகொண்டு, அந்த உறுதியுடன் செயலாற்றுவோமாயின் வெற்றி நமக்குத்தான் என்பதில் ஐயமில்லை. ஆதலால் வெற்றிக்குத் துன்பம் துணைதான். என்பதை மனதில் கொள்வோம். முயற்சி எடுப்பதற்கும் அவைகள் உறுதுணைபுரியும் என்பதில் நம்பிக்கை வைப்போம்.
அடைய வேண்டிய
இலக்கை ஒருபோதும்
விட்டு விடாதீர்கள் .
உங்கள் வேலையை
நேசியுங்கள்!
வெற்றி என்பது நீங்கள்
தொடர்ந்து எடுக்கும்
முயற்சியில் இருந்து
மட்டுமே வருகிறது!