
தனிமை என்பது தொடக்கத்தில் நிம்மதியைத் தருவதைப்போல இருந்தாலும் அது நிரந்தரமாகத் தொடரும்போது துன்பத்தையே தரும். அது மனதை பாதித்து அதன் விளைவாக ஒருவருடைய ஆரோக்கியத்தையும் பாதிப்படையச் செய்யும்.
சிலர் தனிமையை குறுகிய காலத்திற்கு விரும்பி ஏற்றுக் கொள்ளுவர். உதாரணமாக தொடர் வேலையின் காரணமாக மனச்சோர்வு ஏற்படும் சமயங்களில் மலைவாசஸ்தலங்களுக்குச் சென்று இரண்டு நாட்கள் அல்லது ஒருவாரம் ஓய்வெடுப்பர். மனதில் இருந்த இறுக்கம் அகன்று ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். திரும்பவும் தனது அன்றாடப் பணிகளை சுறுசுறுப்பாகத் தொடங்க விரும்பி ஏற்கும் குறுகிய காலத் தனிமை பயன்தரும்.
உறவுகளாலும் நட்புகளாலும் பாதிப்படைந்து அதனால் ஏற்படும் வெறுப்புணர்ச்சியின் காரணமாக சிலர் தனிமையை நாடுவர். தங்களைத் தாங்களே தனிமைபடுத்திக் கொள்வர். சமூகத்தின் மீது உருவாகும் வெறுப்பின் காரணமாக உருவாகும் தனிமைச் சூழல் இது.
சிலர் தாங்கள் பெற்ற பிள்ளைகள் பணிநிமித்தமாக பொருள் ஈட்ட பிரிந்து வேறு நாட்டிற்கோ அல்லது வேறு ஊர்களுக்கோ சென்று வாழும் சூழ்நிலை ஏற்படும்போது கணவனும் மனைவியும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்த தனிமையானது நாளாக நாளாக ஒருவித மனச்சோர்வினை ஏற்படுத்தும். அளவளாவி மகிழ யாருமே இல்லாதபோது கணவனும் மனைவியும் மனதளவில் பாதிப்படைகின்றனர். இருவரில் ஒருவர் வயது மூப்பின் காரணமாக காலமாகும்போது மற்றொருவர் தனிமைப்படுத்தப்படுகிறார். இது மிகவும் துன்பமயமான தனிமை.
நாற்பது வருடங்களுக்கு முன்பு மக்கள் கூடி வாழ்ந்தனர். அக்காலத்தில் நாலுகட்டு வீடுகளில் பலர் உறவும் நட்புமாக வாழ்ந்தனர். ஒருவருக்கொருவர் அளவளாவி மகிழ்ந்தனர். ஒருவரிடம் நாம் நமது கஷ்டங்களைப் மனம்விட்டுப் பேசி பகிர்ந்து கொண்டால் அதன் மூலம் நம் மனதில் உள்ள பாரம் வெகுவாகக் குறையும்.
தற்காலத்தில் ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது நான்கு பேர்கள் மட்டுமே உள்ளனர். இதற்கு நியூக்ளியர் பேமிலி என்று ஒரு பெயரையும் சூட்டிவிட்டனர். அந்த நால்வரும் ஒருவருக்கொருவர் உரையாடி மகிழாமல் சதாசர்வ காலமும் வாட்ஸ்அப், பேஸ்புக் என்று மூழ்கிக் கிடக்கின்றனர்.
சொல்லப்போனால் இந்த உலகில் தனிமனிதன் என்று எவருமே இல்லை. நம்மைச்சுற்றிலும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழத்தானே வேண்டியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் எப்படி தனியாள் ஆவோம் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிலருக்கு தனிமையில் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும். அத்தகையவர்கள் கீழ்காணும் பத்து எளிய விஷயங்களைக் கடைபிடித்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
தினமும் காலையிலும் மாலையிலும் காலாற நடக்கப் பழகுங்கள். நல்லநல்ல புத்தகங்களைத் தேடிப்படியுங்கள். தினமும் குறைந்தபட்சம் பத்து பக்கங்களாவது படித்தே தீருவேன் என்ற சபதம் எடுங்கள். வாரத்திற்கு ஒருமுறை நகைச்சுவையான திரைப்படங்களைப் பாருங்கள். பக்தி இருந்தால் தினமும் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு பலரை சந்திக்கும் போது நம்மைச் சுற்றி நாலுபேர் இருக்கிறார்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் மேலோங்கும்.
உங்களுக்கான எளிய உணவுகளை நீங்களே தயார் செய்து சாப்பிடுங்கள். அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு உங்களை அழைத்தால் அதில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் தொலைபேசியில் தனிமும் பதினைந்து நிமிடங்கள் உரையாடி மகிழுங்கள். நேர்மறையான விஷயங்களை மட்டுமே எப்போதும் பேசுங்கள். இது நல்ல பலனைத்தரும். கற்பித்தலில் விருப்பம் இருந்தால் அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுங்கள். கள்ளம்கபடமற்ற குழந்தைகளுடன் பழகும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். இன்னும் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
ஒருவருடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனமே காரணமாக அமைகிறது. மனதிற்குள் துன்பத்தை நுழைய விடாதீர்கள். இந்த உலகத்தில் நாம் மகிழ்ச்சியாக வாழவே பிறந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
கூடுமானவரை தனிமையைத் தவிர்க்கப் பாருங்கள். தவிர்க்க இயலாத சூழலால் தனிமைப்படும்போது கவலைப்படாதீர்கள். மேலே சொன்ன எளிய வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள். தனிமை உணர்வு உங்களை விட்டு அகன்றோடி மகிழ்ச்சி உங்கள் மனதில் வந்து அமர்ந்துகொள்ளும்.