

ஒருவருடைய மனம் தான் அவருக்கு உத்வேகம் அளித்து , இடர்படும் ஏராளமான சவால்களை சமாளிக்க வைத்து , அவரை வாழ்க்கையில் முன்னேற வைக்கிறது. அதே மனம் தான் ஒருவருக்கு சோம்பலை உண்டாக்கி , எதைத் தொட்டாலும் அந்த காரியம் முடிவதில்லை என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அவரை பலவீனமாக்கி, எதற்கும் தகுதியானவர் இல்லை என்ற சூழ்நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.
ஒருவரின் வெற்றிக்கும் தோல்விக்கும் மனம் மட்டுமே காரணமாக இருக்கிறது. நல்ல ஆரோக்கியமான ஒரு மனிதன் எந்த ஒரு விளையாட்டுப் போட்டியிலும் வெற்றி பெற முடியாமல் போவதை நாம் பார்த்து இருக்கிறோம், அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிலர் கடுமையான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதித்துக் காட்டுகின்றனர், இதற்கு எல்லாம் காரணம் மன உறுதி தான். கண்டபடி அலைபாயும் மனதினையும் கட்டுப்படுத்த நாம் கற்றுக்கொண்டால் வெற்றி என்பது ஒரு எளிய இலக்காக மாறிவிடும்.
1. எதிர்மறை எண்ணங்களை விரட்டுங்கள்:
நீங்கள் எந்த ஒரு செயலையும் தொடங்கும்போது, உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் உங்களை எந்த ஒரு செயலிலும் செயல்பட விடாது. நீங்கள் புதிய தொழில் செய்ய நினைத்தால் , ஏற்கனவே எல்லாரும் செய்தது தானே , நம் புதிய தொழில் நிலைக்குமா? போன வருடம் தொடங்கிய புதிய தொழில்கள் மூடப்பட்டது போல நம்முடையதும் ஆகிவிடுமா? என்ற பயம் தான் உங்களை புதிய தொழிலில் ஈடுபட விடாமல் முடக்கிவிடும்.
உங்கள் மூளையில் நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் வளர விடாமல் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்களின் தோல்வி, அவர்கள் சரியாக உழைக்காமல் விட்டதோ, அல்லது தரத்தில் சமரசம் செய்து கொண்டதால் தோல்வியை தழுவி இருக்கலாம், என்ற காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். அதே நேரம், அந்த ஊரில் எத்தனை பேர் இதே தொழிலில் பல தசாப்தங்களை கடந்து வெற்றி பெற்றுள்ளனர் என்பதையும் அறிந்து செயல்பட வேண்டும்.
2.குறைத்து மதிப்பீடு செய்பவர்களிடம் உங்களை நிரூபியுங்கள்:
நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் "உன்னால் அதை செய்ய முடியாது" என்று கூறி , ஒரு கூட்டம் உங்களை குறைத்து மதிப்பீடு செய்து , எப்போதும் அவ நம்பிக்கையாக பேசி உங்களை வளர்ச்சியை தடுக்க பார்க்கும். அவர்களிடம் உங்களைப் பற்றி பெருமையாக பேசி , உங்களது புதிய முயற்சிகள் , வெற்றிகளை பற்றி பேசி உங்களை நிரூபிக்க முயற்சி எதுவும் செய்யாதீர்கள்.
நீங்கள் அவர்களின் பேச்சை எதையும் காதில் வாங்காமல், உங்களது செயலில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். உங்களது தொடர் வெற்றிகள் ஒரு நாள் அவர்களை எல்லாம் சென்று அடையும் , அப்போது உங்களைப் பற்றி புகழ்ந்து அவர்கள் பேசுவார்கள். நீங்கள் அமைதியாக அதை கேட்டுக் கொள்ளுங்கள் , இது தான் உங்களது வெற்றி.
3. எப்போதும் பாதுகாப்பான நிலையில் இருக்க வேண்டிய எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்:
எப்போதும் புதிய முயற்சியில் ஈடுபடுவதை விட , இருப்பதை தக்க வைத்துக் கொள்ளும் பாதுகாப்பான மனநிலையில் இருப்பதை விட்டு விடுங்கள். " கருவறையில் இருப்பது தான் பாதுகாப்பு" என்று நினைத்தால் வெளியில் வந்து யாரும் மனிதனாக வளர்ந்து இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் ஒவ்வொரு வெற்றி கட்டாயம் கிடைக்கும். நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது தவறு இல்லை. ஆனால், துணிச்சலான சில முடிவுகள் தான் உங்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கும். உங்களின் பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து சிந்திக்கும் கோணத்தை மாற்றுங்கள்.
4. உங்களை கை தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
எப்போதும் யாரையும் நம்பி உங்களது எதிர்கால திட்டங்களை வகுத்து விடாதீர்கள். மாமா வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவார் , அக்கா ஐடி கம்பெனியில் வேலை வாங்கித் தருவாள் , அப்பா தொழில் தொடங்க பணம் தருவார் என்ற எண்ணங்கள் எதுவும் இருந்தால் , அதை முதலில் இன்றோடு அழித்து விடுங்கள். பலரது வாழ்க்கை தோல்விகளுக்கு முழு காரணமே மற்றவர்களை நம்பி இருப்பது தான். நீங்கள் எப்போதும் உங்களை மட்டுமே நம்பி , எதிலும் துணிச்சலாக இறங்கி பாருங்கள். ,
எதையும் நீங்களே சமாளிக்க கற்றுக் கொண்டீர்கள் என்றால் நிச்சயம் உங்களின் வெற்றி பயணம் தொடங்க ஆரம்பித்து விடும்.