
சிரிக்கலாமே!
சிரித்து பேசுவது உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. சிரிப்பு என்றால் வாய்வலிக்க சிரிக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அது சில நேரங்களில் உங்களுடைய வேலைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்.
அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. சிரிப்பு நம்முடைய மன அழுத்தத்தை குறைக்கின்றது. அலுவலக இடைவெளியில் நண்பர் களுடன் சிரித்து பேசுவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். அதற்காக டைம் டேபிள் போட்டு சிரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. உணவு இடைவெளிக்கு பிறகு நண்பர்களுடன் சற்று நேரம் அரட்டை அடிப்பது நல்லதே.
ஓய்வு நேரங்களில் ஜோக்ஸ் சொல்வதற்கும், கார்ட்டூன் பார்ப்பதற்கும், புத்தகம் படிப்பதற்கும் முயற்சிக்கவும். இது ஓரளவிற்கு நம்முடைய மன அழுத்தத்தை குறைக்கின்றது.
தூங்குங்கள்!
நன்றாக தூங்குவது ஓரளவிற்கு டென்ஷனை குறைக்கின்றது. தூங்குவதற்கு மாத்திரை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, சூடான பால் பருகலாம். நன்றாக தூங்க முடியும். காப்பி, போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும்.
உறவுகள்!
வேலைக்கு போகின்ற ஆண், பெண் இருவருமே கவனிக்க வேண்டிய விஷயம்தான் இது. வேலைதான் முக்கியமென்று நினைக்கின்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. இது, உங்களுடைய உறவுகளில் பிரிவு ஏற்பட காரணமாக இருக்கின்றது. அப்படி ஒரு நிலைமை வராமல் பார்த்துக்கொள்ளும் கடமை உங்களுக்கு இருக்கின்றது. வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு, ஆரோக்கியமும், உடலுறுதியும் மட்டுமல்ல, நல்ல ஒரு திட்டமும் தேவைதான்.
கணவன், மனைவி எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றாக தீர்மானிப்பது உங்களுடைய பிரச்னைகளை ஓரளவிற்கு குறைத்து கொள்ள உதவும். அது மட்டுமில்லாமல் உங்களுடைய துணை சொல்கின்ற நல்ல உபதேசங்கள் பல நேரங்களில் டென்ஷனை குறைக்க மட்டுமல்லாமல் அடுத்த நாள் வேலை நல்ல மனதோடு தொடங்குவதற்கும் வழிவகுக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவழிப்பதால் மனதிற்கு ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி ஓரளவிற்கு டென்ஷனை குறைக்கின்றது. இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு தருகின்றது. இந்த புத்துணர்வு மனதினை சரிவர செயல்பட துணைபுரியும். காலையிலோ, மாலையிலோ மனைவியுடனோ, நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ ஒரு மணிநேரம் நடப்பதால் உடலில் உள்ள பாரம் குறைப்பது மட்டுமல்லாமல் மனதிலும் பாரம் குறையும்.
அலுவலகத்தில்
நமக்கு பிரச்னைகள் ஏற்படுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடிந்தால், ஒரு அளவிற்கு நம்மால் டென்ஷனை குறைக்க முடியும். அவ்வாறு காரணத்தை அறிவதால், அதைப் போக்குவதற்கான மன உறுதியைப் பெற முடியும். அதற்காக முயற்சிக்க வேண்டும். வேலை செய்யும்போது டென்ஷன் ஆகாமல் இருக்க உங்களை மனரீதியாக தயார்படுத்துங்கள்.