
சாதாரணமாக எந்த ஒரு கடமையும் சிறப்பாக ஆற்றவேண்டும் என்றால் அதற்கு நல்ல மனோபலம் வேண்டும். அதற்குப் பக்க பலமாக இருக்கும் உறவு நட்புகளும் ஒத்துழைத்தால் எதையும் சிறப்பாக செய்து விட முடியும்.
அதழ் எறிந்தென்ன நெடுவன் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய்ப் போல
ஓடி உய்த்தெலும் கூடுமண்
ஒக்கல் வாழ்க்கைத் தட்கும்மா காலே!
என்ற ஒரு பாடலில் கூறப்பட்டுள்ள கருத்து:
எப்பொழுதுமே சுற்றம் சூழ அமர்ந்திருந்து செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் சிறப்புடன் செய்துவரும் ஒருவன்,
எவ்வளவு வறுமைப்பட்ட போதிலும் இதையும் செய்துவிட முடியும் நம்மால். இவ்வளவு செய்துவிட்டு இனிமேல் நிறுத்த முடியுமா? இதை செய்யாமல் விட்டால் நம் உறவும் நட்பும் நம்மைப் பற்றி எப்படி எல்லாம் நினைப்பார்களோ? எப்படியாவது கடன்பட்டாவது செய்து விடுவோம் என்றுதான் நினைப்பான். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே உறவுகளை கட்டிக்காத்த ஒரு பண்பு அது. பாதியில் நிறுத்துவதற்கு மனது வருவதில்லை.
அதற்கு ஒரு களர் நிலத்தில் மாட்டிக்கொண்ட, அதுவும் அந்த களர் நிலத்தில் எதுவுமே விளையாத மஞ்சள் கிழங்குகள் சிலவற்றை கடித்து உண்ண கூட இயலாத மான்குட்டி, அதில் மாட்டிக்கொண்டால் எப்படி அதிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிக்குமோ, அதுபோல் தான் உறவுகளின் இடையில் சிக்கிக்கொண்ட மனிதனும் என்கிறது அந்த செய்யுள். அந்தக் களர்நிலத்தில் சிக்கிக்கொண்ட மானாவது சிக்கலில் இருந்து விடுபட்டு வெளியில் வந்து விடலாம். ஆனால் உறவுகளின் பிடியில் சிக்கிக்கொண்ட மனிதன் அதிலிருந்து மீளவே முடியாது. காலை தடுத்து நிறுத்திவிடுமாம்.
அப்படி ஒரு குணம் மனிதர்கள் இடத்தில் இருப்பதில் வியப்பு எதும் இலலை. ஏனெனில் அவனின் வளர்ப்பு முறை, பந்த பாசம் அப்படிப்பட்டது. அதற்கு காரணம் என்ன என்றால்? இடைவிடாது கடமையை ஆற்ற வைக்கும் கர்மா தான்.
நம் கர்மா என்னும் வில்லில் இருந்து புறப்பட்டு வந்த அம்புகள்தான் நம் உறவுகளும் நண்பர்களும். அவர்களால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும் நம் கர்மாவின் வெளிப்பாடுதான்.
எய்தவரை விட்டுவிட்டு நாம் அம்புகளை நொந்து கொள்ள வேண்டியதில்லை. அதனால் எந்த பயனும் இல்லை. எண்ணத்தை பூரணமாக இறை நிலையில் கலக்கவிட்டு கடமையை செய்தோமானால் கரு மையம் தூய்மையாகும். பிறகு நம்மை வம்பிழுக்க வந்த அம்புகள் எல்லாம் தெம்பிழந்து போகும்.
நம் எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும், சிந்தனைகளும், நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களுக்கு நன்மை செய்யும் எனில் நம் கடமையை ஆற்ற காலம் கடத்த தேவையில்லை. அதை துன்பமாகவும் நாம் நினைக்கத் தேவையில்லை. அதுவும் நம் கர்மாவின் செயல் விளைவே என்று உணர்வோம்!