
5am Club Book: கனடா நாட்டைச் சேர்ந்த ராபின் சர்மா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். ஆன்மீகம், சுய முன்னேற்றம், மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது 'பொக்கிஷத்தை விற்ற துறவி (The Monk Who Sold His Ferrari)' நூலைப் போலவே 5am club என்பதும் இவரது பிரபலமான படைப்பாகும்.
அவருடைய 5am club என்ற புத்தகம் மனிதர்கள் தினமும் காலையில் 5 மணிக்கு எழுவதன் அவசியத்தையும், ஒரு நாளின் முதல் ஒரு மணி நேரத்தை தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஒதுக்குவதன் மூலம் மிக விரைவில் அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை அடையலாம் எனவும் கூறுகிறது. இந்த புத்தகம் ஒரு கதை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரிலே என்ற ஒரு பணக்கார தொழிலதிபர், சுய தொழில் செய்யும் ஒருவருக்கும், ஒரு கலைஞனுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது, தொழிலில் உயர்வது குறித்தும் வழிகாட்டி கோடீஸ்வரராக மாறுவதற்கான ரகசியத்தையும் கூறுகிறார்
1. 20/ 20/20 ஃபார்முலா: காலை 5 லிருந்து 6 மணி வரை வெற்றிக்கான நேரம். அதை மூன்று இருபது நிமிடங்களாக பிரித்து, முதல் 20 நிமிடத்தில் உடற்பயிற்சி, அடுத்த 20 நிமிடம் தியானத்திற்கு, கடைசி 20 நிமிடத்தில் புத்தகங்கள் வாசிக்க அல்லது சுய முன்னேற்றத்திற்கான பாட்காஸ்ட்டுகளை கேட்கலாம்.
2. பழக்கங்களை நிறுவுதல்: புதிய பழக்கங்களை தொடர்ந்து 66 நாட்களுக்கு செய்யும் போது அது வழக்கமாக மாறுகிறது.
3. மனிதனின் உண்மையான வெற்றிக்கு வித்திடும் நான்கு முக்கியமான விஷயங்கள்: சிறப்பான மனநிலை, ஆரோக்கியமான உடலமைப்பு, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் உள்ள அமைப்பு, நம்பிக்கை போன்றவை.
4.கம்போர்ட் சோனை விட்டு வெளியேறுதல்: எந்த ஒரு வெற்றிக்கும் ஒழுக்கமும், கம்போர்ட் சோனைக் கடந்து தனிப்பட்ட வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்குவதும் அவசியம்.
5. சிறிய வெற்றிகள்: பெரிய வெற்றிகளை விட தினசரி கிடைக்கும் தொடர்ச்சியான சிறிய வெற்றிகள் முக்கியம்.
6. ஓய்வு: போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுதல், திட்டங்களை தீட்டுதல், செய்யும் செயலில் கவனம் வைத்து செய்தல் போன்றவை மிகவும் முக்கியமாகும்
புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவாறு தினமும் 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி, தியானம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான செயல்களை செய்ய வேண்டும்.
இரவில் ஏழு - எட்டு மணி நேர தூக்கத்திற்குப் பின் காலையில் 5:00 மணிக்கு எழ வேண்டும். தினமும் புதிய பழக்கங்களை தொடர்வதற்கும், முன்னேற்றத்தை கண்காணிக்கவும், இலக்குகளை நிர்ணயிக்கவும் அவற்றை நாட்குறிப்பில் எழுத வேண்டும். புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.
90/ 90/ 1 விதி: தினமும் காலையில் அலுவலகம் சென்றதும் கடினமான வேலைகளை 90 நிமிடங்களில் செய்து முடித்து, பிறகு சுலபமான வேலைகளை செய்யலாம்.
இதில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள், ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவை தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாசகர்கள் கூறுகிறார்கள். என் கொள்கைகள் கடைபிடிக்க எளிமையானதாக இருக்கின்றன. தனிப்பட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் ஏற்றது என்கிறார்கள்.
மனிதர்கள் அதிகாலையில் எழுவதன் மூலம் கவனம், தெளிவு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் அவசியத்தை இந்த புத்தகம் சொல்கிறது. காலை நேரத்தில் புத்துணர்ச்சியை அனுபவிப்பதுடன், நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் தன்னைத் தானே வெற்றி கொள்வதற்கும் உயர்ந்த லட்சியங்களை அடைவதற்கும் இது வழிகாட்டுகிறது.