வெற்றியைத் தீர்மானிக்கும் உடல் மொழி: தவிர்க்க வேண்டிய 7 முக்கியத் தவறுகள்!

Body Language Mistakes to Avoid
Body Language Mistakes to AvoidCredit: AI Image
Updated on

ஒரு மனிதனின் ஆளுமையை அவன் பேசும் வார்த்தைகளை விட அவனது உடல் மொழியே முதலில் வெளிப்படுத்துகிறது. ஆனால், தெரியாமல் செய்யும் சில உடல் மொழித் தவறுகள் நம்மைப் பற்றித் தவறான பிம்பத்தை உருவாக்கிவிடும். எனவே, நேர்காணல் மற்றும் பொது இடங்களில் தவிர்க்க வேண்டிய(body-language-mistakes-to-avoid) உடல் மொழித் தவறுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பது

நண்பர்களுடன் பேசும்போது அல்லது ஒரு கூட்டத்தில் நிற்கும்போது கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கக்கூடாது. இது பிறர் சொல்வதை நீங்கள் ஏற்கத் தயாராக இல்லை என்பதையும்; தயக்கமான, பிடிவாதமான மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும். எப்போதும் கைகளைத் தளர்வாகவும் இயல்பாகவும் வைத்திருக்க வேண்டும். பிறர் சொல்வதை நீங்கள் காது கொடுத்துக் கேட்டு, அவற்றை அங்கீகரிக்கிறீர்கள் என்பதையும் இது காட்டும்.

2. கண்களைப் பார்த்துப் பேசத் தவறுவது

யாராவது உங்களிடம் பேசும்போது அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசத் தவறுவது, உங்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது அல்லது ஏதோ ஒன்றை நீங்கள் மறைக்கிறீர்கள் என்பதைப் போலப் பிறருக்கு உணர்த்தும். அதேநேரம், ஒருவரை இமைக்காமல் இடைவிடாது உற்றுப் பார்ப்பதும் அவர்களுக்கு ஒருவிதத் தயக்கத்தையும் சங்கடத்தையும் கொடுத்துவிடும். எனவே, பேசும்போது இயல்பாகவும் அவ்வப்போதும் மற்றவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையைப் பிறருக்கு அதிகப்படுத்தும். பிறர் பேசுவதை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதையும் இது அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தும்.

3. கூன் விழுந்த தோரணை

நாற்காலியில் அமரும்போதோ அல்லது நிற்கும்போதோ கூன் விழுந்து காணப்பட்டால், அது உங்களிடம் போதிய தைரியம் இல்லை என்பதையே காட்டும்; நீங்கள் இருக்கும் அந்தச் சூழலில் உங்களுக்குப் பெரிய அளவில் அக்கறை இல்லை என்பதையும் உணர்த்தும். எப்போதும் முதுகெலும்பு வளையாமல் நேராக நிமிர்ந்து நிற்பதும், நடப்பதும், அமருவதும் உங்களைச் சுறுசுறுப்பான மனிதராகக் காட்டும். இது உங்களுக்குள் இருக்கும் ஒரு அதிகாரத்தையும் விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும்.

4. தேவையற்ற அசைவுகள்

பிறரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது கால்களை ஆட்டுவது அல்லது கையில் இருக்கும் பேனாவை வைத்துக்கொண்டு எதையாவது செய்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி தலைமுடியைக் கோதுவதும் நீங்கள் ஏதோ ஒரு பதற்றத்தில் இருக்கிறீர்கள் என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டும். இத்தகைய தேவையற்ற அசைவுகள் உங்களைக் கவனிப்பவர்களின் கவனத்தைச் சிதறடித்து, உங்கள் பேச்சின் மீதான ஈர்ப்பைக் குறைத்துவிடும்.

5. தவறான கைகுலுக்கல்

ஒருவரைச் சந்திக்கும்போது நீங்கள் கொடுக்கும் கைகுலுக்கல்தான் உங்கள் ஆளுமையின் முதல் அடையாளமாக அமைகிறது. மிகத் தளர்வாகவோ அல்லது பிடிப்பின்றியோ கைகுலுக்கினால், அது உங்களுக்கு அந்தச் சந்திப்பில் ஆர்வம் இல்லை என்பதைக் காட்டும். அதேநேரம், கைகளை மிக அழுத்தமாகக் கொடுப்பதும் ஆதிக்க மனப்பான்மையையே பிறருக்குத் தெரிவிக்கும். எப்போதும் ஒரு புன்னகையோடு சரியான அழுத்தம் கொடுத்துக் கைகுலுக்கினால், அது ஒரு நல்ல நட்புறவை ஆரம்பத்திலேயே உருவாக்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
இந்த 8 ட்ரிக்ஸ் தெரிந்தால் நீங்களும் ஸ்மார்ட்தான்.. இளைஞர்களுக்கான ஸ்பெஷல் பதிவு!
Body Language Mistakes to Avoid

6. கடுகடுத்த முகம்

உங்கள் முகம் எப்போதும் கடுகடுவென இருந்தால், யாரும் உங்களிடம் வந்து பேசுவதற்குத் தயங்குவார்கள். முகத்தில் ஒரு சிறு புன்னகை இருந்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களை எளிதில் அணுகக்கூடிய நபராக நினைப்பார்கள். மிகவும் பதற்றமான சூழலில் இருந்தால், முகத்தில் இருக்கும் மெல்லிய புன்னகை உங்கள் நிதானத்தை வெளிப்படுத்தும். சிரித்த முகத்தோடு இருப்பது உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஒருவிதமான நேர்மறை எண்ணத்தைக் கொடுக்கும்.

7. நெருக்கமான நிற்றல்

ஒருவரிடம் உரையாடும்போது அவருக்கு மிக அருகில் செல்வது அவர்களை அச்சுறுத்துவது போலவோ அல்லது சங்கடப்படுத்துவது போலவோ அமைந்துவிடும். பேசும்போது குறைந்தது மூன்று முதல் நான்கு அடி இடைவெளியைப் பேணுவது மிகவும் கண்ணியமான முறையாகும். இத்தகைய இடைவெளியைப் பின்பற்றுவது, மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையாகவும் கருதப்படும்.

எனவே, இந்த 7 உடல் மொழித் தவறுகளைத் தவிர்த்துவிட்டால், எந்தவொரு இடத்திலும் உங்களால் ஒரு நல்ல மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும்.

logo
Kalki Online
kalkionline.com