
உடல் ஆரோக்கியத்தைபோல மன ஆரோக்கியமும் மிகவும் இன்றியமையாதது உடல் ஆரோக்கியத்திற்கு எளிய உடற்பயிற்சிகள் செய்வதுபோல மன ஆரோக்கியத்தை காக்க சில மனநல பழக்க வழக்கங்களை கையாள்வது மன அழுத்தத்தை போக்கி ஆரோக்கியத்தை காக்க உதவும். அந்த வகையில் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் 7 மனநல பழக்கவழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
உதாரணமாக, தினமும் நன்றியுணர்வு பயிற்சி செய்வது, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் பயிற்சிகளை மேற்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி செய்யது, போதுமான தூக்கம் பெறுவது, சமூக தொடர்புகளை பேணுதல் மற்றும் எல்லைகளை நிர்ணயித்தல் போன்றவற்றை செய்யலாம். இதன் மூலம் நீங்கள் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.
1. நன்றியுணர்வு பயிற்சி:
சிறிய விஷயங்களுக்கு கூட நன்றி செலுத்துவது நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் என்பதால் தினமும் நன்றியுள்ள விஷயங்களைப் பற்றி சிந்தித்து அல்லது எழுதி அல்லது உரியவருக்கு நேரிலோ போனிலோ நன்றி செலுத்துவது மிகவும் நல்லது . இது வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதோடு மன ஆரோக்கியத்தை காக்கிறது.
2. தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம்:
தியானம் மன அழுத்தத்தை குறைத்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தெளிவான சிந்தனைக்கு வழிவகுக்கும் என்பதால் தினமும் சிறிது நேரம் தியானம் செய்வது அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
3. உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வதால் எண்டோர்பின்கள் வெளியிடப்பட்டு மனம் சமநிலை அடைவதோடு மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆகவே தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வழக்கமான உடற்பயிற்சி செய்வது மன ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
4. போதுமான தூக்கம்:
தினசரி 8 மணி நேர தூக்கம் என்பது மனநிலையை மேம்படுத்தி அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரித்து புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதால் கண்டிப்பாக 8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.
5. சமூக தொடர்புகளை பேணுதல்:
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்வலுவான உறவுகளைப் பேணுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு தனிமை உணர்வைத் தவிர்க்கவும் உதவும். அவர்களுடன் நேரம் செலவிடுவது மற்றும் உங்கள் எண்ணங்களைப் பகிர்வது முக்கியம் என்பதால் தவறாமல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்குங்கள்.
6. எல்லைகளை நிர்ணயித்தல்:
உங்கள் நேரத்தையும் சக்தியையும் பாதுகாப்பதற்காக மற்றவர்களுக்கு 'இல்லை' என்று சொல்ல கற்றுக் கொள்வது முக்கியம். அளவுக்கு அதிகமாக வேலை செய்வது அல்லது மற்றவர்களை மகிழ்விப்பதிலேயே கவனம் செலுத்துவது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் 'இல்லை' என்பதை சொல்ல கூச்சப்படாதீர்கள்.
7. உதவி நாடுதல்:
உங்களுக்கு மனநலப் பிரச்னைகள் இருந்தால் அல்லது சமாளிக்க முடியாவிட்டால், தயங்காமல் மனநல நிபுணரின் உதவியை நாடுங்கள். ஆலோசனை மற்றும் சிகிச்சை மன ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்கூறியய 7 பழக்கவழக்கங்களை ஒருவர் கையாண்டால் அவருடைய உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.