
நமக்கு கிடைக்கும் அனுபவங்களை ஒரு சங்கிலித்தொடராக நினைத்தால் அதுதான் நம் வாழ்க்கை! அதில் நல்ல அனுபவங்களும் கிடைக்கும். மோசமான அனுபவங்களும் கிடைக்கும். இரண்டுமே நம் வாழ்வை வளமாக்க உதவுகின்றன. தவறுகளில் கிடைக்கும் அனுபவங்களே எதையும் சரியாகச்செய்ய உதவுகின்றன. புத்திசாலித்தனமாக எடுக்கும் முடிவுகள் புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க கைகொடுக்கின்றன. அனுபவங்களில் கிடைக்கும் பாடமே நம்மை பக்குவப்படுத்துகின்றன!
ஒரு நிர்வாகவியல் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. கேள்வித்தாளை பார்த்த மாணவர்களுக்கு ஆச்சரியம்! முதல் கேள்வியே வினோதமாக இருந்தது. 'நம் வகுப்பறையை தினமும் சுத்தம் செய்யும் முதிய பெண்மணியின் முழு பெயர் என்ன?' என்பதுதான் அந்த கேள்வி. மாணவர்கள் பலரும் அவரை 'பாட்டி 'என்றே அழைப்பதுண்டு. பேராசிரியர்கள் அவரை 'பெரியம்மா என்று கூப்பிடுவார்கள்.
மற்றபடி யாரும் அவரை பெயர் சொல்லி அழைத்ததாக யாருக்கும் நினைவில்லை. அதனால் அவர் பெயர் யாருக்கும் தெரியவில்லை. 'இதைப் போய் ஒரு கேள்வியாக தேர்வில் கேட்பார்கள், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் யாருமே அதற்கு பதில் எழுதவில்லை.
ஒரு மாணவன் எழுந்து, 'இந்தக் கேள்விக்கும் பதில் உண்டா சார்? என்று கேட்டான்.
"நிச்சயம் உண்டு" என்றார் பேராசிரியர்.
அதற்கான காரணத்தையும் சொன்னார். "நாம் வாழ்வில் பலரை சந்திக்கிறோம். அவர்களிடம் தகுதி பார்க்ககூடாது. ஒவ்வொருவரும் நம் அன்புக்கு அக்கறைக்கும் உரியவர்கள். அதை நாம் தருகிறோமா என்று தெரிந்துகொள்ளவே இந்தக் கேள்வி".
"வாழ்வில் எல்லோருமே முக்கியம்" என்ற நிர்வாகவியல் பாடத்தை ஒரு மதிப்பெண் இழந்து, அன்று மாணவர்கள் அனுபவத்தால் கற்றுக்கொண்டார்கள்.
நல்ல வாழ்க்கை அனுபவம் என்பது நம் முழு சக்தியையும் பயன்படுத்தி உழைப்பதில் கிடைக்கிறது .யாருமே நம்மை கவனிக்காத நேரத்திலும் சரியாக. எதையும் செய்வதில் கிடைக்கிறது. சுயநலமற்று அன்பு செய்வதில் கிடைக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் அடுத்தவர்களுக்கு செய்யும் உதவிகளில் கிடைக்கிறது.
ஒவ்வொரு நாளிலும் புது அனுபவங்கள் உங்களை நேற்று இருந்ததை விட இன்று சிறந்த மனிதராக மாற்றுகின்றன.
அனுபவங்களில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். அவை உங்களுடையதா அல்லது மற்றவருடையதா? என்பது முக்கியமில்லை. உதாரணமாக ஒருவரின் வாழ்க்கை வரலாறு உங்களுக்கு பல அனுபவங்களை வழங்கும்.
எல்லாவற்றையும் எல்லோரும் நேரடியாக அனுபவித்து கற்றுக் கொள்ள முடியாது அல்லவா? எந்த புதிய தொடக்கமும் பழையவற்றை தூக்கி எரிவதால் வருவதில்லை. பழைய அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டுபக்குவம் பெறுவதால் மட்டுமே பாடமாக நமக்கு கிடைக்கிறது!
பள்ளிப்பாடங்கள், சமையல், தொழில், மற்றவர்கள் செய்த உதவிகள், விளையாட்டு என அனைத்திலும் அனுபவப்பாடங்களால் கிடைக்கும் பக்குவமே! இதனை தெரிந்துகொண்டு வாழ்க்கையில் பக்குவம் பெறலாம்!