

பகவத் கீதை என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு உபதேசித்ததாகும். குருஷேத்திரப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்டமன குழப்பம், தடுமாற்றம் ஆகியவற்றை போக்குவதற்காகவும், அவனது கடமையை அர்ஜுனனுக்கு உணர்த்துவதற்காகவும் அவர் உபதேசித்தது
ஆனால் எந்த காலத்திற்கும் ஏற்ற வகையில் இறைவன் அனைவருக்கும் உணர்த்திய விளக்கமாகும். மனிதர்களின் மனதில் ஏற்படும் அனைத்து விதமான கேள்விகள் குழப்பங்களுக்கும் இதில் பதில் உள்ளது.
‘எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ !
நம்பிக்கையே உலகின் மிகவும் சக்தி வாய்ந்த விஷயமாக நம்மால் கருதப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவரை குணமாக்குவது, துக்கத்தில் இருப்பவரை மகிழ்ச்சியாக மாற்றுவது, தோல்வி அடைந்தவரை வளர்ச்சிக்கு கொண்டு செல்வது என இவை அனைத்துமே நம்பிக்கையால் சாத்தியப்படும். நாம் வாழ்க்கையில் என்னவாக ஆக வேண்டும் என முடிவு செய்து ‘அதுவாக நிச்சயமாக ஆவோம்’ என நம்பினால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.
‘அமைதியாக இரு!’
மனம் அமைதியாக இருப்பது நம்முடைய மன தூண்டல்களை கட்டுப்படுத்த உதவும். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது எண்ணத் தெளிவு அடைவதற்கு உதவுவதுடன் நேர்மறை எண்ணங்களை நோக்கி நம்முடைய ஆற்றல் முறையாக செலுத்த உதவும்.
‘கடமையை செய் ! பலனை எதிர்பார்க்காதே!’
என்ன செய்ய வேண்டுமோ அந்த கடமையை மட்டும் செய்யுங்கள். ஆனால் அதனால் விளையும் பலன் உங்களின் சக்திக்கு அப்பாற்பட்டது. அதனால் அந்த செயலால் ஏற்படும் பலன் பற்றியோ, அது நடப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்றோ ஒருபோதும் நினைக்காதீர்கள். ஆனால் பலன் கிடைக்கும் என அதன் மீது பற்று வைக்காமல் உங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யுங்கள்.
‘மாற்றம் என்பது இயற்கையின் விதி!’
பகவத் கீதையின் படி அனைத்தும் மாறக்கூடியது. நம்முடைய உடல் உணர்வுகள், எண்ணங்கள் உள்ளிட்ட நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் மாற்றத்திற்கு உட்பட்டது. வெற்றியாளராக இருக்க வேண்டும் என்றாலும், ஒவ்வொருவரும் புதிய சூழல்கள், மாற்றங்கள், புதிய விஷயங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த முடிவு நல்லதாகவே வரும், அதோடு புதிய வாய்ப்புகளும் வெளிப்படும்.
‘மனம் வலிமையானது !’
உங்களின் எண்ணங்களால் ஒன்று உங்களை உருவாக்க முடியும் அல்லது அழிக்க முடியும். நீங்கள் சரியாக அதை கையாண்டால் உங்களால் வெற்றி பெற முடியும்.
ஒருவேளை இது உங்களால் முடியாது என நீங்கள் நினைத்தால் நிச்சயம் நீங்கள் தோற்றுப் போவீர்கள். அதனால் மனதை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
‘உடல் அழியக்கூடியது, ஆத்மா அழிவற்றது.!’
நம்முடைய புற உடல் என்பது தற்காலிகமானது. அழியக்கூடியது. அதே சமயம் நம்முடைய ஆத்மா நிரந்தரமானது. அது அழிவற்றது. இந்த உடலை அழித்து விட முடியும். ஆத்மாவை எவராலும் அழிக்க முடியாது.
‘நிகழ்காலத்தில் வாழுங்கள்’
நிகழ்காலத்தின் முக்கியத்துவம் பற்றியும் பகவத் கீதை விளக்குகிறது. கடந்த காலம் நமக்கு பின்னால் உள்ளது. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலம் தூரமாக உள்ளது. அதற்காக தயாராக இருங்கள். நிகழ்காலம் மட்டுமே தற்போது உள்ளது. அதில் வாழுங்கள். கற்றுக்கொண்டே இருங்கள்.
‘அறிவு மற்றும் ஞானத்தை பெற வேண்டியதன் அவசியம்’ குறித்தும் பகவத் கீதை விளக்குகிறது.
நாம் ஒவ்வொரு செயலிலிருந்தும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் வாழ்க்கை முழுவதும் இதை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் கீதை வலியுறுத்துகிறது.
இன்றைய நவீன உலகில் பெற்ற தகவல்களை செயல்படுத்துவது எளிதானது அல்ல அதை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சிக்கான அறிவாக பயன்படுத்துவது அவசியமானது.