
சிறுவயதாக இருக்கும்போது என் தோழி ஒரு சினிமா பார்த்துவிட்டு வந்து அதில் வந்த கதாநாயகி வெள்ளை கோட்டு அணிந்திருந்ததை பார்த்துவிட்டு நானும் வயது வந்ததும் இதுபோல் படித்து கோட் அணிந்துகொண்டு டாக்டராகி எல்லோருக்கும் உதவி புரிவேன் என்று கூறினாள். அப்போதிலிருந்து யார் எதை பேசினாலும் நான் டாக்டர் டாக்டர் என்றுதான் கூறுவாள். அதே மாதிரி டாக்டராகி நல்ல மருத்துவம் பார்க்க ஆரம்பித்தாள். இதுதான் இலட்சியம் என்பது.
ஒரு மனிதனுக்கு அறிவு விருத்தி பெறத்தொடங்கியதும் அவன் வாழ்க்கையில் லட்சியமும் இடம்பெற்றாக வேண்டும். இல்லை எனில் கடையாணி இல்லாத தேர் போன்று அவனது வாழ்க்கை பாதியிலேயே திசை மாறிவிட வாய்ப்பு உண்டு. எந்த ஒரு லட்சியமும் தனக்குப் பிடித்ததாக, மற்றோருக்கு உதவும் கரமுடையதாக இருந்தால் அதனால் அவன் வாழும் தெரு, சமூகம், சமுதாயம் என்று அனைத்துமே உதவி பெறும். ஆதனால் அவனுக்கும் புகழ் கிடைக்கும். வருவாய் கிடைக்கும். நற்பெயர் உண்டாகும்.
கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கை நடத்த நினைப்பவர்களால் கிழக்கைக் கிழித்துக்கொண்டு கீர்த்தி பெற இயலாது என்பது பழமொழி. யாராக இருந்தாலும் சின்னஞ்சிறு வயதிலேயே தம்மைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை அவராகவே செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்தத்துறை நமக்கு ஏற்றது. எதில் கவனம் செலுத்தினால் நம்மால் சாதித்துக்காட்ட இயலும். எதைத் தேர்வு செய்தால் எதிர்காலத்தில் பலரையும் இயங்க வைக்க முடியும் என்ற வினாக்களுக்கு ஒவ்வொருவரும் விடை காணவேண்டும். விடை கிடைத்ததும் அந்தத் திசை நோக்கி தம் வாழ்க்கைப் படகை செலுத்த வேண்டும்.
இறுதி வெற்றி பெறும்வரை எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் ஓய்வதில்லை என்ற லட்சிய வெறி அவரவர்க்குள்ளும் புகைந்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் வாழ்க்கையில் வெற்றி காண இயலும்.
சாக்ரடீஸ், புத்தர், காந்தி போன்ற மகான்களாக விரும்பமா? காமராஜர், அண்ணா, ராஜாஜி போன்ற அரசியல் மேதைகளாக எண்ணமா? டால்ஸ்டாய், போன்று பெரிய எழுத்தாளராக எண்ணமா? பாரதி, தாகூர், மில்டன் போன்ற கவிதை புனைய பிரியமா? இன்னும் எத்தனையோ துறைகளில் வெற்றி பெற்ற பெரியோர்கள் இவ்வுலக வரலாற்றில் நிலை நின்று இருக்கின்றனர்.
அவர்களில் யாரை நாம் பின்பற்ற நினைக்கிறோமோ, அவர்களின் உருவங்களை திருக்கோவிலாக செய்து, எப்பொழுதும் அவர்களுடைய எண்ணங்கள் நம் உள்ளத்தில் நிலை பெறுமாறு செய்து, அவர்கள் எந்தெந்த கொள்கைகளை பின்பற்றி, படித்து மேன்மையுற்று மேலே வரத் தொடங்கினார்களோ, அவ்வளவையும் நாமும் தெரிந்துகொண்டு வழி சென்றால் அவர்களைப் போலவே அச்சு அசலாக மிளிர முடியாவிட்டாலும், நம் எண்ணம் ஈடேறி, நம் வழியில் நாம் வெற்றி நடைபோடலாம்.
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல "நீ எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கான ஆசிரியர் உன்னைத்தேடி வருவார்" என்று கூறியுள்ளார். அதுபோல் நம் லட்சியத்தில் குறியாக இருந்தால் எல்லா இடைஞ்சல்களும் விலகி நம்மை வழி நடத்தும் என்பது உறுதி.