
சில ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தினத்தன்று தொலைக் காட்சியில் இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. முதலாவது தூர்தர்ஷன் நிகழ்ச்சி. அதில் அன்றைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பள்ளிக் குழந்தைகளுடன் பேசினார். நிகழ்ச்சியின் இறுதியில் அந்தக் குழந்தைகள் அவரிடம் சில கேள்விகள் கேட்டுப் பதில்கள் பெற்றார்.
ஒரு சிறுவன் கேட்டான்: 'நாங்களும் ஒரு அப்துல்கலாம் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர் இயல்பாக மற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிய அதே விதமாகப் பதில் சொன்னார். ஒரு கனவு இருக்க வேண்டும். என்ன ஆகவேண்டும் என்ற கனவு (இடையே, நின்று கொண்டேயிருந்த அந்தச் சிறுவனிடம் கேட்கிறார்; உன் கனவு என்ன அவன் சொல்லுகிறான் 'ஒரு ஏரோனேட்டிக் எஞ்சினியர் ஆக வேண்டும்.) அடுத்து குடியரசுத் தலைவர் சொல்லுகிறார். அப்படி ஒரு கனவு ஏற்படுத்திக் கொண்டதும், வேறு எதிலும் கவனம் சிதறாமல் அதன் மீதே இருக்க வேண்டும். மூன்றாவது, அந்தக் கனவுக்காக வேர்வை சிந்தி உழைக்க வேண்டும் என்றார்.
அதே சுதந்திர தினத்தன்று இன்னொரு நிகழ்ச்சி. நடிகர் விக்ரம் கலந்துகொண்ட ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி. அவரும், நடிகர் இயக்குனர் சிம்புவும் விருந்தினர்களாக இருந்தார்கள்.
அனுஹாசன் பேட்டி எடுத்தார். நிகழ்ச்சியில் இருந்து இரண்டு தகவல்கள், செய்திகள் கிடைத்தது.
ஒன்று விக்ரம் ஒரு மிகப்பெரிய விபத்தில் மாட்டி, அதன் பொருட்டு இரண்டு கிளட்சுகளின் உதவியுடன் மட்டுமே நடக்கக்கூடிய நிலையில் 4 வருடங்கள் இருந்திருக்கிறார். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்திருக்கிறார்.
இரண்டாவது, அவர் தற்போது தமிழ்த் திரையுலகில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதற்கு முன் அவர் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பல சின்னச் சின்ன வேடங்கள் செய்து, என்னென்னவோ முயன்றிருக்கிறார். ஆனால், மேலே வர முடியவில்லை. இருந்தும் மனம் தளராத முயற்சிகள்.
அதையெல்லாம்விட எல்லோரையும் கவர்ந்த செய்தி அவருடைய நம்பிக்கைகள் பற்றியது. அவர் சொல்கிறார். அவர் அப்படி விபத்துக்குள்ளாகி, மருத்துவமனையில் படுத்திருக்கும்பொழுது அவரைச் சந்தித்த ஒரு பெண்மணியிடம் (அவரைப் பின்பு மணந்து கொண்டவர்) தன் வருங்காலம் பற்றிக் கூறியது.
விக்ரம் அப்போதே, மிகத் தெளிவாக, மிகுந்த நம்பிக்கையுடன் உறுதியாகச் சொல்லியிருக்கிறார். தான் வருங்காலத்தில் பெரிய வீடுகள், ஸ்போர்ட்ஸ் கார்கள் உட்பட பல கார்கள் முதலியன வாங்கியிருப்பேன். பெரிய ஸ்டார் ஆக ஆகியிருப்பேன் என்று. அவர் அப்படிச் சொல்லிய தினத்தில் அவருடைய நிலைமையே வேறு. ஆனால் அவர் தீர்மானமாக நம்பியிருக்கிறார். பின்னால் ஜெயித்தும் இருக்கிறார். தெளிவான கனவுடன், ஆழமான நம்பிக்கைகளுடனும் இருந்திருக்கிறார். நினைத்ததைச் சாதித்தும்விட்டார்.
முன்னேற விரும்புகிறவர்களுக்கான அற்புதமான செய்திகள். என்ன ஆகவேண்டும் என்கிற தெளிவான கனவு வேண்டும். கவனச் சிதறல் கூடாது. கனவை அடைய உழைப்பு அவசியம் என்று வலியுறுத்தும் அப்துல் கலாம் அவர்கள்; மிகச் சாதாரண நிலையில் இருக்கும் பொழுதும், அடிபட்டுக் கிடக்கும் பொழுதும், வாழ்க்கை பற்றிய நம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் முயற்சி எடுத்து, மிகப் பெரிய வெற்றி பெற்ற விக்ரம் அவர்கள். இவர்கள் பாதை முன்னேற்றம் அடைய நிச்சய வழிகள் இருந்திருக்கின்றன.
உதாரணங்கள் மாறலாம். ஆனால், வழிமுறையில் மாற்றமில்லை.