ஒரு முறை ஆபிரகாம் லிங்கன் சென்று கொண்டிருந்த வழியில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. கட்டிடத்தின் மேல் பகுதிக்கு ஒரு பெரிய கட்டையை ஏற்ற வேண்டியிருந்தது. அங்கிருந்த மேலாளர் அவருக்கு கீழே வேலை செய்த ஒன்பது பேரையும் கத்தி சத்தம் போட்டு அக்கட்டையை மேலே ஏற்றுமாறு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அந்த ஒன்பது பேரும் எவ்வளவோ முயன்றும் கட்டையை கட்டடத்தின் மேல் பகுதிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. லிங்கன் இதைப் பார்த்தார். இன்னும் ஒருவர் உதவி செய்தால் அக்கட்டையை கட்டடத்தின் மேல் பகுதியைச் சென்றடைந்து விடும் என்று தெரிந்து கொண்டார். அந்த மேலாளர் உதவுவதாக தெரியவில்லை. எனவே லிங்கன் அங்கு சென்று ஒன்பது பேருடன் பத்தாவது ஆளாக சேர்ந்து கொண்டு, கட்டையை மேல் பகுதிக்கு கொண்டு சேர்த்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு நன்றி கூறி அவர் யார் என்று கேட்டனர். லிங்கன் அவர்களிடம் ஏதேனும் உதவி தேவை என்றால் குடியரசு மாளிகைக்கு சொல்லி அனுப்புங்கள் நான் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் என்றார்.
அமெரிக்காவில் ரஷ்ய தூதுவரை ஆபிரகாம் லிங்கன் சந்தித்தார். அப்போது அந்த ரஷ்யத் தூதுவரை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்: "அன்பரே நான் இந்த அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவனாக இல்லாதிருப்பேயானால் என்னை நீங்கள் எவ்வாறு மதிப்பீர்கள்?" அதற்கு கிண்டலுக்கு பேர் போன அந்த ரஷ்ய தூதுவர் "உங்களை ஒரு கம்பமாக மதிப்பேன்" என்று கூறி ஆபிரகாம் லிங்கன் குச்சி போன்ற தோற்றத்தை எள்ளி நகையாடினார். ஆனால் லிங்கனோ கொஞ்சம் கூட வருந்தாமல், "அதாவது உங்களுடைய தேசியக்கொடி பறக்கும் வணக்கத்திற்குரிய கொடி கம்பமாக மதிப்பீர்கள் இல்லையா?" என்று போட்டாரே ஒரு போடு.
ஆபிரகாம் லிங்கன் சாதாரண செருப்பு தைக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். தனது தந்தையோடு குடும்பத்தொழினைச் செய்து வந்தவர். தனது பட்டப்படிப்பிற்கான புத்தகம் வாங்க மூன்று நாட்கள் ஏர் உழுது சம்பாதித்தவர். சட்ட கல்வி பயின்றவர்.
அரசியலில் பல்வேறு தோல்விகளை கண்டு பல தடைகளை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
தனது பதவியேற்பில் சொற்பொழிவு நிகழ்த்திய போது எதிர் கட்சிக்காரர் இவரை அவமதிக்கும் எண்ணத்துடன் "மிஸ்டர் லிங்கன், இதோ நான் காலில் அணிந்திருக்கும் காலணிகள் உங்கள் தந்தையார் தைத்துக் கொடுத்தவை தெரியுமா?" என ஏளனமாக கேட்டார்.
அவர் சொன்னதை கேட்டு பலரும் சிரித்தனர். ஆனால் ஆபிரகாம் லிங்கன் கோபப்படாமல், கண்ணீர் பெருக்குடன், "ஐயா! இந்த நேரத்தில் என் தந்தையை நினைவு கூறினீர்கள். அதற்கு மிக்க நன்றி. நானும் செருப்பு தைக்கும் தொழிலில் வல்லவன் தான். என் தந்தையிடம் தொழிலை பயின்று இருக்கிறேன். உங்கள் காலணியில் ஏதேனும் குறை இருந்தால் என்னிடம் தாருங்கள், உடனே செய்து தருகிறேன்" என்று சொன்னாராம்.
(அறிவுக்கு விருந்தாகும் அறிஞர்கள் வாழ்க்கை என்ற நூலில் இருந்து தொகுப்பு)