
ஒரு டாக்டர் இருந்தார். அவர் நல்லது செய்யவேண்டும் என்பதற்காக டாக்டர் படிப்பு படித்தார். அவரிடம் ஒரு நோயாளியை அழைத்து வந்தார்கள். இரண்டு நிமிடம் கவனிக்கவில்லையென்றால் அவர் உயிர் போய்விடும் என்ற நிலையில் அவரை அழைத்து வந்தார்கள்.
இந்த டாக்டர் அவருக்கு என்ன சிகிச்சை தேவை என்பதை அறிந்து அதைச் செய்தார். அவர் ஒரு வாரத்தில் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் வேறு எந்த டாக்டரிடம் போனாலும் இறந்திருப்பார். அவருக்குத் தக்க சிகிச்சை கொடுத்ததால் உயிர் பிழைத்தார் என்றார்கள்.
அடுத்த நாள் வேறொரு நோயாளியை அவரிடம் அழைத்து வந்தார்கள். அவருக்கு சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டார். இப்போது டாக்டர் என்ன பதில் சொல்வார்?. நோயாளியின் தலைவிதி, தாமதமாக அழைத்து வந்துவிட்டார்கள், என்று ஏதோ ஒரு விதத்தில் தட்டிக் கழிப்பார்.
நீங்கள் எதையோ இப்படி நடக்க வேண்டுமென்று நினைத்தீர்கள். அது அப்படி நடந்துவிட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு. அப்படி நடக்கவில்லை என்றால் அதை யார் மேல் தட்டிக்கழிக்கலாம் என்று தேட ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் தேர்வு எழுதினீர்கள். மிக நன்றாக எழுயிருந்தீர்களானால் " பிரமாதமாக எழுதினேன்" என்பீர்கள். சரியாக எழுதவில்லை யென்றால் நேரமே போதவில்லை, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் வந்துவிட்டன என்று பல காரணங்கள் தேடுவீர்கள். வெற்றிக்கு உடனடியாக உரிமை கொண்டாடி பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் நாம் தவறு நடந்துவிட்டால் அதற்கு யாரைப் பொறுப்பாக்கலாம் என்று மனம் அலைபாய்கிறது.
நீங்கள் நினைத்தாற்போல் நடக்கவிவ்லை என்பதற்கு நீங்கள் பொறுப்பல்ல என்றால், அதை எப்படி நடத்துவது என்ற திறனை நீங்கள் எப்படி சம்பாதிக்க முடியும்?. உங்கள் திறமைக்கு நீங்கள் பொறுப்பு என்றால் திறமையின் மைக்கும் நீங்கள்தானே பொறுப்பு.
இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு என்று நீங்கள் தயாராக இல்லாவிட்டால், நாளை எப்படி இருக்கவேண்டும் என்பதை உங்களால் உருவாக்க முடியுமா?. உங்களின் இன்றைய நிலைக்கு நீங்கள் முழு பொறுப்பு என்றால்தான் நாளை எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணும் உரிமை உங்களுக்கு உண்டு.
உங்கள் வாழ்க்கைச் சூழல் எதுவாக இருந்தாலும் மேன்மையாகவோ, அழகாகவோ, மோசமாகவோ எப்படி இருந்தாலும் சரி அதற்கு நீங்கதான் முழு பொறுப்பு. உங்கள் பதில் ஆமாம் நான்தான் என்றால் வெற்றிப் பாதையில் நீங்கள் அடி எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.